செல்வங்கள் திரண்டு வந்து
சேர்ந்த‘தாய்’.. உருவம்: கேட்போர்க்-
கில்லையென் னாத ‘கர்ண’
இருதயம்: தந்தை சேர்த்த
செல்வத்தைச் செழிக்க வைக்க
தினஞ் சவால் வென்ற ஈர
நல்லுளம்…இவைதான் எங்கள்
‘E.S.P’ நாக ரத்னம்!
அனுபவம் ஆசான் ஆக,
பட்டறிவு இடரை ஓட்ட,
கணம் சோரா முயற்சி ‘பட்டக்’
கல்விபோல் உயர்த்த, நேர்த்தி…
வினைத்திறன்…நிர்வாகத்தில்
விளைதிறன்… குவித்துக், கேட்போர்
கனவினை – நனவாய் மாற்றும்
‘கல்விக் காருண்யன்’ நீர்தான்!
தொழிற்பணி, சமூக நேசம்,
தொடர் அற சமய சேவை,
விளையாட்டு கல்வி காக்க
விரைந்திடல், காரை மண்ணின்
வளர்ச்சியில் எடுக்கும் பங்கு,
இவைதாண்டி…நிமிர்ந்து இன்று
எழில் ‘மணி விழா’வும் காணும்
‘E.S.P’ வாழி…வாழி!
கொடை வள்ளலில் தலைவர்.
விழுதாடிடும் மரமாமென மிகுசெல்வமும் பொலிய
வினையோடதை பரிபாலனம் செயும் மாபெரும் நிபுணர்!
முழுதாய் அறவழி தேடிய முதலைப் பல வழியில்
முறையாய் நிதம் தருமம் செய்து முயன்றோங்கிய முதல்வர்!
கொடை என்பது ஒருகைகொடுப் பதைமற் றைய கை அறியாக்
குணம் கொண்டது; கொடுக்கும் பெருமனங் கொண்டது: அறிவோம்!
கொடை வல்லவர் சிலர்; ‘E.S.P’ கொடை வள்ளலில் தலைவர்.
கொடுத்தால் குவிந்திடும் செல்வமென் பதற்கு உதாரண புருஷர்.
கலை, கல்வி, நல் விளையாட்டு, உடல் உயிர் காத்திடுபவர்க்கு
கருணை புரிந்திடும் மேன்மகன்! தமிழ் சைவமும் மிளிர்ந்து
ஒளிர்ந்தோங்கவும் திரு நல்குவோன்! வறுமை தனில் நலிந்து
உயிர் வாடுவோர்க்கிவர் நன்மழை… உரைப்பேன் கண்டுணர்ந்து!
திரு ஆழ்பவர், தொழில் ஆழ்பவர், திறம் இல்லறம் ஒழுகி
சிறப்பாய் அறுபது ஆண்டுகள் நிமிர்ந்தார் நிதம் உதவி!
அற வாழ்க்கையின் பயனாய் இன்னும் செழிப்பார் பொருள் பெருகி.
அவரின் புகழ் உயர்ந்தோங்க என் அகம் வாழ்த்திடும் உருகி!
வள்ளலே உமைப் போற்றினோம்.
காரை மண்ணதன் மேன்மை சொல்லிட
கண்முன் தோன்றிய கர்ணனாய்,
கட்டிக்காத்து நற்செல்வம் சேர்த்து…ஊர்க்
காய்…வழங்கிடும் மன்னனாய்,
வாழும் ‘E.S.P’ நாக இரத்தின
வள்ளலே உமைப் போற்றினோம்!
வானம்போல் பரந்துள்ள நும்புகழ்
வளர்க மென்மேலும்… நேர்கிறோம்!
கோடி கோடி குவிந்த போதும்
கொடுக்க முன்வரா ஏழைகள்
கூடும் பூமியில்…கொள்கை யாகக்
கொடுத்த கல்வியின் காருண்யன்!
தேடி வந்தவர்க் கீந்து…அவர்மனம்
தேம்பி வாழ்த்தச் செழித்தவர்,
தீரர் E.S.P . நன்மணி விழா
சிறக்க வாழ்த்தினோம்…வாழ்கநீர்!