ஆயிரம் பிறைகண்ட பெருமகர்,
ஆழ்ந்தபுலமையின் அடி-முடி தேர்ந்தவர்,
வாழ்ந்து…சைவம் தமிழை வளர்த்தவர்,
மரபுக் கல்வியின் செழுமை விழுதிவர்,
காரைமண் பெற்ற கண்ணியர், பண்பாடு
கல்வி கருணையில் நிகரற்ற வேதியர்,
காண எளியர், ‘வைதீஸ்வரர்’…நூறாண்டு
கடக்குமுன் தமிழ் கலங்க…மறைந்தவர்.
ஈழச் சிதம்பர பிரதம குரு…மகன்.
இளமையில் கல்வி கேள்வியில் தேர்ந்தவர்.
தேன்தமிழ் சமஸ்கிருதம் தெளிந்து…பின்
சிறந்த ஆசிரியராயும் மிளிர்ந்தவர்.
‘காரைநகர் மணிவாசக சபையதன்’
ஸ்தாபகர்! அதில் ‘திருவாசகவிழா’
தோன்ற வைத்தவர்! ‘காரைநகர்த் தமிழ்
வளர்ச்சிக் கழகத்தை’ நிறுவித் தொடர்ந்தவர்.
‘ஈழச் சிதம்பரப் புராணச் சுருக்கம்’ பின்
‘காரைநகர் சைவ சமய வளர்ச்சி’ நூல்
ஆம் ‘தொடர் மொழிக்கு ஒருசொல்’ மற்றும்
‘மாணவர் தமிழ்ப் பயிற்சிக்காய் நூல்வகை’
யாத்தவர்! சைவத் தமிழிதழ்கள் பல
மலர ‘ஆசிரிய ராயும்’ ஒளிர்ந்தவர்.
நூல் சிலதைப் பதிப்பித்தும் மீட்டவர்.
நடமாடும் ‘கலைக் களஞ்சியம்’ தான் அவர்.
‘சிவத்தமிழ்ச் செல்வி’ என்றபுகழ்ப ;பட்டம்
சேர்ப்பித்தார்…துர்க்கா துரந்தரி அன்னைக்கே!
தவக் குருக்களின் புகழ் உணர்ந்தோர்களோ…
‘மூதறிஞர்’ பெரும் ‘கௌரவக் கலாநிதி’
‘சிவத்தமிழ் வித்தகர்’என வாழ்த்தினர்.
‘சிவப் பழமாய்க்’கனிந்து பயன் தந்து
எவர்க்கும் இனியராய் வாழ்ந்த வைதீஸ்வரர்
இல்லை இன்று: அவர் பெருமைகள் போற்றுவோம்!