ஆராரோ ஆரிரரோ

‘ஆராரோ ஆரிரரோ’ – ஒரு பருந்துப் பார்வை                                       த.ஜெயசீலன்

தென்பொலிகை குமாரதீபனின் முதலாவது கவிதை தொகுதியானது ‘ஆராரோ ஆரிரரோ –மனிதம் விளையும் தாலாட்டு’ வெளியாகியிருக்கிறது. இவர் தனது பல்கலைக்கழக காலத்தில் எழுதிய அனேகம் கவிதைகளுடன் இன்றுவரை அவர் எழுதியுள்ளவையுமான சுமார் 36 கவிதைகளை இதில் தொகுத்துள்ளார்.
கவிதை பற்றிய பல்வேறு விதமான பார்வைகள், கருத்தியல்கள், விமர்சனங்கள், வெளிவந்தகொண்டிருக்கும் இக்காலத்தில் இதுதான் முடிந்த முடிவு என கவிதை பற்றி எவருமே முடிவுசெய்யாதவிடத்தும் கவிதை பற்றிய வௌ;வேறு கண்ணோட்டங்கள், பார்வைகள், அணுகுமுறைகள் வௌ;வேறு தரப்பினாலும், வௌ;வேறு இலக்கிய குழுக்களாலும், குழுமங்களாலும் முன்னெடுக்கப் படும் சமகாலத்தில் குமாரதீபனின் சுமார் 20 வருடகால படைப்புக்கள் இத்தொகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
இக்கவிதைகள் பெரும்பாலானவை மரபுக் கவிதை வடிவங்களைச் சாராத புதுக்கவிதைகளின் இடைப்பட்ட காலப் பண்புகளைப் பெரிதும் ஒத்தவையாகவும், பல்வேறு விடயங்களை பல்வேறு கோணங்களினூடாக பெரும்பாலும் நேர்த்தன்மையுடன் நோக்குபவையாகவும், இன்றைய பின்னவீனத்துவ அடிப்படையிலான சொல்முறை உத்தி இருண்மை போன்ற பண்புகளைக் கொண்ட நவீன கவிதைகளிலிருந்து வேறுபட்ட எளிமையான, இலகுவில் விளங்கக் கூடிய யதார்த்தபூர்வமான சொற்பிரயோகங்களையும், சமூகத்தின் தேசத்தின் மக்களின் இன்னோரன்ன பிரச்சனைகளை அலசுபவையாகவும், பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், என்பவற்றில் மட்டுமன்றி வானொலிகளில் வாசிக்கப்பட்டவையாகவும் விளங்ககின்றன.
தொகுதியின் பலகவிதைகளில், பல இடங்களில் கவித்துவமான பல தருணங்களை கவிக்கூறுகளை தரிசிக்க முடிவதுடன் இக்கவிதைகளின் பேசுபொருள் ‘இன்னதுதான் கவியெழுத ஏற்றபொருள்’ என்ற வரையறைகளை உடைத்து அப்பாற் செல்லுகின்ற, பரந்துபட்ட எல்லைகளை நோக்கி சிறகு விரிப்பனவாக அமைந்துள்ளன.

ஆழ்ந்த நம்பிக்கை வீழ்ந்து வெம்ப
படைப்பதோ காப்பதோ
அழிப்பதோ சரி
அருளாமல் மறைவது
ஏன்தானோ இறைவா? என ‘இருப்பின் மௌனம்’ எனும் முதற்கவிதையிலேயே பாரதூரமான கேள்வியுடன் ஆரம்பிக்கிறார்.
தமிழுக்கான ‘தாலாட்டில்’
சேராத சேர்க்கையினால்
சோராதே நம்முயிரே…என்று எச்சரித்து
………………….
யாரென்ன செய்தாலும்
ஆரமுதே நீ அழியாய்… என்று ஆசுவாசங் கொள்கின்றார்.

…என்னை ஏன்
உன்னைப்போல்
வாழத் திணிக்கிறாய்?
உனக்காக நான்
சுவாசிக்க முடியாது... என்று முகத்தில் அறைகிறார் ‘நமதுகள்‘; எனும் கவிதையில்.
மேலும்

நான் நானாக நீ நீயாக
மீளும் வாழ்க்கை
வடக்கின் வசந்தமாய்
தெற்கின் தென்றலாய்
திசைவெளிப் பிரவாகமாக
பூபாளிக்க
தனித்துவ இருப்பில்

தடைகள் தகரும்… என உள்ள10ர் அரசியலில் ஆழங்காட்டுகிறார்.
இவரின் ‘அறுவடை காலத்து மழை‘ தொகுதியிலுள்ள முக்கியமான அவரின் தனித்தன்மைக்குச் சான்றான கவிதையென்பேன்.

துப்பாக்கிகள் துப்பும் எரிமலைகள்
எயிட்ஸ் கிருமிகளாய் விளைந்து
இருள் கடலாய்
மனத்தீவைச் சூழ்ந்து ஆர்ப்பரித்து
அரவுகளாய் உயிரொடுக்கும்... எனப் புதுப் படிமம் பிடித்து

இந்து சமுத்திரத்தின் முத்து
இரத்தின துவீபம்
ஆசியாவின் அட்சய சுரபி
எங்கள் தாய்
இன்று பிச்சைக்காரியாய்
பிணி பிடித்து
இந்துமா கடலில்
தத்தளிக்கும் சோகம்

மைந்தர்களோ
யுத்த நோய் பிடித்து
அறுவடை காலத்து மழையாய்…என்று அதிர்வை பரவவிடுகிறார்.

 

‘ஆக்கவிழி’ இன்றைய புலமையாளர்களின் அவலத்தை புட்டுவைக்கிறது.

நிலம் நனையா மழையாய்
தத்துவ வித்தகமாய்
ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள்
உங்களோடு பேசி
உங்களோடு தர்க்கித்து
உங்களோடே முடிகிறதே….

கலாநிதிப் பட்டங்கள்
உங்கள் பெயர்களை அலங்கரிக்க அல்ல
நம்மவர் வாழ்வியலை அலங்கரிக்க என இலவச கல்வியின் பயனடிப்படையில் ஒரு போடு போடுகிறார்.

விடுதலை, சுதந்திரம், விடியல்
……………………….
எல்லாவற்றையும் தூக்கிலிடுங்கள்… என தர்மாவேசமாக ஆணையிடுகிறது
‘தூக்கு‘ எனும் கவிதை.

இன்றைய பத்திரிகைகளின் வியாபாரம் கருதிய பொறுப்பற்ற செய்திகள் பற்றி

உசுப்பி உசுப்பி வரிகளை
ரணங்களாக்கி
நம் வாழ்வுகளையே
காவுமெகண்ட ஈரங்கள்
இன்னும் ஆறவில்லை
அதற்குள்
அடுத்த கடைவிரிப்புகள்
…………….
உங்கள் செய்திகளுமா
அருவப் பொறிகளாய்
நெஞ்சைத் துளைக்கவேண்டும் எனக் கேட்கிறது ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்ற கவிதை.
நாகரிகம்‘ என்ற கவிதையின் சாரம்

கலாசாரங்கள் வேறுவேறு
நாகரிகம் ஒன்றுதான்
ஒன்றுவதே நாகரிகம்….என்கிறது. இது விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடியது.
புதிய விவாதங்களை தோற்றுவிக்கக் கூடியது.
அதிசயம்‘ என்ற கவிதையின் வரிகளான

சைக்கிள் பயணமே கனவு
இதில் விமானத்தையே
சொந்தமாக்கும் நினைப்புகள் என்பது ஏதோ ஒரு பிரபலமான கவிதை வரிகளை ஞாபகப்படுத்துகிறது.

நாளை‘ என்ற, படத்திற்கான கவிதையானது அப்படம் பேசும் கருப்பொருளை சொற்களால் அழகாக வரைந்து காட்டுகிறது

ந்தக காற்றின் வெப்பத்தில்
மலேரியாக் காட்டின் மத்தியில் வாசம்
வானமே கூரையாக
வாழ்வே கேள்வியாக
பாத்திரங்களுடன் ஒரு பாத்திரம் என்று!
‘விமர்சனம்’ என்ற கவிதை
வடிவம் ஓசை சொற்சிற்பம்
எல்லாம் தாண்டி
எஞ்சித் தொற்றும் உணர்வே
கவிதை என கவிதைக்கான ஒரு வரையறையைத் தருகிறது.

மேலும்

கவிதை
மனவெளித் தரிசனம் புறவிழி ஒளடதம்
திசைவெளிக் கீற்று
வாழ்வியல் சுகிப்பின் புத்தாக்கம்
வடிவங்கள் கடந்து
வரிநிலைகளையும் தாண்டி
உள்ளுறைந்து கிளர்த்தும்
அருவத் தோன்றல் என ‘அருவம்’ என்ற கவிதை கவிதை பற்றி கூறுகிறது.

இவர் தான் ஒரு சுயம்பாக, தன் இயல்பைத் தொலைக்கவிரும்பாத ஒருவராக, யாருக்கும் அடிபணியாதவராக, சுதந்திரத்தை எவரிடமும் அடைவுவைக்க நினைக்காதவராக தன் கவிதைகளினூடாக தன்னை கட்டமைத்து செல்ல முயல்கிறார் எனலாம். இதற்கு சாட்சியாக ‘சுதந்திர மனிதன்’ எனுத் கவிதை விளங்குகிறது.
இன்றைய கலை இலக்கிய செயற்பாடுகளின் ‘செக்குமாட்டுத்தனத்தை’, தனித்துவம் அடையாளம் தொலைத்த எவரையோ பிரதிபண்ணும் தன்மையை, சாமானிய மக்களினைக் கணக்கில் எடுக்காத அதிமேதாவி மனப்பான்மையைப் படம்பிடிக்கிறது

நமது அளிக்கைகள்
தேய்ந்த இறுவெட்டுக்களாய்
மீண்டும் மீண்டும் மரணப் பொறி வைக்க
இயங்கியல் தொலைந்த இழிசனரா
நம் இரசிகப் பெருமக்கள் என்று ‘ரசம் தீர் கண்ணாடிகள்‘ எனும் கவிதை!

 
இவற்றிலிருந்து வேறுபட்டு சற்றே ஆன்மீக வாடையுடன், சுய தேடலாக எழும் ‘வேட்டை’
வில்எடு! நாணேற்று!
தேடித்தேடிக் கொல் மிருகங்களை
வெளியேயல்லல உன்னுள்ளே என்று அடுத்த படிநிலைக்கு பாயவும் எத்தனிக்கிறது.
இவ்வாறு இன்றைய யதார்ததம், சமூகம், சூழல், பிரச்சனைகள், தீர்வுகளுக்கான முயல்தல் என்பனபற்றியும் இன்னும் பலவற்றைப் பற்றியும் எளிமையான சொற்கள், இயல்பான சொல்முறை, அலங்காரங்களற்ற உத்திகள் என்பனவற்றினூடாக தான் சொல்ல நினைத்ததை தெளிவாகச் சொல்லி அதை சாதாரண வாசகனுக்கும் தொற்ற வைக்க முயன்றதில் தன் கன்னிக் கவிதைத் தொகுதியிலேயே தென்பொலிகை குமாரதீபன் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்று கூறலாம்.
(18.04.2016)