கனவுகளின் எல்லைக்கோர் மடல் – ஆர்த்திகன்

உங்கள் கவித்துவத்தின் ஆற்றலோடு ‘கனவுகளின் எல்லை’யில் உங்கள் உணர்வுகளைப் புரிந்து

கொள்ள முயல்கையில் முளைவிட்ட எண்ணம் உங்களுக்கு மடல் எழுத வேண்டும் என்பது. எழுத எண்ணிய

ஒவ்வொரு பொழுதும் பேனா தடுக்கியது. இப்போதேதோ காலம் பலித்தது.

உங்களின் கவிதைகள் பார்த்து வியந்த காலம் ஒன்றுண்டு. அந்த வியப்பை விஞ்சி இன்று

இன்னொரு வியப்பு கவிதைகள் குறித்தல்ல அந்தக்கவிதைகளின் தொகுப்பு குறித்து நீலப்

பின்னணியில் அமைந்த அட்டைப்படமும் அதற்குள் அடங்கிய கவிதைகளின் தொகுப்பும், இறுதி

அட்டையில் மிகச்சுருக்கமாய் உங்களையும், உங்கள் ஆற்றலையும் சேரும் புகழ்

பெருமையையெல்லாம் தெய்வத்திடமே ஒப்புவித்துவிட்ட மனப்பக்குவமும் எந்த நூல்களிலிருந்தும்

‘கனவுகளின் எல்லை’யை வேறுபடுத்திக் காட்டுகிறது. உள்ளேயும் நேர்த்தியாய்

தரம்பிரிக்கப்பட்ட கவிதைகள் கவிமூலத்தில் தொடங்கி தமிழுக்கும் கவிதைக்கும் சில பக்கம் ஒதுக்கி

நல்லூருக்கு இன்னும் சில பக்கங்கள் கொடுத்து இசைக்கும், மழைக்கும், காலைக்கும், போருக்கும்

பகுதிபகுதியாய்ப் பக்கங்கள் ஒதுக்கிப்பின் காதலுக்கும், வாழ்வியலுக்கும் கவிச்சிந்து

சுரந்து, காலத்துக்கு உரைத்து கடவுளுக்குப் பணிந்து அற்புதமாய் முழுமையாய் அந்த நூலை நிறைவு

செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் இந்தப் பாராட்டுக்கள் இல்லாது போனாலும் கூட உங்கள்

கவிதைகள் ஒன்றும் குறைந்து போய்விடாது. ஏன்றாலும் உங்களைப் பாராட்டுவதால் என்

பேனாவுக்கு ஆறுதல் கிடைக்கிறதாம்!

‘என் கவிதை அழுகுரல்கள் என்றா சொன்னாய்…?’ இப்படி ஒரு வரி உங்கள் கவிதையொன்றில்

வருகிறது. அந்தவரியும் அந்தக்கவிதையும் நிச்சயமாய் சிலருக்கு நல்ல சாட்டையடியாய் அமையும்

என எண்ணுகிறேன். ஏனென்றால் யாழ்ப்பாணத்துப் படைப்புக்களை எவரும் புலம்பல்கள் தான் என

வெளியிலிருந்து சொல்லப்படுகிறதாம். அதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தகுந்த பதில்

சொல்ல முடியாமலும் என் மனம் தவித்தது. உங்கள் கவிதை அதற்கான பதிலை மிகச் சரியாகத்

தீட்டியிருக்கின்றது.

நான் அறிந்த கலைஞர்களில் என்னால் உண்மையானவர்களென்றும் நேர்மையானவர்களென்றும்

நம்பப்பட்டவர்கள் உள்ளே போலியான வாழ்வை வாழ்வது கொண்டிருப்பது கண்டு சிலவேளைகளில்

அதிர்ந்திருக்கிறேன். அப்படி போலியானவர்கள் எதற்காக நல்ல வேடம் போடுகிறார்கள்

என்று சில வேளைகளில் ஏற்படும் ஆதங்கத்தினால் எல்லோரது கலைப்படைப்புக் களையுமே

கொஞ்சம் சந்தேக நோக்கில் பார்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் அப்;படிப் பார்த்ததில்

அதீத மிகைப்படுத்தலில் வருபவை போலிகளாய்ப் படுவதுண்டு. அவற்றினால்

ஏமாற்றப்படுவோரும் சமூகத்திலுண்டு. ஆனால் அந்தக் கண்ணோட்டத்தில் கூட உங்கள் கவிதைகள்

எனது குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொண்டன.

மிக எளிமையும் இனிமையும், ஆழமும் கொண்ட மரபு சார்ந்த, சாராத உங்கள் கவிதை நடையில்

நிச்சயமாய் ஒரு சத்தியத்தன்மை தெரிகிறது. அது ஒன்றே உங்கள் கவிதையின் கனதியை இன்னும் ஒரு

படி உயர்த்தியிருக்கிறது. ( முதல்படிகள் உங்கள் வார்த்தைப்படி, உங்கள் நல்லை முருகன்

பணி ) உளமார அந்த ‘இறையை நெஞ்சிலிருத்திய, மனதிலிருந்து பிரவகிக்கும் கவிதைகளில்

சத்தியத்தின் ஒளி சற்று அதிகப்படி என்ன அப்படித்தானே…? (அல்லாவிட்டால் இங்கும் நான்

ஏமாந்து விட்டேனா..?) அந்த உண்மை என்றும் உங்கள் கவிதைகளில் நின்று நிலைக்கவேண்டும்.

என்பதே என விருப்பம்.

அடுத்து முன்பு போலவே உங்கள் ஆக்கங்களை வாராவாரம் காணவேண்டும் என்கிற அவா நிறைய

இருக்கின்றது. அதற்கான தடையும் நீங்கும் போலிருக்கிறது. (சஞ்சீவி வருகிறதாமே) முன்பு

மரங்களைப் பற்றியெல்லாம் அதிகம் நீங்கள் எழுதி பத்திரிகையில் வந்ததாய் ஒரு ஞாபகம்

இருக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டையும் இந்தத்தொகுப்பில் சேர்ந்திருக்கலாம். பிரிந்து

போன கிராமங்கள் பற்றிய கவிதைகள் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. ‘என்று புதுவடலி

எழும்’. ஏன்று நாமும் தான் காத்திருக்கின்றோம். ‘மீண்டும் போர்தொடங்கப்

போகிறது’. பேச்சுவார்த்தை சமாதானம் பற்றிய ஒவ்வொரு செய்திகளை அறியும் போதும்

உள்ளுக்குள் வேதனைப்படுத்திக்கொண்டு நிற்கிறது. அந்தக்கவிதை மட்டும் உண்மையாகிப் போய்

விடக்கூடாது. என எண்ணம் ஏங்குறது.. ‘ நல்லூர்’ மணியின் அருளும், இசையும் கவிதையில்

அப்படியே பிரதிபலிக்கிறது. அப்படியிருக்க நல்லூரை விட்டு எப்படி போவீர்கள்….

உங்களின் சின்னக் கவிதைகள் சில அற்புதமாய் வந்திருக்கின்றன. ‘உவமை’ ‘உயிரில் இட்ட

கோலம்’ மனதைத் தொட்டன. ‘திருப்தி’ பிடித்திருக்கிறது. ஆனால் ‘வியப்பை’ த்தான் புரிந்து

கொள்ள முடியவில்லை நிலவைவிட அவள் விழிகள் ஒளி கூடியவை என்றால் நம்பத்தகுந்ததாய் இல்லை.

அதை விடுங்கள் அவள் உங்களவள், நீங்கள் அவனை எப்படியாவது எழுதிவிட்டுப்போங்கள். ஆனால்

‘இளமையெனும் காட்டாற்றில் உங்களைத் தவிக்க விட்டுச்…’ சிரித்த அவள்மேல் எனக்கென்றால்

கோபம் தான் வருகிறது. போகட்டும் நீங்களே உங்கள் கனவுகளே திண்ம இரும்பொன்று சொன்ன

பிறகு அதை என்னால் எப்படி உடைக்க முடியும். அவள் பாவம், பிழைத்து போகட்டும்.

நிற்க, இன்று பொங்கல் கவியரங்கில் நீண்ட நெடுநாட்களின் பின் உங்கள் குரல் நெஞ்சைத்

தொட்டது. மீண்டும் கவியரங்கக் காலம் களைகட்டி உங்கள் குரலிலேயே கவிதைகள் கேட்க ஆசை.

இனி எழுதுவதற்குப் பேனா கொஞ்சம் சிரமம் என்கிறது. தாளும் முடிந்து போவேன் என்று

நெருக்கடி செல்கிறது. இருந்தாலும் இனி எழுதின் மிகைப்படுத்தலில் என் எழுத்தும் உண்மையொளி

குன்றிப் போம். எனவே கதைமுடிக்கும் வேளையில் மீண்டும் வாழ்த்துக்கள் இன்றும் இனிய (வலிய)

கவிதைகளை இலக்கிய உலகத்திற்தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

Leave a Reply