நூல் அகம் : கைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி

காற்று வீசிக் கொண்டிருக்கிறது. காற்றின் வீச்சிலே இனிய மலர்களின் வாசனை புறப்பட்டு வருகிறது. மண் வாசனை குபீரிடுகிறது. மழைச்சாரலின் மயக்கும் வாடை மனங்களை மயங்க வைக்கிறது. இடைக்கிடையே போர் தொட்ட வடுக்களையும் சீண்டிப் பார்க்கிறது காற்று. தெருவோரங்களில் நிகழ்ந்த மரண வாடையை நாசிக்கு இழுத்து வருகிறது. கால வெள்ளத்தில் கடந்து வந்த காயங்கள், புண்பட்ட வேதனைகள், எல்லாவற்றையும் தொட்டுக் காட்டுகிறது காற்று. நினைவு மூங்கில்களை உரசி உரசி உணர்வில் தோய்ந்த இசையினைப் பிரசவிக்கிறது. அது ‘கைகளுக்குள் சிக்காத காற்று’.

கவிஞர் த.ஜெயசீலனின் இரண்டாவது தொகுதியாக வெளிவந்திருக்கும் ;கைகளுக்குள் சிக்காத காற்று’ கவிதை நூல் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பே இது. எண்பத்து நான்கு சிறியதும் பெரியதுமான கவிதைகளைக் கொண்டிருக்கும் இந்த நூலில் பலவிதப்பட்ட உணர்வுகளை, வாழ்நிலையைத் தரிசிக்க முடிகிறது. வாழ்வின் பலவீனமான தருணங்களில், நொந்து போகாது, நம்பிக்கையோடு சிலிர்த்தெழச் செய்யும் இறை நினைவு ஆரம்பக் கவிதையிலிருந்து ஆங்காங்கு பரந்து காணப்படுகிறது.

மேலும் இயற்கை, காலம் போன்றவற்றின் செதுக்குகைகளும், சமுதாயத்தின் போலித்தனங்களும், போரின் வடுக்களும், மனதின் அகங்காரங்களும், நெகிழ்வுகளும் அந்தக் கவிதைகளில் பீறுகின்றன. போர் ஆளுகின்ற இந்தத் தேசத்தில் தாய்மண் குறித்த ஏக்கம் சுடர்வதை அநேகமான பாடல்களில் காண முடிகிறது. ‘இல்லாத இதம’;,‘நாட்டுக்குரைத்தல’;,‘கொள்ளை போன குளம’;,‘மெய்யுறவு’ போன்றன அத்தகையன.

“நீயும் பகட்டுகளின் பின் பழசை மறந்தனையோ…?” என்று ‘மெய்யுறவில’; எழுகின்ற கேள்வி இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒருதடவை கேட்கப் பட வேண்டியதாகிறது.

‘மறத்தல்’ பற்றிய மற்றுமொரு கவிதை இப்படி அமைகிறது.
“இவ்வளவு சுலபமாயா எல்லாம் மறந்துபோச்சு?
இதயத்தில்
அன்றுஇட்ட தீயும் அணைந்ததுவா?
காதுகளில்
அன்றறைந்த ஓலம் அகன்றதுவா?
கண்களுக்குள்
கல்வெட்டாய் நின்ற காட்சிகள் மறைந்தனவா?
அவ்வளவு சுலபமா… ‘அத்தனையும்’ மறந்துபோதல்?”

என்று மனதைக் கீறும் கீறல்களுக்கு விடையாய் “காயங்கள் மறைந்தாலும் வடுக்கள் நிலைக்க வேண்டும்” என்று தத்துவம் பேசுகிறது கவிதை.

‘கண்டி வீதியில் கவிந்த கவிதை’,‘கழுத்தறுந்த சேவல்’ போன்ற கவிதைகள் போர் அரக்கனால் நசுக்கப்படும் உயிர்கள் மீதான மனிதாபிமான வெளிப்பாடாகின்றன.

‘மரணம் பரிசளிக்கப் பட்டு மடிந்தவர்கள்
எவராயு மிருக்கட்டும்
மரணத்தை வழங்கியோர்கள்
எவராயு மிருக்கட்டும்…என்கண்ணில் தெறித்துவிழும்
இரத்தத்தால்…திசையெல்லாம்
சிவப்பாகக் காண்கின்றேன்.”

என்று இன மத பேதமற்று மரணித்தவர்களுக்கான அஞ்சலிப் பூக்களைக் கவிதை சொரிகிறது. இதே உணர்வுகளைத்தான் ‘போதிமரத்திலும்’ தரிசிக்க முடிகிறது.

தொடர்தும் போர் அழுத்தங்கள் நிறைந்த மண்ணில் சமாதானம் வேண்டும் என்ற ஆவலோடு சமாதானப் புறாவுக்கான ‘உருவேற்றல்’ நிகழ்கிறது. அதற்காக எல்லோரும் அந்த வெண்புறாவுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்று அங்கலாய்க்கும் கவிதையுள்ளம் ‘ஊர்வலத்தில்’ சமாதான தேவதையின் அவசர அலங்காரம் கண்டு மிரள்கிறது. அரிதாரப் படையெடுப்போடு, நொண்டி நடப்பதனை மறைக்க குதியுயர்ந்த பாதஅணி பூட்டி வருகின்ற சமாதானத் தேவதை தானும் கையசைத்துக் கடந்து போகின்றாள் என்கின்ற போது அந்தக் கனவு கலைகிறது.

இருபினும் ‘புதிதாய் மலர்ந்த ஆறு’“இனிஎந்தப் பெருங்கோடை வந்தாலும் வற்றேன் யான்..”எனக் கரைபுரள கடக்கும் போது கலைந்த கனவு நம்பிக்கையோடு வேர்கொள்கிறது.

வீட்டுச் சுவரின் விரிசலில் துளிர்த்த வேர் பற்றிய கவிதை மனதைத் தைக்கிறது. ஆலவிதை பச்சைத் தளிர்கரம் ஆட்டும்போது மனம்போல வளரவிட்டு, அதன் செழிப்பை இரசித்துவிட்டுப் பின், அதன் வேர் அறுந்த கதையை இப்படிச் சொல்கிறார் கவிஞர்

“அன்பாய் அது என்னை அருகழைக்கும் போதெல்லாம்
முன்போல் சிரியாமல்
முகம் திருப்பிச் சென்றேன்…பின்
‘பாவ’மென்று பாராமல், சுவர்ப்பிளவில் வேர்தேடி
வெட்டி அறுத்திழுத்தேன்”

வாழ்வின் யதார்த்தம் வேரென வெளிப்படுகிறது. இப்படி வாழ்வில் எத்தனை வேர்களைத்தான் அறுத்திழுத் தெடுப்போம்?
‘குயிலி’ மனதில் பாரத்தைத் தந்து போகும் கவிதை. ஏக்கம் குழைத்த ஒற்றைக் குரலோடு, யாரே ஒருவனின் போலிக் கூவலை, இணையுடையதென நம்பிக் குரல் கொடுக்கும் குயிலி…ஏமாந்து போன அந்த இளங்குயிலின் அழைப்பு..

“இன்றைப்போல் இனிநாளும்,
எங்கோ இதே குயிலி ஏங்கிக் குரல்கொடுக்கும்
அங்கங்கு ஏமாற்றம் தானா…
அதை அணைக்கும்?”
இந்த வேதனை வரிகளால் குயிலியின் சோகம் தீர்ந்து போகுமா? இல்லை மேலும் பெருகுமா?
மரங்களைப் பற்றிப் பேசும் கவிதை அற்புதமாய் அமைந்துள்ளது.
“மழைநாளில் மட்டும் மணியாய்க் குளித்தடுத்த
மழைமட்டும் ஊத்தை அகலா திருக்கின்ற…மரங்கள்..”
“யார் பூப் பறித்தாலும்,
யார்கிளை முறித்தாலும்,
யார்வேர் அறுத்தாலும், எதிர்ப்பெதுவும் காட்டாமல்
பேசா மடந்தையாக வலிசுமந்து வீழுகிற…
அந்த மரங்கள்..” கவிஞரின் வரிகளுக்குள்தான் ஆறுதல் கொள்கின்றன. அதனால் தானோ சில்லென்ற காற்றைச் சிறுவனைப் போல் விசிறி கவிஞருக்கு ‘அறிவு நட்பு’ ஆகிவிட்டன.
‘நாய் பிடித்தல்’ நம் ஊரின் ஒரு காலச் சித்திரத்தை அப்படியே பதிவு செய்கிறது.
“ஊர் நாயை,
வீட்டுக் கொளிந்தோடிச் சுதந்திரமாய்த்
தன்பாட்டிற் சுற்றும் தறுதலையாம் நாய்களினை
சின்னஞ் சிறு குட்டிகளை
சுருக்கிட்டுப் பிடித்துக்
கொண்டு சென்றடித்துக் கொல்வார்கள்@
விசர்நாய்தான்
என்றல்ல பிடித்ததனை அழிப்பார்கள்” என்றும்,
“விட்டேத்தியாகத் திரிந்து பிடிபட்டால்

அதன்நெற்றிப்
பொட்டில் மரணம் பொறிக்கப்படும் என்றென்
நாய்க்கு விளங்காது” என்றும் நாய்பிடித்தலினூடாக அன்றைய சூழலைச் சொல்ல விழைகிறார். மேலும் ‘உறவு’,‘நீ இட்ட சாபம’;, போன்ற கவிதைகள் ஐந்தறிவு ஜீவன்களுக்காக ஏங்கி நிற்கின்றன. ‘கார்த்திகை மழை’ கார்த்திகைத் தீபங்களைக் கண்களுக்குள் கொண்டுவந்து கண்கலங்க வைக்கிறது.

உலகத்திலுள்ள பாதைகள் பற்றி ஆராயும் கவிஞரின் நோக்கில்
“நம் பாதையினை தெரிவுசெய்தல்
மட்டும் நம் கைகளிலே…பயணம் யார் கையில்?” என்பதாய் ஏற்படும் தெளிவு இன்னொரு கவிதையில் வாழ்வைப் பயணத்தோடு ஒப்பிடுகிறது.
“வாழ்வு அதன்மீது வலிந்து எழுஞ் சந்தேகம்
ஏதோ பயம், ஏதும் நிரந்தரமே இல்லையென்ற
நம்பிக்கையீனம்…
இவை தன்னுள் புற்றுநோயாய் வளரினும்
“கவிதை துணையிருக்க கலங்கி மரணிக்கேன்” என்று ‘தீப்பொறிகளைத் திரட்டி’யெழ முடிகிறது. கவிஞரால் “நல்ல உணர்வுகளை, நல்ல மன நினைவை இணைக்கும் இயற்கை இறை நல்லதொரு வாழ்வருளும்” என்று நம்பவும் முடிகிறது.
இயற்கை அழகின் மயக்கத்தில் அழகழகான உவமைகள் கவிதையெங்கும் எட்டிப் பார்க்கின்றன.

“சூரியனின் விழியை முகிற்கரங்கள்
பொத்தி மறைத்துவைத்த பொழுது…”
“வெய்யில் விழுது விடுங்காலை”
“தடிமன் பிடித்தொழுகும் மூக்காய்த்
தரைநோக்கி
மழை சிந்தும்” இவ்வாறு வார்த்தைகள் வானவில்லின் வர்ணஜாலங்களைக் காட்டுகின்றன.
“காலம் நெடும்பாய்ச்சல் பாய்ந்தபின்னும்…
கோவிலடி வீதி கொற்றக் குடைநிழலாய்
ஏதோ பரவசத்தை
எமக்கூட்டும் அன்னைமடி..” என ஆறதல் காணும் கவிஞரிடம் ஆண்டவன் கேடகிறான் “நான் அங்கில்லை ஏன் பின் இடிக்கிறாய் என்று”

யாரோ ஒருத்தியின் அருட்கண் பார்வையால் உயிரமைதி கிடைக்கும் என்பதற்காக, ஆண்டவனை கோவிலில் இல்லை என்று சொல்ல வைப்பது அவ்வளவு நல்லதாயில்லை. இறைவனைத் தேடி கோவிலுக்குப் போகும் பக்தரின் நிலையையும் கவிஞர் யோசிக்க வேண்டும்.

மொத்தத்தில், எளிமையும் இனிமையும் சேர்ந்த கவிதைகள் ‘கைகளுக்குள் சிக்காத காற்றாகி’ மனதுக்குள் சாமரம் வீசிக் கொணடிருக்கின்றன.

(இது 14.06.2004 ‘நமது ஈழநாடு’ பத்திரிகையில் வெளியான அறிமுகக் குறிப்பு)

Leave a Reply