அன்புடையீர்
வணக்கம்.
இது எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு
இதிலுள்ள பெரும்பாலான கவிதைகள் அண்மையில் எழுதப்பட்டவை.
இதற்கும் என் இரண்டாம் தொகுப்புக்கும் இடையில்
ஓன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
அதற்குள்
என்னிலும், என் கவிதையிலும், என் சூழலிலும்
ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.
நெருக்கடி நெருப்புள் நிதமும் நின்ற போதும்
என் கவிதைப் பூ கருகாமல் பூத்துக் கொண்டே இருந்தது!
வாழ்வின் நெருக்கடி அதிகரிப்புக்கு ஏற்ப
என் கவிதைப் பிரசவிப்பு நேர்விகிதமாகவே இருந்தது, இருக்கிறது!
இதற்கு யார்காரணமோ அறியேன்.
இதற்கான எனது ஊற்றுக் கண் எது என்பதையும்
அறியா வியப்போடே இக்கணமும் இருக்கிறேன்.
காலம் என் உடலில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தி
வாழ்க்கையில் ஏதேதோ….
வரங்களையும் சாபங்களையும் தந்த போதும்
அன்றும் இன்றும் என்றும் என்னுள் இருக்கும் கவிஞனை
கவிஞனாகவே வைத்திருக்க வேண்டும் என்பதே
எனது இடையறாத பிரார்த்தனையாக தொடர்கிறது.
இதற்கு என்னை வழிநடத்தும்
இயற்கையும், இறையருளும் என்றும்; துணைதரும் என்று நம்புகிறேன்.
நன்றி கலந்த நட்புடன்
த.ஜெயசீலன்.
பெற்றவர்க்கும் உற்றவர்க்கும்
பிரபலப் படுத்தி.. எல்லாம்
கற்பித்து நல்லவழி காட்டியோர்க்கும்…
காணிக்கை.
தமிழ்த்தாய் வாழ்த்து
உயிரோடும் எங்கள் உணர்வோடும் ஊறி
ஒளியாகி வாழ்வின் மொழியாகி
உலகென்ற மேடை தனில் நாமும் ஓங்க
உரந்தந்து மேன்மை வழிகாட்டி
வயிரங்கள் பாய்ந்து வயதாலும் மூத்து
வரலாற்றை ஆளும் தமிழ்மாதே!
வரமாக உந்தன் மடிவந்த சேய்கள்
மனதார வாழ்த்தி மகிழ்கின்றோம்!
புதுமைகள் கோடி புகுந்தூரை மாற்றி
புயலாய் அலைக்கும் கலிகாலம்
பொருள் போன போக்கில் புதிராக வாழ்க்கை
புலம்பேர்ந்து ‘மேற்கின்’ சுகந்தேடும்
இதனுள்ளும் சொந்த அடையாளம் காத்து
“இணைநான் புவிக்கு” எனஓதி
இறுமாப்பில் ஆடும் தமிழே…உனக்குள்
எதுஇல்லை? நின்னை மனம் வாழ்த்தும்.
உனதன்புச் சேய்கள் எனமண்ணில் நாங்கள்
உயிர்வாழ்தல் ஒன்றே பெரும்பேறு!
உடன்கட்டை ஏறி உனைக்காக்க நீறி
உயர்ந்தோரைப் போற்றும் வரலாறு!
உனதுண்மை யான வயதென்ன? இன்றும்
உயிர்ப்பாய்…குலுங்கும் எழிலோடு!
உனைநெஞ்சில் வைத்த துணிவால் ஜெயித்து
உயர்வோம்… புவிக்குள் மதிப்போடு!
தமிழ்க் கடல்
மோன மாக விரிந்து பரந்தென்றன்
முன் கிடக்குது தமிழாம்…சமுத்திரம்.
பார்வைப் புலத்துக்கு எளிமையாய்த் தோன்றினும்
பரப்புப் பிரமாண்டம்; ஆழமோ அதிசயம்.
யார் முழுமையாய் அளந்து அறிந்தவர்?
யார் அதற்குள் முழுதாய் இருப்பதைத்
தேர்ந்தவர்? உயிர்…உயிரற்ற பல்வகைத்
திறம் உணர்ந்தூர்குச் சொல்லி முடித்தவர்?
ஆழம் காண முடியலை எங்களால்,
அகலம் தேற இயலலை ‘திங்களால்’,
யாவை முத்துக்கள், உயிர்வகை, தேவையும்
அற்றவை எவை? காணலை எங்கள்…ஆள்!
கோடை மாரி என்று இளைத்துக் கொழுக்காமல்
குடியிருக்கும் நம் கரையைக் கரைக்காமல்,
நாளும் அமுதம் விளைந்திடும் பாற்கடல்
நம்தமிழ்… இது வற்றாத மாகடல்!
இந்த ஆழியில்… மழையின் துளிஒன்றாய்
இவனும் வீழ்ந்து கலந்துளேன்; என்றனால்
இந்தச் சமுத்திர மட்டம் சிறிதேனும்
உயர மாட்டாது என்ப தறிகுவேன்!
இந்தத் துளியினால் சமுத்திரத் தன்மையில்
ஏதும் மாற்றம் நிகழுமோ தேறிடேன்!
என்னைப் போன்ற துளிகளால் ஆனதே
இது; இப் புகழ் ஒன்றே போதும்…யான்…வாழுவேன்!
கனவு காணட்டும் கவிஞன்
கவிஞன் என்பவன் கனவுடன் வாழ்பவன்.
கவிஞன் என்பவன் கனவினால் வாழ்பவன்.
கவிஞன் என்பவன் கனவிலும் வாழ்பவன்.
கவிஞன் என்பவன் கனவென வாழ்பவன்.
கவிஞன் என்பவன் கனவில் மிதப்பதாய்…
கரையும் யதார்த்த நனவில்… ஓர் கைதிபோல்
கவியும் துன்பச் சிலுவை சுமந்து…தன்
கடமை செய்யாது தோற்றுந் துவளுவான்!
வையகம் வாழ வேண்டுமென் றேங்குவான்.
வையம் பாலிக்க வரங்கேட்டுப் பாடுவான்
வையகம் உய்ய வழிகளைத் தேடுவான்.
வையகம் வெல்லும் வேளை கூத்தாடுவான்.
வையம் இவனைக் கணக்கில் எடுக்காது!
வையம் இவனின் குடும்பத்தைக் காக்காது!
வையம் இவனின் கனவுச் சிறைவிட்டு
மனைவி மக்களை மீட்டும் எடுக்காது!
கவிஞன் காணும் கனவுகள் தாம்…இந்த
ககன உண்மையைக் கண்டு பிடிப்பவை!
கவிஞன் காணும் கனவு…இயற்கை தான்
இறுக்கிக் கட்டிய புதிர்கள் அவிழ்ப்பவை!
கவிஞன் காணும் கனவுகள் தான்…எந்தக்
காலத்துக்கும் ஏற்ற நனவைச் சமைப்பவை!
கனவு காணட்டும் கவிஞன்; அவனுக்குக்
கருணை காட்டலே…வெல்லும் வழிவகை!
கவிதைக் கடவுள்
இதயமோ இடிந்து சோர்ந்து
இடருறும் பொழுதும்…கால
விதிப்பய னாலே…நூறு
வில்லங்கம் சுமக்கும் போதும்
எது முடிவறியா துள்ளம்
ஏங்கியே தவிக்கும் போதும்
இதுவழி என்று காட்டும்
என் கவி…கடந்து போவேன்!
துயர்தொட…தெய்வம் கண்முன்
தோன்றியே காக்காப் போதும்
பயம் தணித்து அருள ஞான
குரு உதவாத போதும்
அயர்கையில் உறவோ நட்போ
ஆறுதல் வழங்காப் போதும்
தயங்காதென் கவியில்…நெஞ்சத்
தடுமாற்றம் சொல்வேன்….தீரும்!
வஞ்சிக்கப் பட்டும், தேகம்
மனம் முற்றும் களைத்துச் சோர்ந்து
அஞ்சியும், மரியாதைக்காய்
அழுதும், என் ஆசை கேட்டும்,
நஞ்சிடர் ஊறி நெஞ்சை
நனைக்கவும், பொறுத்தென் பாமுன்
தஞ்சமாய் முறையிட் டோய்வேன்
தமிழென்னை மீட்கும் கண்டேன்!
கடவுளுக் குரைத்தல் போல் என்
கவிதைக்கு உரைக்க…அந்தக்
கடவுளே தீர்வு தந்து
மனதின் உள் கலக்கம் தீர்த்து
தொடும் இடர் தொலைத்து…எல்லாம்
தருதலால்…கவிதை கூட
கடவுளே கண்டேன்; யானென்
கவிதையின் துணையால் வெல்வேன்!
எனக்கு ஒளி கவிதை
எனக்கு உயிர்கவிதை! எனக்கு ஒளிகவிதை!
எனது அடையாளம்,
எனது பிறப்பின் அர்த்தம்,
எனக்கு வரலாறு இட்ட கட்டளை கவிதை!
நான்கவிஞன் என்ற நடப்பைவிட..,
அதிலும்நம்
ஞான மரபின் தொடர்பறா திருக்கவந்த
பாரம் பரியத்தின் வாரிசுநான்
என்றவொரு
நிமிர்வைவிட என்ன வேண்டும்
என்சீவனுக்கே?
என்ன பெரும்பதவி
என்ன பெரும்புகழ்தான்
வந்தாலும் அவற்றால் வருமானம் வந்தெனது
வாழ்வு செழித்தாலும்
அவைஎனக்குப் பெரிதிலையே!
“ஆர் இவன் காண்” என்ற
அடையாளம் இட்டிருந்த
கவிதைக்கே விசுவாசம்
காட்டும் என் அகஉணர்வே!
ஊருலகுக் கென்னை உணர்த்தி…அதேபோல
ஊருலகை எனக்கு உணர்த்தி
உலகத்தைக்
காதலிக்க வைத்ததற்குக்
கவிதைதான் காரணமே!
கவிதையெனும் மூச்சைவிட்டு வாழ முடியாதே!
கவிதைஎன் மூச்சானால் சாக முடியாதே!
யார்கையை விட்டாலும்
கவிதையெனைக் கைவிடாது
வாழவழி காட்டுமது
சந்தேகம் எனக்கிலையே!
எனக்கு உயிர் கவிதை,
எனக்கு ஒளிகவிதை,
எனது அடையாளம்… எனது பிறப்பின் அர்த்தம்
எனது வரலாற்றுக் கடமை
கவிதை!..என்,
கவிதையினால் என்னை நிரூபிப்பேன்.
உலகத்தீர்…
கவிதை பிறக்கும் கருப்பையாய் இன்றுள்ளேன்!
கவிதையே நானாய் மாறுகின்ற
காலமொன்று
வரும்; அன்று காலம்
கடந்துநான் வாழ்ந்திருப்பேன்!
கவிதைக் கருவி தூக்கி
மனிதனாக நானும் வாழ நினைக்கின்றேன்.
மனிதனாக முதலில் வாழ…
அவாவுற்றேன்.
மனிதாபி மானமுள்ள மனிதனாய்..
முழுமையாய்
மனிதம் ததும்பும் மனிதனாக வாழ…ஏங்கி
முயல்கின்றேன்!
ஏனென்றால் முட்டிமோதும் விலங்கியல்பு
குறையாமல்…இப்போதும்
விலங்குக் குணம் ‘நிறைய’
இருக்கின்றேன்…என்பதனை ஏற்று என்
மிருகத்தை
மனிதனாக மாற்ற
மீண்டும் மீண்டும் முயல்கின்றேன்!
விலங்கை மனிதனாக மாற்றி
மனிதமோங்கும்
நிலைக்கேற்றி…
பின்பும் நிற்காமல்…மனிதருக்கு
வழிகாட்டி…மனிதத்தை வாழும் வகைக்கேற்றி
ஈடேற்றி, இந்த
மனுக்குலம் முழுவதற்கும்
நீதி நெறிகாட்டும் நிரந்தர மனிதனாக,
பூவுலகைப் பாலிக்கும் புலமைக் கலைஞனாக,
காலம் கடந்துவெல்லும்
தெய்வக் கவிஞனாக,
வாழும் கனவோடு வாழ்கின்றேன்!
இக்கனவு
ஓர்நாள் நனவாகும் எனஉறுதி பூண்டபடி
விலங்காளும் என்னை மனிதனாக்கி…
மனிதரிலும்
தலைமகனாய்…
இந்தச் செகம்போற்றும்
கவிஞனாக்கி… விடவல்ல கருவி…,
எனது கவிதையென்று
நம்புகிறேன்;
என்கனவு நனவாக…நடக்கின்றேன்!
எழுதாத ஒருகவிதை
ஒருகவிதை என்றாலும் எழுதத் துடிக்கின்றேன்.
ஒருகவிதை எழுதுவது
ஒருபெரிய விசயமல்ல.
எனினும்…
ஒருகவிதை, உண்மையான ஒருகவிதை,
மனச்சாட்சி யிற்குத்
துரோகம் இழைக்காமல்
உள்ளதை உள்ளபடி எழுதும் உயிர்க்கவிதை,
அள்ளி இடர்அகற்றும் அருட்கவிதை,
அதர்மம்
எதற்குமே அஞ்சாமல்; எவரோடும் சமரசம்
செய்யாமல்;
துன்பம் திரண்டு துரத்துகையில்…
கையுயர்த்தித் தர்மக் கடன்தீர்த்துச்
சரிபிழையின்
மெய்யுரைத்து யாவரையும்
மேன்நிலைக்குக் கொண்டுசேர்த்து
உய்விக்கும் ஒருகவிதை, ஒளிரும் லயக்கவிதை,
எழுதத் துடிக்கின்றேன்!
தொடர்ந்தும் ஆயிரமாய்
வெற்றுக் கவிஎழுதக் களமெனக்கு வாய்த்தாலும்
இப்படி ஒருகவியை
எழுத இடந்தராத
துர்(ப்)பாக் கியத்துள்ளே துவண்டு உளறுகிறேன்!
நேற்று எழுத நினைத்தேன்;
இன்றைக்கு
ஏற்படாத சந்தர்ப்பம் எனைமிரட்ட ஊமையானேன்!
நாளை ஒருகவிதை
நாணயமாய் நானெழுதக்
கூடுமோ என்சூழலிலே
குற்றுயிராய்க் கேட்கின்றேன்!
கண்முன் கிடக்கும் கவிதை
கண்களுக்கு முன்னால் காணும்
அனைத்தினிலும்
உண்டு கவிதை இதை
உணரும் திறனின்றி
காண்பவற்றைக் காண்பதாயே காண்கின்றாய்!
கவிஞனோ…
ஊன்றி அனைத்தினுள்ளும்
உள்ள கவிதைகளை
தன்கூர்மைப் பார்வையின்
தன்விசேஷ புலனுணர்வால்
கண்டு பிடித்தூர்க்குக் காட்டுகிறான்!
நீ நினைக்கா
வண்ணம்
‘அணுக்களிலும்’
இயற்கை புனைந்துவைத்த
புதிர்களைத் துலக்கிப்
புவிக்கு விளக்குகிறான்!
“இப்படிநான் பார்க்கலையே” என்று நீ
வியந்திருக்க
செப்படிகள் செய்துன் சீவன் சிலிர்க்கவைப்பான்.
இவ்வாறு இயற்கையின்
மௌனத்தை மொழிபெயர்த்தும்,
இவ்வுலகம் போடும்
விடுகதைகள் அவிழ்த்துரைத்தும்,
வாழ்வின் வகைவகையாம்
கோலங்களை வியந்தும்,
ஆழ்மன அதிசயத்தை
எண்ணத்தைப் படம்பிடித்து
யாரெவரும் காணா யௌவனத்தைக்
காண்பித்தும்,
கவிஞன் கவிதைகளைச் சாகா வரம்பெற்ற
நிரந்தரப் பிறவிகளாய்
மனக்கண்முன் நிறுத்துகிறான்!
கண்களின் முன்னால் காணும்
அனைத்தினிலும்
உண்டு கவிதை….
இதை உணரும் கவிஞன்..தன்
மண்ணில் சிரஞ் சீவியாய்
என்றென்றும் வாழ்ந்திடுவான்.
எம் வாழ்வை எழுதுதல்
என்னுடைய வாழ்வை எழுதுகிறேன் என்பாட்டில்.
எங்களது வாழ்வை
எழுதுகிறேன்…என் ‘பாட்டில்’.
எங்களது வாழ்வை..
என்வாழ்வின் அனுபவத்தால்
எழுதுகிறேன்…என்பாட்டில்.!
என்னிடத்தில் எதுவுண்டோ…,
அழகழகாய் என்முற்றம் தனில்என்ன கிடக்கிறதோ..,
தெளிந்தஎன் நினைவோடை
எதைக்காட்ட விரும்பியதோ…,
எங்களது வாழ்வின் இயல்பெதுவோ..,
முகமெதுவோ…,
எங்கள் குணம்,
எங்கள் பிரச்சினைகள் எவையெவையோ..,
எங்கள் கலை எங்கள்
கலாசாரம் எதுவெதுவோ..,
எங்கள் குறைகள், எங்கள் பலவீனம்,
எங்கள் தவறு எதுவோ..,
எனதுணர்வில்
தங்கியெம் அடையாளம்
தனைக்காட்டு பவையெவையோ..,
அவற்றை எழுதுகிறேன்!
அறிந்தே எழுதுகிறேன்!
என்அகத்தில் எதுஇருக்கோ அதையே தருகின்றேன்.
எனக்குத் தெரிந்ததெதோ அதையே உரைக்கின்றேன்.
அந்நியத்தை எனுட்புகுத்தி
எவன்தனதோ சிந்தனையை,
எவன்தனதோ வாழ்முறையை,
எவன்தனதோ கருத்தியலை,
எவன்தனதோ கலைவடிவை,
எவன்தனதோ உணர்வை என்கவியாய்ப்
போலியாய்
எழுதி “எனைப்பெரியாள்” என்றுரைக்கேன்!
எம்வாழ்வை
எழுதுமெனை அற்பனென எவரும் உரைக்கட்டும்!
புதுமையினை விரும்பாப்
புலயனெனச் சொல்லட்டும்!
உலகளந்த பார்வையில்லா ஒருவனெனச் செப்பட்டும்!
நான் நானாய் வாழ்வேன்.
எனதும் எங்களினதும்
அடையாளம் என்னெழுத்தில் இருக்கும்;
அதுதவறென்று
உரைப்போரைப் பற்றிக் கவலையில்லை…
நான்தொடர்வேன்!
சொற்பூ மாலைகள் சூட்டுக
மோனம்… பரந்த வெளியை நிரப்புகையில்
வானளந்து நன்கு வளர்ந்து
கிளைசெழித்து
பச்சைப் பசேலென்று நிற்கிறது
மொழிவிருட்சம்!
சொரிந்திருக்கும் பூக்களெனச் சொற்கள்
அவ்விருட்சத்தின்
பூந்துணர்கள் தோறுமே பூத்துக்
குலுங்கிவிட
அவற்றினது தேனுக்கு அலைந்தன
எனைப்போன்ற
எண்ணற்ற வண்டினங்கள்!
ஒவ்வொரு பூக்களுமே
வெவ்வேறு வண்ணம், விதவிதமாய் மகரந்தம்,
வெவ்வேறு வாசமென வியப்பூட்ட
மலைத்தயர்ந்து
வெவ்வேறு சொற்பூவைக் காம்போடு பறித்தெடுத்து
கோர்க்கத் தொடங்கினேன்!
குளுமைநிறை மாலையாக
கவிதையொன்று தோன்றிக்
கண்ணைச் சிமிட்டிற்று!
இப்படியாய்ப் பலகவிதை மாலைகள்
குவியலாச்சு!
இன்னுமின்னும் கோடானு கோடி
கவிமாலை
கட்டவல்ல சொற்பூக்கள்
மொழிவிருட்ச அரும்புகளில்
மொட்டுகளாய் இப்போதும் முகிழ்ந்தபடி இருக்கிறது!
பூக்களைத் தெரிந்து புரிந்து
அவரவர்க்கு
பிடித்த விதத்திலே பிணைத்துப்
பெருந்தொகையாய்
மாலைகட்டி இந்த மண்ணை
எழிற்படுத்த
வாரீர் இளங்கவிகாள்…வாழ்க்கை அழைக்கிறது!
கம்பநாடன் கவிதை
கம்பநாடன் கண்டுநின்ற நாடு போலே,
கம்பநாடன் காட்டிவிட்ட அரசு போலே,
கம்பநாடன் வடிவமைத்த அமைச்சுப் போலே,
கம்பநாடன் எதிர்பார்த்த ஆட்சி போலே,
கம்பநாடன் வியந்துநின்ற குடிகள் போலே,
கம்பநாடன் இடித்துரைத்த அறங்கள் போலே,
கம்பநாடன் தெரிந்துரைத்த வாழ்வு போலே,
கனவுகண்டு… நனவுகொண்டால்…அரசர் நாமே!
கம்பன் சொன்ன ஒழுகலாறு நதியைப் போலே,
கம்பன் சொன்ன காடு, நகர்ச் சிறப்பு போலே,
கம்பன் சொன்ன சோதரரின் அன்பு போலே,
கம்பன் சொன்ன உறவுகள் செய் கடமை போலே,
கம்பன் கண்ட மனைவியரின் மகிமை போலே,
கம்பன் சொன்ன…பல்லுயிரும் ஓம்பிச் சொந்தத்
தம்பிகளாய்ப் போற்றுகிற கருணை போலே
தகைமை பெற்றால் எங்களூரும் சொர்க்கம் தானே!
இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை
என்ற சம உரிமை முதற் கண்டான் கம்பன்!
வல்ல இறை…மனித உரு எடுத்துத் தீமை
வதைக்க எழும் இயற்கையினைக் கதையாய் யாத்தான்!
உள்ள கற்பை அனலென்றான்! ஆண்பெண் நீதி
“ஒருவனுக்கு ஒருத்தியெனும் ஒழுக்கம்” என்றான்!
வெல்லும் அறம்; பாவமது தோற்கும்… என்னும்
விதி நூலில் வையம் ஆடும்… யதார்த்தம் சொன்னான்!
அரசியலைப் பாடினாலும் அசலாய்ப் பாடி
அழகியலைப் பாடினாலும் ஜொலிக்கப் பாடி
உறவியலின் உண்மை ஆழம் அகலம் பாடி
உலகியலை அக்குவேறு ஆணி யாக்கி
பிரமனுக்கும் பிரமனெனப் புதுமை தீட்டி
பிணி, மூப்புச், சா கடந்த கவிதைகாட்டி
நிரந்தரமாய் ஜெயித்தவனை…இளையோர் தேடி
நிமிரவைக்க முயல்வோரின்…நியாயம் வாழி!
கம்பநாடன் உலகறத்தின் பசியைப் போக்கக்
கவிசமைத்தான்; தமிழ்வாழ்வின் உயர்வைப் போற்றின்
உம்பருக்கும் நிகராக மனிதர் கூட
உலவிடலாம் எனும் உண்மை தனைத்தான்…ராம
நம்பிகதை யூடு உவமையாகத் தந்தான்!
நாங்கள் இதைப் புரியாமல்…கம்பன் பொய்யன்
வம்பனென்றோம்…வறுமையுற்றோம்…கடவுள் போன்றோன்
கவித்தடத்தில் நடந்து…காலம் தன்னை வெல்வோம்!
யாழ் அரசவைக் கவி
ஈழக் கவிதை விருட்சத்தில்…நேற்றைக்கும்
இருந்த மூல வேரொன்று பட்டதோ?
காலக் கறையான் அரிக்காக் கவிதந்த
கவிஞனின் முகம் கண்முன் கரைந்ததோ?
ஆழ்ந்த அறிவும் புலமையும் கொண்ட…நம்
அரசவைக் கவி இன்று மறைந்ததோ?
சீடனாக நான் சிலிர்க்கக்…கவி சொன்ன
செம்மலைத் தீயின் நாக்குச் சுவைத்ததோ?
கவிதை, நாடகம், ஆய்வு என எந்தக்
களத்திலும் முடிசூடிய மன்னவன்.
அவையில் ஏறியெம் ஆழக் கவிதையின்
அடிமுடி காட்டி வென்ற முருகையன்.
நவ உலகுக்கும் ஏற்ற கருத்துக்கள்
நாசூக்காகச் சொல்லி வைத்த குறுமுனி.
கவிதை யாகினான் இன்று; அவன்புகழ்
காலம் கடந்துமே வாழும் நிஜம்…இனி.
இயலாமையை உணரும் கணங்கள்
எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்!
எழுதி இடையில்
இரண்டோர்சொல் செம்மையாக்கித்
திருத்திச் செதுக்குமுன்னே,
செல்வம் தொலைந்ததைப்போல்
கரம்விட்டுப் போயிற்றக் கவிதை;
எங்கேதான்
தொலைத்தேன் அக் காகிதத்தை
எனஎந்தன் நினைவுவெளி
முழுதையும் அலசி முயன்றும் கிடைக்காது
மறைந்தே தொலைந்துபோச்சென்
மனத்தைப் பதிந்த ‘சுதை’!
அந்தக் கவியை எழுதியவன் யான்…எனினும்
அந்தக் கவிதையினை
மனதினிலே மீட்டிசைக்க..,
அந்தக் கவிதையை அதேபோல மீட்டெழுத..,
முடியா இயலாமை முறைத்து
எனைப்பழிக்க
எழுதுகையில்…வந்து வீழுந்தசொற் கோவைபற்றி
நினைவு மறந்துபோக நிலைகுலைந்தேன்;
அக்கவியைப்
பறிகொடுத்த ‘புத்திர சோகத்தில்’ துடிக்கின்றேன்!
என்கவியில் அது ஓர்
எண்ணிக்கை எனினும்…அதை
இன்று பறிகொடுத்து…
மீட்டெழுத முடியாத
எந்தன் இயலாமை தனைக்கண்டேன்;
தலைகுனிந்தேன்!
சொல் ஒன்று சொல்
சொல் ஒன்று சொல்தோழா!
அந்தச் சொல் நெருப்பினது
துண்டொன்றாய்… ஆற்றல் சுடரும் படிவிளங்க
சொல்லொன்று சொல்தோழா!
அந்தச்சொல் எந்நீரும்
விழுந்தணைக்க முடியாச் சுடராய் விளங்கவேண்டும்.
விழுந்த இடத்தில்
அதன்கருத்து விறுவிறென்று
படர்ந்து பஞ்சான மனங்களிலே
பற்றிஅங்கே
விளக்குக் கொளுத்தவேண்டும்;
மனதுள் குடியிருக்கும்
இருள்முழுதை அந்தச்சொல்
எரித்தகற்றி விடவேண்டும்.
சொல்லொன்று சொல்தோழா!
அச்சொல் அமிலத்தின்
துளியொன்றாய் வீழ்ந்து கரையாத கற்களையும்
உலோகங்கள் சேர்வையையும்
உருக்குலைத்து உருத்திரித்து
இரசாயன மாற்றத்தை ஏற்கவைத்து
புதுப்புதிதாய்ச்
சேர்வைகள்போல் சிந்தனையை
உருவாக்கி விடவேண்டும்.
சொல்லொன்று சொல்தோழா!
அந்தச்சொல் மருந்தினது
தேக்கரண்டி ஒன்றாய் தித்திப்பிலாப் போதும்
ஆறாத நோயை
அடித்துத் துரத்திவிட்டு
தேகத்தில் ஆரோக்யம் தெம்பினையும் மீட்டெடுத்து
ஆறாத காயத்தை ஆற்றி
அருளவேண்டும்.
சொல்லொன்று சொல்தோழா!
அந்தச்சொல் அமுதத்தின்
ஒருசொட்டாய் அறத்தின் பிழிசாறாய்
மானுடர்க்குச்
சாவா வரமளிக்கும் மூவா மருந்தாகி
என்றென்றும் செவிவழியே சேர்ந்திம்
மனிதர்கள்
திசையறியாது அலைகையிலே
விடிவெள்ளியாக வேண்டும்.
ஞான நல்லூர்
ஞான நதி இயல்பாய்ச் சுரக்கும் மடி… பாணன்
யாழ்மீட்டிப் பெற்ற நகரின்
தலைமைஊர்.
யாழ்ப்பாணத் தமிழின், சைவத்தின்,
பண்பாட்டின்,
ஆழ்ந்த கலைகளின், அரசியலின், அடையாளம்.
எத்தனை இடர்வரினும்;
எத்தனை இடிவிழினும்;
செத்திடா எம்குணச் சிறப்பினது ஊற்றுக்கண்.
“பஞ்சம்பழி வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும்”
அஞ்சாது
அழகு அழியா தெழும்பு(ம்)இடம்.
‘எப்படி இருந்ததெம் இனத்தின் செழிப்’ பென்று
இப்போதும் ‘யமுனாரி’ ஏரியூடும்,
‘சங்கிலியன்
தோப்பூடும்’, ‘மந்திரி மனையூடும்’.., தொடர்கதைகள்
சொல்லிச் சிலிர்க்கும் சுவர்க்கபுரி.
சங்கிலியன்
கடைசியாய் ஆண்டிருந்த களம்.
அட்ட திக்கினிலும்
படைவீடாய்க் கோவில்கள்
பரிபாலனஞ் செய்ய
தமிழே அரசாண்டு தலைநிமிர்ந்த இராஜதானி.
சுற்றிவரக் குளங்கள்
சூழும் அரண்களென
நிற்கக், குளுமை நிழலில் உயிர்பெருக,
அற்புத நிலத்து
அடிநீர் உடல்வளர்க்க,
பச்சைப் பசேலாய்ப் பரவிக் கிடக்கு(ம்)வயல்.
அச்சமற்ற பனைகள்
ஆகாயம் தடவு(ம்)அயல்.
அமிழ்தாய்த் தமிழை
அன்றிருந்து கடைந்தெடுத்தோர்
சமயநெறி – உயிராய் மதித்துத் தழைத்தபதி.
பண்பட்ட மாந்தர்,
பிரதிபலன் பாராதோர்,
விண்ணர், குபேரர்கள், விளைந்து மலிந்ததலம்.
கற்றுச் சிறந்தோர் கடலாக ஆர்ப்பரிக்க
விற்பனரும் நிபுணரும் வென்று நிமிர்ந்தமுற்றம்.
ஆயிரம் கவிஞர்கள்
அவதரித்த வயிறு… பல்
ஆயிரம் கலைஞரை
அன்றிருந்து இன்றுவரை
தோன்றவைக்கும் அமுத சுரபி.
பொழுதெல்லாம்
நாத சுரமும், தவிலும,; நறுங்குழலும்,
வேதமும், தேவாரம், மந்திரமும், பண்ணிசையும்,
காண்டா மணியொலியும்,
நாட்டுப் புறஇசையும்,
பேச்சும், நடிப்பும், பிரசங்கம், கூத்துகளும்,
ஆச்சர்யக் கவியும், அபிநயமும்,
விளையாட்டும்,
மூச்சில் கலந்து தலைமுறை தலைமுறையாய்க்
காய்த்துக் குலுங்கும் கவின்நல்லை!
நாவலரின்
தாய்ப்பூமி;
தமிழுக்காய்த் தம்மை விதைத்தவர்க்கு
பாயாய்க் கிடந்த தரை.
பாய்ந்து தொடர்ந்தழித்த
பேய் யுத்தத் தாலும் பெரிதாய்க் குலையாமல்
மீள்எழுச்சி பெற்று
விதி செய்த மேன்மைநிலம்.
பிறர்க்கு வழிகாட்டும் பெருங்கல்விக் கோபுரங்கள்
நிறைந்த வெளி. வந்த…
பிசகெல்லாம் நீறவைக்கும்
அறமும் தவமும் அருளும் அகிம்சையதும்
பெருக…அந் நியத்தைப்
பரப்பநின்றோர் தோற்ற திடல்.
பிறரும் விரும்பிவந்து பெருமைபெற் றுயர்ந்தநிழல்.
புதுமைகளை உள்வாங்கி
பழமைகளின் உயிர்ச்சாரம்
சிதையாமல் இயற்கையாகச் சிறப்புப் பெறும்பூமி.
ஞான நதிஇயல்பாய்ப் பாயும் மடி… நூறு
ஞானியரும் சித்தர்களும் திரிந்து
சமாதியாகி
ஆன்மீக அதிர்வை அள்ளிச் சுரந்திருக்க,
வானோரும் மண்ணோரும் வணங்கவரும்
நல்லூரான்
கோவில்கொண் டமர்ந்து குறைதீர்க்கும் குடிலிந்த
நல்லூர்!
ஈழத்தின் சென்னி யாழ்ப் பாணமென்றால்…,
நல்லூர்… அந் நெற்றியிலே
ஞானநெற்றிக் கண்ணேதான்!
நிறைவு
வேப்பம்பூ வேம்பில் வெகுத்துச் சொரிந்ததென
மகிழ்ச்சி மனதில்
மலிந்து கிடக்குதிப்போ!
காற்றில் கரைந்து காதுகளைத் தாலாட்டும்
நாத சுரகானம்
நதியாய் நகர்கையிலே…
மந்திரஉச் சாடனம்,
வாழ்த்தும் பஜனையிசை,
பக்தரின் வாயால் பரவும் அரோகராக்கள்,
இலயக் கலவையாக எங்கும் பரவிடுது!
சாந்த சொரூபியாக
எழுந்தருளி மூர்த்தி…வீதி
சுற்றிவரத் தோன்றும்
ஏதோ ஓர் தெய்வீகம்
ஆனந்தப் பரவச அதிர்வாகச் சூழ்கிறது!
பெரிய திருக்கோவில்..
பக்தரோ மிகச்சொற்பம்.
அயலுருத்து எங்கெங்கோ அகன்று குடியேற
வெளிநாட்டு உறவால்
விளைந்து ‘வந்த’ காணிக்கை
கும்பாபி ஷேகமாகக் கைகூடி ஒப்பேற…
விரலுக்கு ஏற்ற வீக்கமான… திருவிழாநாள்.
சனமிருக்கோ இல்லையோ
சகலதும் ஆகம
விதிப்படி நடக்கும்.
வாரத்துக் கோர்தடவை
பக்திநிறை பாடல்கள் மந்திரமாய் ஒலிபெருகும்.
எண்ணிக்கை குறைந்த
ஆடம்பர மற்ற
ஏதேதோ வேண்டுதலை எடுத்தியம்பும் பக்தர்கள்.
மண்டபப் படிவைத்து
மனமுருகும் என்வீட்டார்.
பத்தோடு பதினென்றாய் நானும் கலந்து…வீதி
சுற்றி வரும்போது
சுமைமனது இலேசாச்சு.
ஆரவார மற்று வீதியுலா நிறைவுபெற
இயல்பான பூசையுடன்
கதவு அடைபடுது.
திரும்புகிறேன்…
வீடெங்கும் ஏதோ ஒரு புனிதம்
நிறைந்ததுவாய்…அமைதி நிம்மதி பொலிந்ததுவாய்
ஒருதிருப்தி பூத்து
இதயம் குளிருதிப்போ!
வேப்பம்பூ வேம்பில் வெகுத்துச் சொரிந்ததென
மகிழ்ச்சி மனதில்
மலிந்து கிடக்குதிப்போ!
தாயுன் நிழலிருப்பின்
உந்தன் ஒருவார்த்தை போதும்….
பரிவொழுகும்
உந்தன் ஸ்பரிசிப்பு ஒன்றுபோதும்…ஆதரவாய்
எந்த நிலையினிலும்
என்னை உசுப்புதற்கு
உந்தன் உயிர்ததும்பும் சிரிப்புத் துளிபோதும்…
எந்த வகைக் காயத்தைக் கூட
உடன்மாற்ற
உந்தன் ஒருமுத்தம் போதும் நீ
அருகிருந்தால்
எந்தப் புயலிடையும்
என்னைநான் நிரூபிப்பேன்!
எந்தத் தடைவரினும்
எதிர்ப்பேன்..தலைநிமிர்வேன்!
எந்த எரிமலையின் மீதும் நான்
ஏறியென்னை
இந்த உலகேற்க வைத்து
ஜெயித்திடுவேன்.!
உண்மை உறவு வரம்
உனையே சிந்தையாலும் உடலாலும் எப்போதும்
அணைக்கும் வரங்கேட்கும்
அசையா மனதையருள்!
இன்றை நடைமுறைகள், இன்றை உலகியல்கள்,
இன்று நடப்பகைவள்,
இதுநாள் வரை எங்கோ
நிகழ்ந்து…அதிசயமாய் நினைவில் வந்து…
இன்றிவையெம்
அகத்தயலில் வழமைச் சம்பவம் ஆகிவிட்ட
நிலையில்..
நவீன நாகரீகம் ஆகிடையில்,
உலகென்ன சொல்லும்
கௌரவக் குறைச்சல்…மானம்
மரியாதை என்னாகும் என்ற
மனம்மாறி
பணத்தால் பலத்தால் ஊர்வாயை மூடி எந்தக்
குணத்தோடும் துய்த்தல்
குலமரபு ஆனநாளில்
‘இதுவே’ உயர்வின் தகுதியான
யதார்த்தத்தில்
அதற்கான வாய்ப்புகளும்
அருகமர்ந்து ஆடுகையில்
மனச்சாட்சி பற்றி மனைமாட்சி பற்றி…பிறன்
மனைநோக்கா மாண்புகளின் மறம்பற்றி
நினைப்பதுவே
மானுட துரோகமாய் மாறிவிட்ட
வாழ்நாளில்
ராமர்களும் இரகசிய
இராவணராய் மாய்ந்திடையில்
தெய்வமது தண்டிக்கும் “செய்தபாவம் திரும்பிவரும்
மெய்”என்ற பய-பக்தி தனைமாந்தர்
துறந்திடையில்
உனையே சிந்தையாலும்
உடலாலும் எப்போதும்
அணைக்கும் வரங்கேட்கும்
அசையா மனதையருள்!
தந்தைக்கோர் தாலாட்டு
தாய்…அருளைப் பாடிவைத்த பாடல்…நூறு
தரணியிலே வாழ்ந்திருக்கு; ஆனால்..,தந்தை
நேசத்தைப் பாடிவைத்த பாடல் ஏதும்
நினைவில் வர மறுக்கிறது! தந்தை மார்…நாம்
ஏன் தந்தைமார் புகழைப் பாடா தோய்ந்தோம்
என்பதனை நினைந்தோமா? தகப்பன்… சாமி
தானென்றோம்; அவர் பெருமை போற்றச் சற்றே
தயங்குகிறோம்; இனி…தகப்பன் புகழ்…நாம் சொல்வோம்!
பாலூட்டித் தாலாட்டிச் சோறும் ஊட்டிப்
பார்க்காமல் விட்டாலும்…பண்பு பாசம்
வேரோட நீர்வார்க்கும் தகப்பன் அன்பு
பிழை திருத்தி வினைத்திறனை வளர்க்கும் நன்று!
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று
தொடர்ந்து துணை புரிந்து அறிவூட்டும் நட்பு!
ஆதாரப் பொருள் ஈந்து…குடும்பம் ஆடி
அசையாமல் காக்கும் தந்தை… பாதுகாப்பு!
சந்தனமாய்த் தனைத்தேய்த்து…,வாசம் தந்து
தன்குடும்பம் மகிழவைத்துக் கரைந்து…,அன்பின்
விந்தையை முன் காட்டாது மனதுள் சேர்த்து,
வெற்றியில் உள் மகிழ்ந்து…,தோல்வி பொறுத்து…வென்று,
சொந்தமென்ற சோலையையும் வளர்த்து…,சேய்கள்
உயர ‘துலாபாரமாக’ என்றும் நிற்கும்
தந்தையர்க்காய் பாடும் முதற் பாட்டு…! இந்தத்
தாhலாட்டு; பாடட்டும் தரணி கேட்டு!
என்னைச் செதுக்கும் தென்றல்
என்ன பதிலென்று கேட்டுக் கேட்டுத் தூங்கும்
என்னை எழுப்பிடுவாள். —நரை
என்னென்று வந்ததிங் கென்றெந்தன் மீசையில்
ஏற்ற கறுப்படிப்பாள்.
மென்மலர்ப் பாதம் உதைத்தெந்தன் நெஞ்சினில்
வீழ்ந்து புரண்டெழுவாள் —எந்தன்
கன்னத்தில் நூறு குளிர்முத்தம் தந்ததைக்
கன்றிடச் செய்திடுவாள்.
வார்த்தைகள் ஒவ்வொரு மாதிரிப் பேசியே
நாணி மகிழ்திடுவாள் —பல
பாடல் இசைத்துக் குதித்து விளையாடிக்
குழப்படி செய்திடுவாள்!
ஓடிப்பிடித்து விழுந்து எழுந்து…பின்
ஓவென்றழுதிடுவாள் —வீட்டில்
ஊர்ந்துமே குப்பைகள் சேர்த்து சமைத்தெனக்(கு)
ஊட்டியென் பசிதணிப்பாள்!
புன்னகை என்னும் வலைவிரித் தென்னை
பிடித்துச் சிறையிலிட்டு —பெரும்
பொன்னகை யான சிரிப்புடன் தேவதை
போலென் மடியமர்ந்து —ஒளி
மின்னும் மகிழ்வுடன் மேனி குலுங்கிட
அன்ன நடை பயின்று —வரும்
சின்னஞ் சிறுமகள் என்னைச் செதுக்கிறாள்
தென்றலெனத் தவழ்ந்து!
உன்கண்ணில் தெரிகிறது ஒளிமய எதிர்காலம்
ஏணையிலே ஆட இறங்கிவந்த வெண்ணிலவே!
வானோர் உவந்தளித்த
பாரிஜாதப் பூமொட்டே!
உலக அதிசயங்கள் ஒன்றையும்
நான்காணவில்லை..,
மலர்ந்து அதிசயமாய்
தான்சிரிக்கும் மருக்மொழுந்தே!
துன்ப இருட்டுள்
தொலைந்துலைந்த வேளையிலே
வந்தென் விழிதிறந்த
தூண்டா மணிவிளக்கே!
குருவி தினஞ்சேர்த்துக் கொண்டதுபோல்
காசுபணம்
சிறுகநான் சேர்த்திருக்க
திடீரதிர்ஷ்டமாய்க் கையில்
கிடைத்த புதையற் பரிசே!
என் கிளைகளெல்லாம்
பூப்பூக்க வைக்கும் புலர்வின் ஒளிச்சுடரே!
ஆம் என் பிறப்பினது
அர்த்தம் உரைத்தவளே!
வீரிட்ட வாறு விளங்காத இவ்வுலகில்
ஏதேதோ தேடி
இரவிரவாய் நீயுமழ…
ஏணையினை மெல்ல இழுத்தாட்டி
இரவிரவாய்
நான்விழித்தேன்;
மெல்ல நான்பாடக் கண்ணுறங்கி
நீபொலிந்தாய்!
இனித்தூக்கம் தொலைந்ததென்று
சொல்பவர்க்கு
“உன்கண்ணில் தெரிகிறது ஒளிமய எதிர்காலம்”
என்று மகிழ்கின்றேன்!
எனதன்பில் கிறங்குகிறாய்!
தங்க மகள்
தளிரோடு மலரோடு தவழ்ந்த தென்றல்
தலைகலைத்துத் தோள்வருடித் தழுவுமாப் போல்
அழகென்னுஞ் சொல்…உயிரும்கொண்டு…கண்முன்
அசைந்தசைந்து தேர்போல நகரு மாப்போல்
விழுந்து, சிலநாள் தவழ்ந்து, எழுந்து…இன்று
விழிவிரியச் சிரித்து, அடி எடுத்து வைத்து,
தளதளென்று நடந்து, எனை அணைத்துக், கொஞ்சும்
தங்கமகள் உனதன்பில் கரைந்து போனேன்.!
கனியிதழ்கள் திறந்தெதையோ கதைப்பாய்; எந்தன்
காதருகே குசுகுசென்று ஏதோ சொல்வாய்;
எனை உறுக்குமாப்போலப் பார்ப்பாய்; நெஞ்சில்
ஏறிநின்று உதைவிடுவாய்; கதைகள் கேட்பாய்
எனைத்தழுவி சிறுநீரால் தீர்த்தம் ஆட்டி
எனைநித்தம் புனிதனாக்கி வளர்த்து…என்னைக்
கனியவைப்பாய், இளகவைப்பாய், நெகிழ வைப்பாய்
கல்நெஞ்சைப் பனியாக உருக்கி நிற்பாய்!
உன்முத்தச் சூட்டினிலே உறங்கு கின்றேன்.
உன்சிறுநீர்க் குளிரிடையும் உறங்கு கின்றேன்.
உன்முத்தப் பரிவினிலும் விரல்கள் தொட்டு
உணர்வுகளை ஸ்பரிசித்து உசுப்பு கின்ற
உன்அன்புக் கதகதப்பு தனிலும்…நானும்
நிம்மதியாய் உறங்குகிறேன்! வாழ்வின் கோடை
என்உடலை வறுத்தாலும்…உயிரோ உன்னால்
இதமாகத் தழைக்குதடி..மகிழ்வில் ஆழ்வேன்!
இசைஞானி
எந்தெந்தக் காலம் எப்படித்தான் மாறிடினும்
சிந்தி அழுகாச் செவிநுகர்
கனிவகைகள்
தந்தாய்நீ கற்பக தருவாகி!
எண்ணிலாத
அந்தக் கனிகள் எமது அகம் புறத்தில்
எப்போதுங் கிடக்க…
எதைச்சுவைப்ப தெனமருண்டு
இலகுவாய்க் கிடந்ததனை,
இதமாய்க் கனிந்ததனை,
மிகவும் இனித்ததனை,
உருசித்துத் தினம் உருசித்து
மனமும் வயிறும் குளிர்ந்து இருந்தோம் யாம்!
நாங்கள் அடிக்கடி உருசித்த கனிச்சுவையை
விட…நாம் அதிகம்
சுவைக்காத நின்கனிகள்
பலதைத் தெரிந்தெடுத்து இப்போ
சுவைக்கையிலே
அவற்றின் புது உருசியை அனுபவித்தோம்!
என்றென்றும்
புதிய சுவையைத் தருவன உன்கனிகள்.
விதிகள் பல கடந்தும்,
விசேட சுவை கலந்தும்,
வியப்பையிக் கணமும்
வளங்கிக்கொண் டுள்ளன நின்
பலகனிகள்;
இயற்கைச் செழிப்பும் புத்துயிர்ப்பும்
கலந்தன உன் கனிகள்.
இன்று….பார்க்க வடிவாயும்,
நவீன நிறத்தோடும்,
உருசித்துக் கொண்டிருக்கையிலே
சுவையை மறக்கவைக்கும்…சொல்லுந் தரமற்றுக்
கைக்கின்ற வெம்பற்
கனிகளைத்தான் அருந்துகிறோம்!
உந்தன் சுவையை உருத்திரித்து
தம்கனிகள்
என்றுரைப்போர் நல்கும் ஏற்றமிலாக் கனிகளையே
காண்கின்றோம்;
இன்றுந்தன் கனியருமை உணர்கின்றோம்!
எந்தெந்தக் காலம்
எப்படித்தான் மாறினாலும்
சிந்தி அழுகாச் செவிநுகர்
இசைக்கனிகள்
தருவோன்நீ…
கற்பக தருவாய்…. இசைஞானி!
ஏய்க்கும் பேய்களை ஏய்க்க எழு!
துன்பம் துடைக்கத் துணிந்த கரங்களைத்
தொட்டு வணங்குகிறேன் –மனத்
துக்கம் கலைத்திடச் சொல்லும் கவிதையை
தூக்கியும் கொஞ்சிடுவேன் –எதில்
இன்பம் பெற முடியும் எனக் காட்டும்
இதயமே வாழ்க என்பேன் –இந்த
ஏழை உலகம் சிரிக்க என்னால் என்ன
ஏலுமோ செய்திடுவேன்!
ஊதிக் கொழுத்தவர் உச்சத்திலே…ஏழ்மை
உக்கிச் சிதைகிறதே! –வெந்த
வேதனை தீர்ந்திட வில்லை…பலத்துடன்
மேலும் பணம் இணைந்தே –அழும்
ஏழையை ஏழ்மையின் பள்ளத்தில் வீழ்த்துது
இன்றை உலகியலே! –இந்த
ஏற்ற இறக்க இடைவெளி தீர்ப்போரை
ஏற்றுமென் பாவரியே!
ஏழ்மைக் குதவிடும் போர்வையில்… ஏழையை
ஏய்க்கும் நரி நரரும் –“என்ன
இன்னும் உறுஞ்சலாம்” என்றேழை இரத்தத்துக்கு
ஏங்கும் நுளம்புகளும் –தோற்று
வீழ்வோரைத்தான் சுற்றிக் கொத்திக் குதறியே
வீங்கும் கழுகுகளும் —எங்கள்
மேலே சுழன்றன…ஆம் இவை செத்து
விடவில்லை இக்கணமும்!
வசதி படைத்தோன் உயர்ந்தவன் என்பது
மண்ணின் யதார்த்தமின்று –செல்வம்
வந்து விட்டால்; குறை யாவும் மறைந்திடும்
வையமும் போற்றுமிங்கு –அற்ப
வசதியில் தாழ்வு உயர்வும் தகர்ந்திடும்
வழு, பிழை தீருமென்று –நம்பி
வையம் சுழலுது… வாய்ப்பு இல்லாதவர்
வாடுறார் ஏழையென்று!
ஏழைகள் தாழ்வு மனப்பான்மை விட்டு
எழுந்து நிமிர்ந்திடணும் –இந்த
இகத்தில் எவனுமே ஏழையில்லை என்றிவ்
இயற்கையை நம்பிடணும் –சொந்தக்
காலில் முயன்று பிறனை நம்பாது தன்
கடமையைச் செய்திடணும் –ஏய்க்கும்
பேய்களை மேய்த்துப் பிழைக்க…உயர்ந்து
பிழைபோக்கி வென்றெழணும்!
மனிதம் மறந்து
உந்தன் முன்னே நீளும் கரங்களில்
ஒன்றுமே இட்டது இல்லை; தெருக்களில்
உன்னை நோக்கிடும் ஏக்க விழிகட்கு
உதவி செய்ததும் இல்லை; “வறுமையாம்,
ஒன்றும் இல்லையே” என்ற உறவுக்கு
ஒரு துரும்பைக் கொடுத்ததும் இல்லை; ஆம்
இன்று கோபுரம் கட்டிடக் கோடிகள்
கேட்க…இல்லையென் றுரைக்க மனமில்லை!
அடுத்தவன் பசி கண்டு துடிக்கவோ
அடுத்தவன் விழிக் கண்ணீர் துடைக்கவோ
அடுத்தவன் வலி தன்னைத் தணிக்கவோ
அடுத்தவன் இரத்தம் உறைவிக்கச் செய்யவோ
அடுத்தவர் துயர் கேட்க முயலவோ
அடுத்தவன் சுமை தன்னைப் பகிரவோ
அடுத்தவர்க்கு உதவவோ எண்ணிடாய்…
‘ஆண்டவர்க்கு’ அள்ளி இறைக்கிறாய்!
ஆண்டவன்… உன்னைப் போலச் சிறியவன்,.
ஆசா பாசங்கள் ஆயிரம் கொண்டவன்,
வேண்டும் ‘அது இது’ என்று அலைபவன்,
விருப்பை… அடைந்திட அங்கலாய்த் தாடுவான்,
தான் நலத்தோடு இருந்தாலே போதுமென்று
தவிப்பவன், என உந்தன் இயல்பெலாம்
ஆண்டவனுக் குண்டு என்றவன் கோயிலுக்(கு)
அள்ளி எறிகிறாய்… ‘மனிதத்தை’ எண்ணிடாய்!
ஊக்க மருந்து
ஏழையாக இம்மண்ணிற் பிறந்ததுன்
குற்றம் இல்லைகாண்;; எனினும் நீ நாளைக்கும்
ஏழையாக இம் மண்ணில் இறந்திடில்
இது உனது மிகப்பெருங் குற்றமாம்!
ஏழ்மை போக்கிடக் கோடி வழிசொல்லும்
இவ் இயற்கையை நம்பின்… நீ வெல்லலாம்.
வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் முக்கியம்
வசப் படுத்திடில் வானையும் அள்ளலாம்.
சென்ற நிமிடமோ மீண்டு திரும்பாது.
சென்ற காலமோ மீளக் கனியாது.
சென்ற வாய்ப்பினை நழுவவிட் டின்றைக்கு
சிந்தித் தெந்தப் பலனும் கிடையாது.
சென்ற நிமிட இழப்பு…இழப்புதான்.
அதை நினைந்திந் நிமிடத்தைக் கைவிடின்
‘இன்றும்’ பயனற்றுப் போய்விடும்; நாளைக்கு
எதுவும் கைகளில் எட்டா தகன்றிடும்.
இந்நிகழ்காலம் தன்னை முழுமையாய்
ஏற்றுப் பயன்கொள்ள வேண்டுங்காண்; மீண்டுமோர்
ஜென்மம் உள்ளதோ இல்லையோ…வாழும் இவ்
ஜென்மத்தை வீணாக்காமல் வாழடா!
இந்த ஜென்மத்தில் வாழும்இவ் வாழ்க்கையில்
இமய உச்சத்தை எட்டிட வேண்டுமே!
இந்த இலட்சியம் கொண்டு முயன்றிடில்
ஏழ்மைச் சா…உனக் கென்றைக்கும் இல்லையே!
இயற்கையின் நீதி இது!
ஏழைகள் சிந்தும் கண்ணீர்
எரிமலைக் குழம்பே ஆகும்.
பாய்ந்தது பரவி…ஓர்நாள்
பாறையாய் வதைத்தோர் மீது
போய்ச்சேர்ந்து உறையும்; அன்னார்
பொருள் செல்வம் சமாதியாக்கும்.
வாடியோர் மனக்குமுறல்
வரலாற்றைப் புரட்டிப் போடும்.
ஆயிரம் உயிர்விதைத்து
அவயவம் தாரை வார்த்து
வேதனைக் காயம்பட்டு
சொத்துக்கள் தொலைத்திழிந்து
காதலும் பிரிந்து…ஆண்ட
கலைகளும் புதைந்து…மண்ணில்
பீடைகள் மலிந்த தற்கும்
பலன் ஒருநாளிற் தோன்றும்.
விதைத்ததன் பலன்முளைக்கும்.
இலாபங்கள் சுயநலங்கள்
பாராது இங்கே சாய்ந்து
எருவான உயிர்தழைக்கும்.
சதிகள் செய் யாது சேர்த்த
திருதொலைந் தாலும் மீளும்.
அதர்மங்கள் வென்றும்…வீழும்!
தர்மமோ வீழ்ந்தும்…வெல்லும்.
இன்றுள்ள மேடு…நாளை
பள்ளமாய் மாறும்; பள்ளம்
இன்றெனில் நாளை மேடாய்
ஆகிடும்; பழிபாவத் திற்கு
என்றைக்கும் பலன்கிடைக்கும்.
என்றென்றும் நியாயம் நீதி
வென்றெழும்; வேதனைக்கு
விடிவு நிச்சயமாய்த் தோன்றும்.
உண்மைப் பொன்
தூய்மையான உண்மை தூயபொன்னுக் கொப்பாகும்!
தூய்மையான உண்மைப் பொன்…
சுடரும் சிறு சூரியனாம்.
தூய்மையான உண்மைப்பொன் மங்காது.
எத்திரவம்
பட்டாலும் கறுக்காது.
துயரச் சுடுதணலில்
விட்டாலும் புடம்போட்டு மேலும் ஒளிருமன்றி
மாற்றுக் குறையாது;
மவுசும் பெறுமதியும்
காலங்கள் மாறிடினும் கடுகளவும் மாறாது.
பொன்னழகு தானே புவியின் முதலழகாம்!
பொன்னை அணிதல் புவியினுக்குக் கௌரவமாம்!
பொன்தானே மங்களத்துப் பொருளாம்!
கஜானாவின்
பொன்தானே…உலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷமாம்!
பொன்னழகு தானே
பொருளுக்கும் ஆதாரம்?
பொன்..அதிகம் தேடல் புவியின் பெருங்கனவாம்!
உண்மைக்கும் இவைபொருந்தும்;
உவமைக்கும் உவமையிதாம்!
பொன்னில்லா ஏழையா நீ..?
உண்மையினை அணிந்துகொண்டால்…
பொன்னணிந்த புகழைவிடப் புகழடைவாய்
நிச்சயமாம்!
மனக்கலக்கம் மாற்றும் மருந்து
ஒருசிறு இடரும்
ஒருசிறு பயமதுவும்
ஒருசிறிய காற்றாய் உளக்குளத்தின் மேற்பரப்பைக்
கலக்கிச் சலன
அலைகளினைத் தோற்றுவிக்கும்!
சலன அலைகிளம்பத் தொடங்கின்
அதுதொடர்ந்து
குளத்தின் சமநிலையைக் குளப்பும்;
மறுபடியும்
குளமமைதி கொள்ள
“குலைத்த காற்று திரும்பித்தான்
சென்றது” எனுமுணர்வை
குளம்உணர்ந்து கொள்ளவேண்டும்;
காற்றகன்ற பின்னாலும் அதனதிர்வும்
அதன்பரிவும்
நீடித்தால்…எழுந்தஅலை நிற்காது என்பதனால்
காற்றின் அதிர்வும் பரிவும்…
உடன் அகலவேண்டும்;
குளம்அமைதி கொள்ளல் எப்போதும் சாத்தியமா?
குளமமைதி கொள்ளவே கூடாது என்பதுதான்
விதியின் விருப்பா?
வில்லங்கச் சிறுகாற்றும்,
விசமத்துக் காகக் கல்லெறியும் விண்ணர்களும்,
தூண்டிலிட்டு மீன்பிடிக்கத் துணிவோரும்,
பருந்துகளாய்
சுற்றித் திரிகையிலே
குள அமைதி சாத்தியமா?
காற்றைத் திசைதிருப்பும் கையும்
கல்லெறிவோரை
மாற்றும் மனமும்
தூண்டிலிட வேறு இடம்
காட்டும் கடைக்கண்ணும்
உன்னிடத்தில் இருக்கிறதே!
நீ நினைத்தால் எந்தன் உளக்குளத்தில்
சலனஅலை
தோன்றிடுமா?
என்மனக் குளம்கலங்கிக் கிடந்திடுமா?
அகத்தாலும் புறத்தாலும்
புறத்தாலே ஒன்றுகூடிப் புன்னகைத்து மலர்கின்றோம்!
அகத்தால் இணைந்து
அமைதி மகிழ்வூறும்
நிலையிற் சிலிர்த்தோமா?
அகம்திட்டித் தீர்க்கையிலும்,
அகமோ ஆயிரம் விமர்சனத்தை வைக்கையிலும்,
அகமோ ஏற்றத் தாழ்வுகளை
எடைபோட்டு
உயர்வுதாழ்வுத் தடிப்பு அகங்காரம் கொள்கையிலும்,
புறத்தாலே தழுவிப் போலியாய்ச் சிரிக்கின்றோம்!
புறக்கையில் கத்தியில்லை
கைகுலுக்கிப் பூக்கின்றோம்.
அகக்கத்தி கொண்டு வெறி
தீருமட்டும் குத்துகிறோம்!
அகம்நாறப் புறத்தில் சந்தனமும் சாத்துகிறோம்!
அகத்தாலும் புறத்தாலும்
அசலாய் அளவளாவி
மகிழும் தருணங்கள் மனிதரிடை குறைந்துபோன
கலிகாலம் இன்று;
பொய்யாகக் காதலித்து
பாசம் மரியாதை பணிவினிலும்
பொய்புனைந்து
வாழ்வினது கற்பின் கண்ணியத்தைக் காற்றில்விட்டு
“மானுடம் வெல்லுதென”
நவீன வளர்ச்சிகொண்டோம்!
கடற்கரை இரயிற் பாதை
தண்டவாளக் கரையோரம் தனித்து இருக்கின்றோம்.
ஓன்றுமே பேச மனமில்லை
இடைக்கிடை
மௌனம் கலைத்து மனதும் தடதடக்க
அங்கிருந்து இங்கும்
இங்கிருந்து அங்குமாய்
இரயில்கள் கடக்கும் இரசிப்போரைக் கணக்கெடாது!
அதிர்கின்ற தண்டவாளப் பரிவில்
மிருதுவான
இதயமுங் குலுங்க
இரைந்தடிக்கும் கடலலையில்
இரண்டறக் கரைகிறது எங்கள் நினைவலைகள்!
நிலவு முகங்காட்டும் நிமிடம்
சிரிப்போடு
சலசலக்கும் தாழஞ் செடிகளிடை..,
பாறையிடை,
எழும்பும் கதகதப்பைக்
கடல்எட்டிப் பார்த்திருக்க…
மாலை கருகிக் கருஞ்சாம்பல் இரவாக
மாற…எதையோ நினைத்துவிட்டுத்
தூரத்தில்
வந்துகொண் டிருக்கும் இரயிலின் ஒளிக்கற்றை
அந்தரத்துள் தண்டவாளங் கடந்து
நடக்கின்றாய்!
உனக்கான இரயிலின்று
எப்போதோ போனதனை
அறிந்தும் தண்டவாள அருகில்
இடையிடையே
கடந்தோடும் இரயிலின் காட்டொலிக்குள் மறைகின்றாய்!
இந்த வழித்தடத்தில்
இரண்டுமூன்று நாளின்முன்
எப்படியோ இரயிலில் மோதிச்
சிதைந்தஎங்கள்
நண்பனை நினைத்தபடி
“எங்கே நீ போகின்றாய்”
எனஅறியா வெறுமை மூடி
தனித்துநான் இருக்கின்றேன்!
கடல்
கடலும் அதுவே…கரையும் அதுவே…
படகோடு நானும் பழசே —அடடே
புதுஅலைகள் மட்டுமே பொங்கிப் பெருகும்
அதிசயத்தில் கோடி அழகு!
உலகே பிரமாண்டம்! மூன்றிலிரு பங்காய்த்
தழுவும் கடலோ வியப்பின் —தலைப்பாகும்!
ஓர்துளியும் பூமிவிட்டுச் சிந்திச் சிதறாமல்
ஆர்க்கும் அதிலுமுண்டு அன்பு!
கோடானு கோடி உயிர்கட் கமுதூட்டும்.
தேடாத் திரவியங்கள் சேர்த்தருளும் —தோழா…கேள்
மண்ணுருண்டை ஒன்றை மழைகரைத்தல் போல்…நிலத்தை
தின்னும் கடல்சிரித் தே!
இத்தனை கொண்டும் எளிமை அமைதியுடன்
சித்தனென மோனத் துறவியென —நித்தியமும்
காக்கும் கடலிடம்நாம் ஞானம் பயிலவேண்டும்
வாழவழி காட்டுமது வா!
கடலாடும் சித்துக் கனக்க! நிதமும்
கடல்செய்யும் அற்புதங்கள் காண்க! —கடற்சித்தன்
தெய்வ இயற்கையின் தூதன்; அவனைஆய்ந்தால்
உய்யும் வழிகளுண் டுணர்!
ஈரக்கால் மணலாய்…
ஈரக்கா லோடு மணலில் நடந்து வந்தேன்.
நேரஞ் செல்ல ஈரம் காய
வெண் மணலெந்தன்
பாதத்தில் ஒட்டிப் படர்ந்து கிடந்தது…பின்
தாமாய்ச் சிலது
உதிர்ந்து விழுந்தது…நான்
பாதங்களை உரஞ்ச
சொரசொரென்றுஞ் சிதறிற்று…இம்
மணலொவ் வொன்றும்
என்மனதை நெருடினவாம்.
ஈரங்கண்டா லென்னோடு ஒட்டி
மணல்இருக்கும்!
ஈரங்காய… என்னை விட்டே உதிர்ந்துபோகும்!
ஒவ்வோர் மணலிலும் ஒருநண்பர் புன்னகைத்தார்.
ஈரமெனச்…செல்வம்
பதவி சிரித்ததுவே.
காலுக் குவமையாயென் வாழ்வு நகைத்திடுதே.
ஆச்சரியக் கடல்
ஆயிரம் ஆயிரம் அலைச்சிறகு அடித்தடித்து
வானுக்கும் மண்ணுக்கும் இடையே
நிதம்பறந்து
எங்கேதான் போகிறதோ
கடலென்னும் இப்பறவை?
எங்கே இருக்கிறது
இதன்கூட்டைக் கொண்ட கிளை?
குயில்களது கூவல்போல்
இதனின் தொடர்கூவல்
அயலெங்கும் கேட்டிடுது….அனைத்தும் அதிர்கிறது.
தீக்கோழி,
தீயில் இருந்துயிர்த்துப் பறந்துபோகும்
பீனிக்ஸ்,
மழையுண்ணும் சக்கர வாகம்..,என்று
வெவ்வேறு இயல்புள்ள பறவைகளைப் போல்;;..
இதுவும்
எவ்வாறோ உருவாகி எம்முன் பறந்திருக்கு!
இத்தனை பெரிய
இராட்சதப் பறவையிட்ட
முட்டையோ நிலவென்று?
முன்னிருந்த என்பிஞ்சு
கேட்டாள் ஒருகேள்வி…
கற்பனையின் ‘அடுத்தகட்டம்’
கேட்ட அவளிடத்தில் உயிர்த்ததனைக்
கண்டயர்ந்தேன்.
ஆச்சரியம் மனித ஆற்றல்..
இதை ஏற்கின்றேன்.
பிரம்ம முகூர்த்தம்
எத்தனை நவீன கடிகாரம் வந்தாலும்,
எவ்வகையில் புதிய
வளர்ச்சி நிகழ்ந்தாலும்,
மனிதர் அனேகர் இதன்கூவல் மறந்தாலும்,
விடிந்தால்…சிலசமயம்
கறியாகிப் போகையிலும்,
அதிகாலைப் பொழுதில் அனேகமாகச் சேவல்கள்
கூவி “விடிந்துகொண்டு இருக்” கென்று
உசாராக
இப்போதுஞ் சொல்வதனை
இன்று தற்செயலாய்
வேளைக் கெழும்பியதால் யான்கேட்டேன்;
பாவமிந்தச்
சேவல்கள் அறிந்திடுமா மனிதரின் மனமாற்றம்?
சேவல்கள் அறிந்திடுமா
நரர் துயிலின் நேரமாற்றம்?
சேவல்கள் அறிந்திடுமா உதயத்தின் குணமாற்றம்?
ஆனாலும் சேவல்கள்
அதிகாலை துயிலெழும்பும்
தமது இயல்பை தம் ‘நிற மூர்த்தத்தில்’
பரம்பரை பரம்பரையாய்ப் பெற்றின்றும் கூவியன.
“கேட்பாரோ மனிதர் கேட்காரோ”
கவலையற்றுக்
காலையிற்தம் கடனிதென்று
கூவிச் சிலிர்த்துளன!
பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்கள் பலரைத்
தரிசித்து மகிழ்ச்சியிலே சிறகடித்துப் பாடியன!
மனிதரில் அனேகர்இப்
பிரம்ம முகூர்த்தத்தில்
எழும்பும் பழக்கமற்று
இறுகித் துயில்கின்றோம்.
அதிகாலை துயிலெழும்ப வேண்டுமென்ற
எங்களது
பரம்பரை இயல்பு எம் ‘நிற மூர்த்தத்தில்’
விகாரமுற் றழிந்ததுவோ…?
தேவர் வரம்நல்கும்
பிரம்ம முகூர்த்தத்தில் குறட்டைவிடுஞ்
சடங்களானோம்.
சுயத்தை அழித்து அழித்து
இந்தா மீன் என்று எழுதுகிறாள் ஒருவட்டம்!
இந்தா பாம்பென்று
எழுதுகிறாள் ஓர்கீறல்!
ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஏனா எனச்சொல்லி இயம்புகிறாள் ஏதேதோ!
தன்பாட்டில் எதையோ கதைத்தபடி
கோடுகளை
சின்னக் கிறுக்கல்களைக் கீறிச் சிரித்தபடி
ஒன்றுரெண்டு மூன்றென்றும் பாடுகிறாள்!
உருவங்கள்
ஒட்டுகிறேன் என்று
உழுந்து அரிசியினைக்
கொட்டிப் பசைபூசிக் குவிக்கின்றாள்!
அவளுக்கு
என்றோர் குறியீட்டு மொழியைப்
படைத்துவிட்டு
தன்மொழி விளங்கவில்லை எமக்கென்றும்
கோபித்தாள்!
அவளின் மொழியை அழித்துத் திருத்தி…நம்
மொழியை அவள்மேல்
இனிநாம் திணித்திடுவோம்!
தன்சொந்தக் கற்பனையை,
தன்சொந்தச் சிந்தனையை,
தன்படைப்புத் தனித்துவத்தைத் தவிர்த்தா
இவள்வெல்வாள்?
பட்சிகளின் மாநாடு
எந்தன் குருவி இடியப்பம் சொதியோடு
அந்திச் சிறுஉணவு அருந்துகிறாள்.
என்தோளில்
தொற்றித் துவண்டு துடியாட்டக் கையசைத்து
பற்றியென் முகத்தில்
பளீரென் றறைந்துவிட்டு
சிங்காரச் சிரிப்பு வலையையெங்கும் வீசுகிறாள்.
எங்கள் அயலில் இவளைப்போல்
எத்தனையோ
வண்ணக் குருவிகள்;
வாயாடிப் பறவைகள்;
சின்னஞ் சிறுசிட்டு, திரண்டுவரும் புலுனிகள்,
மின்தந்தி மீது விழுந்தெழும்பும் கரிக்குருவி,
கானக் குயில்கள்,
கரணமிடும் காகங்கள்,
சேவல்கள்,
விறாத்துக் கழுத்துவெட்டிக் குஞ்சுகள்,
தூரப் பறந்தாலும்
தொடர்ந்து நிதம் கையசைத்துப்
போகின்ற வெளவால்கள்,
புறுபுறுக்கும் வெண்புறாக்கள்,
இத்தனை பட்சிகளும் இதம்பதமாய்க் குரல்வைக்க
புத்தம் புதியஇசை
புரளும் அயல் மீதலையாய்!
எந்தன் குருவி இவற்றைவிட ஓர்விநோதச்
சந்தம் இசைத்துத் தலையாட்டி ஆடுகிறாள்!
வாயினிலே காற்பங்காய்…
முகத்தில் முக்காற்பங்காய்…
தீத்திய உணவிருக்கச் சிரிக்கின்றாள்!
சுற்றியுள்ள
அத்தனையும் அவளின் சிரிப்பு வலையினிலே
சிக்கி மலர்ந்து சிலிர்க்க
நேற்றைப்போல்
எந்தன் குருவி இடியப்பம் சொதியோடு
அந்திச் சிறுஉணவை
இன்றும் அருந்துகிறாள்!
பூவும் வண்ணத்துப் பூச்சிகளும்.
பிஞ்சு விரல்களினைப் பொத்தி விரித்தபடி
குஞ்சுக் கரங்களினால்
வண்ணத்துப் பூச்சிகளைப்
பிடிக்கத் துடிக்கிறாளென் தோளமர்ந்து
பேரழகி !
முடிவில்லாத் திக்கின்மேல்
முத்தங்கள் இட்டெந்த
திசைகளிலும் சிக்காமல் செல்லும்வண் ணத்திகளைத்
தானே பிடிப்பனெனத்
தாவிக் குதிக்கின்றாள்.
வண்ணத்துப் பூச்சியொன்றின் வர்ணம்
அதன்இறகின்
மென்மையில் இருந்தொருநாள்
அவள்விரலில் ஒட்டியதால்…
கையிலின்று சிக்காத அதன்வர்ணம்
எங்கென்று
கைவிரலிற் தேடி
பிடிக்கமீண்டும் துள்ளுகிறாள்.
வண்ணத்;துப் பூச்சிகளின் பின் நானும் போகின்றேன்.
தன்னார்வம் குறையாமல்
தாவிஅவள் முயலுகிறாள்.
ஓடிக் களைத்து,
உச்சியந்தப் பூச்சிபோன
பாதையைப் பார்க்கின்றேன்…!
பயணித்த தடமுமற்றுப்
போயிற்றது;
ஏமாந்து போச்சென் மகள்விழிகள்.
யாவரையும் உச்சும் யமகாதகப் பூச்சி
பூவொன்றிற் போய்த்தானே ஓய்வெடுக்கும்?
‘அவளுமொரு’
பூவென்று அவைகளுக்குப்
புரியவைப்பேன் வெகு விரைவில்!
காற்று வரும் காலம்
காற்று வருகின்ற காலமென்று ஒன்றிங்கே
நேற்று இருந்தது.
நெருப்பான கோடைதாண்டிப்
பூக்குமந்தக் காலத்தின் பொழுதெல்லாம் இனிப்பாகும்.
தூக்கும் உடம்பை;
சிறகெம்மில் பூட்டிவிடும்.
சோம்பேறி யாகக் கிடந்த தலைமுடியை
வீம்புக் கெழுந்து ‘அது வீரனாக’
ஆடவைக்கும்.
‘மகரந்தச் சேர்க்கை-மணம்’
மலரினில் செய்துவைத்து
வகைவகையாய்க் காய்கள் பழுத்து விழத்தூண்டும்.
எங்கெங்கோ இருந்து
எத்தனையோ வாசனையை
இங்கு வருங்காற்று எடுத்துவரும்.
காய்ந்து
வரண்ட உடலை,
மண்ணை, மரஞ்செடியை,
உரசி உரசித்தான் காற்றுக் குளிரவைக்கும்.
காற்றுவருங் காலத்தை
எதிர்பார்த்துத் தவமிருந்து
காற்றைக் கலக்கப்
பட்டங்கள் நாம் விடுவோம்.
எட்டுமூலை, சானா, கொக்கன், பிராந்தனென்று…
விட்டநம் பட்டத்தின் விண்..
காற்றின் மூச்சோடு
சுதிசேர…இரவிரவாய்த் தூங்காமற் கதைபறைவோம்!
அதிவிசேஷம் அம்மாத முழுநிலவு;
அதன்கீழே
காற்றோடு கட்டிப் புரண்டு களித்திருப்போம்!
காற்று வருகின்ற காலமென்று
ஒன்றிங்கே
நேற்று இருந்தது;
இன்றைக்குக் காலந்தான்
வருகிறது;
சுகமான காற்றெங்கே வருகிறது?
பறவைகளின் பாடல்
இலையுதிர் காலம் எதையும் துகிலுரிந்து
அழகைப் பறித்து
அயலை வெறிக்கவைக்க
புதிய வனந்தேடிப் போகும் பறவைகளின்
துயர்தோய்ந்த பாடல்களை
பொட்டல் வயல்வரம்பில்
இருந்துநான் கேட்கின்றேன்…
எங்கும் வறட்சியினால்
பொருக்குப் பொருக்காய் நிலம்பிளந்து
புல்பொசுங்கி
உலர்ந்து கிடக்கிறதே!
வாய்க்கால் தடமழிந்து
குளங்குட்டை தூர்ந்து தரையும் கொதிக்கிறதே!
மருந்துக்குக் கூட
கருமுகில் இல்லாமல்
கருநீலமாய் வானம் காய்ந்து கனல்கிறதே!
இலையுதிர் காலம் எவ்வாறு தோன்றிற்று?
இலையுதிர் காலத்தை
எவர்கூட்டி வந்ததிங்கு?
இலையுதிர்த்துத் துகிலுரியும்
துச்சாதனன் என்று
தலையாட்டிக் கோடையனல்
சண்டித்தனம் விடவும்
பறவைகளின் துயரப் பாடல்கள்
என்மனதை
அறுத்தபடி செல்ல
மீண்டுமொரு வசந்தகாலப்
பறவைகளின் குதுகலப் பாடல்தான்
மனஇரணத்தைக்
குறைக்கும்;
மருந்துகட்டிக் குணமாக்கும்;
காத்துள்ளேன்!
வாச மொழி
ஓவ்வோர் மரங்களும் என்ன மொழி பேசும்?
எவ்வாறு அவைதமக்குள்
எதையும் உரையாடும்?
அருகருகே இருக்கும் மரங்கள்
தமக்குள்ளே
நெருங்கி அளவளாவி
நிற்பதுபோல் தான்கணமும்
தெரிகிறது எந்தனுக்கு!
காற்றடிக்கக் கைகொட்டிச்
சிரிப்பதுபோல் இருக்கும்…சிந்தித்தேன்
மரங்களுக்குள்
பேச்சு வளக்கெதுவும் இருக்கிறதா?
பெரும்பாலும்
மூச்சுக் காட்டாமல் மோனமாய் இருந்திடினும்
ஏதேனும் ஒருசைகைப்
பாஷையேனும் இருக்காதா?
கேட்டபடி இருக்க…
கிளையொன்று எனையுரசிப்
பேசிற்று;
“மரங்களுக்குள் பேச்சுமொழி ஒன்றுண்டு
ஆனால்…அதைமற்ற
மரவகைகள் தாமறியும்.
எங்களது வாய்கள்…இதழ்விரித்த பூக்கள்தான்.
மங்களப்பூ வாயின் மணம்தானே
நம்பாஷை!
அப்பாஷை யாலே அருகில்
மரங்களுடன்
எப்போதும் பேசுகிறோம்;
இடையிடையே மகிழ்வுபொங்கின்
எண்ணற்ற வாய்மலர்ந்து
இசைகூட்டிப் பாடிடுவோம்!
அந்நேரம் வாசத்தில் வேறுபாடு நீர்காண்பீர்.
உடல்மொழியும் எங்களுக்கு உண்டு
எங்களுக்குள்
தொடல், தூண்டலாக இதுதொடரும்” சொல்லிற்று!
இப்போது மலர்களது
வாசம் பரவிடுதே….
அவைகள் தமக்குள்
எதைப்பேசு கின்றனவோ
எனும்புதிய கேள்வி எனைக்குடையத் தொடங்கிடுது.
நடப்பும் நனைவும்
மழையினது மைம்மல் முழுதாய் மறையாத
பொழுதின் நிழல்…
வெள்ளம் தேங்கிப் பொலிந்துள்ள
நிலத்தில் விழ, குன்று குழியாய் நெடுத்திருக்கும்
தெருவைக் கடந்துமே செல்கின்றேன்.
இருபுறமும்
பசுமை…மௌனப் பசைபூசி ஒட்டுண்டு
அசைகின்ற காற்றுக்கு மட்டும் சலசலக்க
வாய்க்காலிற் தேனாய்
வழிந்தோடும் சிற்றோடை
வாய்பார்த்து என்னை வழியனுப்ப…நடக்கின்றேன்!
தூர அடிவானைத் தொடுமாப்போல்
வரம்புகள்
ஆழவேர் விட்ட
அச்சறுக்கை வயல்வெளியில்..,
சிலஇடத்தில் நரைத்த தாடியென முற்றியநெல்
தழைய
பிறபச்சைத் தாவணியாய் அசைந்திடையில்..,
என்நினைவு நெற்குருவி ஆகி
எங்கெங்கோ
சென்று திரும்பியென்
சிந்தைக் கூடாடுகையில்..,
முடிவு தெரியாமல்
முன்செல்லும் வீதியினைக்
கடக்கின்றேன்!
கண்முன்னே காப்பரணாய்ப் பனங்கூடல்
எதையோ நினைவூட்ட
‘எல்லாங் கடந்தவனாய்’
விதியைமட்டும் தூற்றாது விரைகின்றேன்;
தனிப்பயணி…
தனிப்பயணம்…காற்று வருகிறது வழித்துணையாய்!
இறுதிவரை நானோர் தனிப்பயணி
என்பதனை
இறுதிவரை நாமெலோரும் தனிப்பயணி என்பதனை
வெறுமை வெளி…உணர்த்த
விழிகளுக்குள் எட்டாத
தெருவில்நான் சென்று சேருமிடஞ் சேருமட்டும்
நடக்கின்றேன்;
மழை…பலக்கத் தொடங்கிற்று…
நனைகின்றேன்!
மேலாண்மை
எத்தனை எத்தனை காலடிச் சுவடுகள்?
எத்தனை எத்தனை
காதலரின் விரலெழுத்து?
எத்தனை எத்தனை இளஞ்சிறார் கட்டிவைத்த
சிற்பங்கள், மண்கோட்டை?
சிறிது பெரிதாக
எத்தனை எத்தனை சிப்பி, சங்கு, ஊரி ஊர்ந்த
சித்திரங்கள்?
நண்டுகளின் சிறுகிறுக்கல்?
கரைதிரும்பிக்
கொத்தாய் வலையிழுத்துக் கொட்டுகையில்
துடிதுடித்துச்
செத்துவிழும் மீன்களினால்
மண்கலைந்த அடையாளம்…,
அத்தனை தடங்களையும்
அரைநொடிப் பொழுதுள்
சத்தமிட்டு வந்தேன் அழிக்கிறது…ஆழியலை?
ஊழிப்பெரு வெள்ளம்
சிறியஒரு ஹைக்கூவாய்ச்…சிந்தின சிலதுளிகள்.
பிறகு…அடிகள் பெருக எழும்
பாவினமாய்த்
தொடர்ந்து பொழிந்தோர் புராணமாகிப்
பெருக்கெடுத்து
காவியமாய் பின்பு பெரும் காப்பியமாய் மாறி…
வெள்ளம்
காடாகித் திசையெங்கும் கவிந்து பரவிற்று.
நிலந்தெரிய முடியாமல்
நீரில் அலை பொங்கிற்று.
பாதைகள் வயல்கள் பதுங்கின வெள்ளத்துள்.
பாலங்கள் மூழ்கியதால்..
பயணம்போச் சிடைநடுவில்.
“ஹோ”என்ற பேய்க்கூச்சல் போட்டபடி
போர்க்களத்தில்
பாய்கின்ற சைனியமாய்
பள்ளத்தை நிறைத்து..மேவி
கடவுளொடு கலக்கும் வெறிப்பக்தராய்
வெள்ளம்
கடல்தேடி அலைய..அதன் காலிடறலிற் காடும்
மாநகரும் மூச்சுத் திணறி நடுங்கிற்று.
கொள்ளளவைத் தாண்டிக் குவிந்தால்
செல்வமதும்
அள்ளுண்டு போவதென..
குளமெல்லாம் வான்பாய்ந்து
கட்டுடைக்க ஊரே கடலுக்கு உவமையாச்சு.
ஈரஞ் சுவறிச் சன்னி பிடித்து…வெயில்
தலைதுவட்ட வாராத
மப்புமந் தாரத்தால்
பலஊர்கள் காய்ச்சலிலே படுத்த படுக்கையாச்சு.
யாருக்கு யார்தான் உதவுவது?
தம்மைத்தாம்
காப்பாற்ற முடியாமல் கனவுங் கலைந்துபோச்சு.
பயிர்கள் அழிந்து,
பலநூறு கால்நடையின்
உயிரும் தொலைந்து,
களஞ்சியங்கள் நெற்குதங்கள்
உயிர்ப்பும் முடிந்து, வருநாளில்…
பசிப்பேயின்
ஊழிக்கூத் தெங்கும் அரங்கேறப் போகிறது!
யார்நினைத்தார்..?
உயிர்மழையே யமனாக மாறியது!
மௌனத்தின் அர்த்தம்
மௌனம் ஒருஇடத்தில் மலிந்து கிடக்குதென்றால்…
மௌனத்துள் ஓர்பகுதி
அமிழ்ந்து கிடக்குதென்றால்…
எத்தனையோ அர்த்தம் இருந்திடலாம் அதற்குள்ளே!
அவ்விடத்தில் யாருமே அற்று இருக்கையிலும்,
அவ்விடத்தில் ஊமைகளே
அமர்ந்து சிரிக்கையிலும்,
அவ்வடத்தோர் பயத்தில் அயர்ந்து நடுங்கையிலும்,
அவ்விடத்தோர் இறந்து அடங்கிக்
கிடக்கையிலும்,
அவ்விடத் திருப்போர்…
வாய் கைகள் கட்டுண்டு
அவ்விடம் விட்டகல இயலாமற் தவிக்கையிலும்,
அவ்விடத்தில் ஆயுத முனையில்
மனிதர்கள்
செய்வ தறியாமல் விக்கித் திருக்கையிலும்,
அவ்விடத் திருப்போர் அகமுருகிப்
பிரார்த்தனையில்
தீராத காதற் தேடற் திளைப்புதனில்
அவ்விடத்தை மறந்தே சிலிர்த்து உறைகையிலும்,
அவ்விடத்தில்…. மௌனம்
ஆட்சிசெய் திருந்திடலாம்!
மௌனம் ஒருஇடத்தில் மலிந்து கிடக்கென்றால்
எத்தனையோ அர்த்தம்
அதற்குள் இருந்திடலாம்!
வராதனவும் வந்தனவும்
தேவதைகள் வந்ததெனச் செய்தியெதும் வந்ததில்லை.
தேவர்களோ தேவ தூதுவரோ
தேவலோகம்
மீதிருந் திறங்கி இரங்கி உதவவில்லை.
ஏதும் அருளை இணங்கித் தரத்
தெய்வம்
ஏதும் அவதாரம் எடுத்துவந்த சேதியில்லை.
நாதியற்ற பேரை,
நடுத்தெருவில் நிற்போரை,
ஆதரித்து அவரின் அழுத விழிதுடைக்க
ஞானியரோ…
சித்து விளையாடும் மௌனிகளோ…
யாரும் திடீரென்று வந்துபோன சாட்சியில்லை.
ஆகக் குறைந்தபட்சம்
“அரனின் அடியான் யான்;
வாருங்கள் வந்து பஜனைசெய்து வயிறாரச்
சோறுண்போம்;
துயரில் சிறிதைத் துடைத்திடுவோம்
வாருங்கள்” எனச்சொல்லி
மனிதர் முயலவில்லை!
யாரும் அழைக்காமல்,
யார் எவரும் விரும்பாமல்,
பூதங்களும், மர்மப் பிறவிகளும்,
யாரென்று
யாரெவரும் அறியாத…
மரம்விட்டு மரம்பாய்ந்து
பெண்களைத் தொடரும் பிரம்ம இராட்சசர் பலரும்,
அல்லற் படுத்துட் அடங்கா முனி சிலவும்,
நினைத்தால்…நம் வீடுபூந்தெம்
நிம்மதியை நசுக்குகையில்
தேவதைகள் வந்ததெனச் செய்தியெதும் வந்ததில்லை!
பூதம் பிசாசுகளைப்
போய்த்துரத்த யாருமில்லை!
காத்திருப்பு
கால நதிக்கரையில் காத்துள்ளேன்.
காலநதி
சீரான வேகத்தில்
பயணஞ்செய் தோடிடுது!
கால நதியின் கரையெல்லாம் யௌவனங்கள்.
கால நதியின் கரைகளெங்கும் விளைநிலங்கள்.
கால நதியின் கரையெங்கும் நகரங்கள்.
கால நதிமேல் கணக்கற்ற ஓடங்கள்.
கால நதியினிலும் கரையினிலும் மானுடர்கள்.
கால நதியில்
கரைபுரளும் பாடல்கள்.
கால நதியின்மேல்
கண்சிமிட்டும் கனாக்கள்.
“கால நதியில் மகிழ்ச்சி மட்டும் ததும்பிடுதா?”
கேட்க; ஒருஅசரீரி
சுட்டுவிரல் நீட்டிற்று.
ஆங்கே அந்தக் கரைகளிலே…
சிதைந்திடிந்த
கோட்டைகள், தகர்ந்த கொத்தளங்கள்,
திட்டமிட்டு
வேட்டையாடப் பட்ட நகரின் சிதிலங்கள்,
புதைந்தும் பாதி புதையாதும்
அழுகுகிற
புழுக்கள் புரளும் சடலங்கள்,
துண்டுதுண்டாய்
அவயங்கள்,
அங்கிருந் தடிக்கும் பிணவாடை,
மூக்கைத் திருப்பி என் முன்பார்த்தேன்
காலநதி
ஓடிக் கலக்கும் கழிமுகமும் மாகடலும்
தூரக் கிடக்க
துயரும் மகிழ்ச்சியதும்
சமவிகித மான நதியின் கரையிலொரு
சாட்சியென்று;
வாழ்வு தருகின்ற படிப்பினையைச்
சோதித்துப் பார்க்கின்ற சூழலை எதிர்பார்த்து;
“வாழ்வுவைக்கும் பரீட்சைகளில்
வாழ்வேனோ வீழ்வேனோ
யானென்” றெதிர்வுகூறும் ஞானமற்று;
நம்பிக்கை
நீள… ‘இயற்கை நியாயத்தில்’
பாரபட்சம்
வாராது என்றென் மனஞ்சொல்ல
சிறுபதர்நான்
கால நதிக்கரையில் காத்துள்ளேன்!
காத்திருப்பேன்!!
மேய்ப்பனல்ல
மேய்ப்பர்கள் மேற்பார்வை யாளராக அன்றி
மேய்ப்பர்கள் எல்லோரும்
வேட்டையர்க ளாகஇன்று
மாறிக்கொண் டிருக்கின்ற வரலாறு நீள்வதனால்
மேய்ப்பனாக நானெனையே
எண்ண விரும்பவில்லை!
யானோர் திசைகாட்டி, யானோர் உபாத்தியாயன்,
யானோர் சேவகன்,
யானோர் உயிர்த்தோழன்,
யானோர் மனிதன்,
யானோர் மனிதநேயன்,
ஆக…இருக்கமட்டும் விரும்புகிறேனே அன்றி…
மேய்ப்பன் யான் என்றோ,
ஆபத்பாந்தவன் என்றோ,
யானோர் அனாத இரட்சகன் எனத்தானோ
என்றும் உரைத்ததில்லை…
இதயத்தாற் செப்புகிறேன்!
தாமுமோர் மனிதர் எனமறந்து
மேய்ப்பவராய்
ஆகத் துடிப்பவரே அயலினிலே எங்குமுள்ளார்!
மேய்த்துத்தம் ஆதிக்கம் நிலைநாட்டிச்
சொற்கேளா
ஆடுமாட்டை மந்தைகளை
அடக்கிவேட்டை யாடித்தம்
ஆற்றல் நிரூபிக்க… ஆயிரம்பேர் முயல்கின்றார்!
மேய்ப்பர்கள் வேட்டையராய்
மாறி இருந்தாற்தான்
வாகைசூட முடியுமென்ற
மனப்பாங்கு ஓங்கியதால்
மேய்ப்பர்கள்; ஏனையோரை வேட்டையாடத்
தொழில்நுட்பம்
நாளும் பயின்று நமை ஏய்க்கப் பார்க்கின்றார்!
வேட்டையராய் மாறி
வேட்டைப்பல் முளைத்தபின்பும்
ஆபத்பாந்தவர் தாங்கள்…,
அனாத இரட்சகர் தாங்கள்…,
என்று நடிப்போரும் வென்றுவாகை சூடுகிறார்!
யாரெவரும் எப்படியும் இருக்கட்டும்;
அடபோடா
யாரெவரும் எப்படியும் பிழைக்கட்டும்;
யானென்றும்
மேய்ப்பனாக வாழ விரும்பவில்லை!
மானுடரை
மந்தைகளாய் மேய்ப்பதிலே உடன்பாடு எனக்கில்லை!
உறிஞ்சுவோரின் விம்பங்கள்
எனக்குத் தெரியாது… என்னைக் கடித்தெனது
இனித்த இரத்தத்தை
எத்தனை நிமிடங்கள்
உறிஞ்சியதோ நானறியேன்;
கடித்தஉணர் வெனக்கில்லை!
குருதிபறி போவதனைக் குறித்தறிய
முடியவில்லை!
தோலில் இருக்கும் தொடுகைவாங்கிப்
புலன்நரம்பு
எதுவும் உரைக்கவில்லை!
தற்செயலாய்த் தான்பார்த்தேன்…
இரத்தம் குடித்துக் கொழுத்து… மயக்கத்தில்
பறக்க மனமின்றி
நுளம்பிருந்த தென்காலில்.
இவ்வளவு இரத்தத்தை இது உறிஞ்ச
என்னுணர்வு
ஏன்கண்டு எச்சரிக்கா திருந்ததெனக்
கோபமுற்றேன்.
பறக்கவும் ஏலாது;
எனைப்பிரிய மனமுமற்று;
இருந்த நுளம்பை நசித்தேன்!
என்இரத்தத்
துளிஇரண்டு மூன்று என்நிலத்திற் சிந்திற்று.
அதிலெம் வளத்தை,
அதிலெம் விழுமியத்தை,
‘நுளம்புகளாய்’ எவர்க்கும் நோகா துறிஞ்சுவோரின்
விம்பங்கள் தெரிந்தென்னை
வில்லங்கப் படுத்திடுது.
கேள்விச் செடிக்காடு
பதிது புதிதாய் முளைக்கிறது கேள்விகள்!
எனக்குள்ளே சம்பவங்கள்
எதுவெதுவொ விதையெறிய
சிந்தைத் தரையில் சிந்தனையோ நீர்தெளிக்க
திடீர்திடீர் என்று
நான்திகைக்க வைத்தெனக்குள்
புதிது புதிதாய் முளைக்கிறது கேள்விகள்!
முளைத்த நொடியிலேயே
முழுஅளவாய் வளர்ந்தெனக்குள்
கிளைத்தென் நாடி நரம்பெல்லாம்
பூக்கவைத்துக்
காய்த்துச் சொரிந்து கனிந்து
விதவிதமாய்
ஆயிரம் கேள்விகளை
அடுக்கிக்கொண் டிருக்குதவை!
கேள்விகளின் கிளையில்
சந்தேகக் கிளிகளும்
அவ்வப்போ தமர்ந்து வியாக்கியானம்
செய்கிறதே!
நேற்றுவரை நான்நினைத்துப் பாராத கேள்விமரம்
காற்றில் தலைவிரித்து
ஆடுதுஎன் மேல் வளர்ந்தே.
“எப்படி இவைவளரும்”
எனக்குப் புதிராச்சு.
“எப்படி இவற்றுக்குப் பதில்தேட”… வியப்பாச்சு!
நித்தநித்தம் பெருக்கும் கேள்விச் செடிகளினால்…
உள்ளும் புறத்தும் நானே…
ஒருகாடாய்
மாறிக்கொண் டிருக்கின்றேன்!
காட்டானாய் நானானேன்.
கேள்விச் செடிகளுக்கு ஒவ்வொன்றாய்ப்
பதில்கண்டு
அவற்றை எனைவிட் டகற்ற முயல்கின்றேன்.
ஒவ்வொன்றாய்ச் செடிபிடுங்க
என்மனதுள் இருளுறைந்த
மூலை முடுக்குகளும்
படிப்படியாய் ஒளிபெற்று
வருவதையும்;
மனப்பாரம் குறைவதையும் உணர்கின்றேன்.
மழைநாள் நினைவுகள்
“எதையெதை எடுத்து வருகிறது இந்தமழை?
எதையெதை நினைவூட்ட
எழுகிறது இந்தமழை?
எதையெதை” எனக்கேட்டேன்;
இதமான குளிரையென்றும்,
நெகிழ்ந்துருகும் ஈர நினைவையென்றும்,
கதகதப்பில்
முகிழுகிற காம முயக்கையென்றும்,
நடுக்கமொடு
சிலிர்ப்பையென்றும்,
கட்டி இறுக்கித் திளைக்கையிலே
எழும்பும் உடற்சூட்டை என்றும்…பலர்சொன்னார்!
தங்களது வாழ்வின் மறக்க முடியாத
மழைநாள் நினைவுகளை
மறுபடி நினைப்பூட்டி
தங்கள் அனுபவத்தை,
மழையோடு தம் உறவை,
தாமும் மழையும் ஒன்றென் றுணர்ந்ததனைச்,
சொல்லி
ஈரஞ் சுவறி…உடல்சிதம்பி
நனைந்த மனநிலையை மீட்டுரைத்தார்!
தனதிரைச்சல்
ஓலத்துள்… உயிரோ ஒழுகி உதிர்ந்திடையில்
எழுந்த அப்பாவிப் பிறவிகளின்
ஈனசுரம்
மறைத்து;
திசையின் செவிகேட்கத் தடுத்து…அவரின்
கண்ணீரை வேர்வையை இரத்தத்தை
கரைத்து..ஒரு
கடலோடு சமாதிசெய்து போன
மழைநாளை
நினைவுகூர்ந் தகக்கண்ணில் நீர்கசிய
மௌனமானேன்!
மழையோடு ஒன்றிநின்றோர்…மனம்பதறி
“இதைநாம்
மறந்தோமே” எனக்கண்ணில்
மழைபெருகப் போனார்கள்!
தேற்றம்
பார்த்த விழிக்கணையால் பாதை இரணமாச்சு!
காத்திருக்கக்…காலம் கரைக்க…
தசைகரைந்து
தோலோ டுடலும் சுருங்கியே சூம்பிற்று!
“வரும் வரும்” என்று
வழிபார்த்த தலைவாசல்
ஒட்டடையால் மூடுண்டு இருளைமட்டுஞ் சேமிக்க
பேயறைந்த வீடு
சொந்தப் பிதிர்கூட
ஏறிட்டுப் பாரா இடமாச்சு!
முதுமையினால்
வாடி, வருத்தமுடன் போராடி,
வாழ்வுக்கும்
சாவுக்கும் இடையில் ஊசலாடும்
உயிர்… ‘பெற்ற’
விம்பத்தைக் காணுகிற வேட்கையில் அசைகிறது!
கதறக் கதறக் குஞ்சுகளை மரநாய்கள்
இழுத்துக்கொண் டகன்ற
இறுதிக் கணக்காட்சி
மட்டும்…அடிக்கடி வரும்…ஒரே விளம்பரம்போல்
மனத்திரையை மோதிமோதி
நம்பிக்கைக் கற்சுவரை
சிறிது சிறிதாகச் சிதைத்துத் தகர்க்கிறது!
பாழடைந் துலர்ந்த
படலையடி யிலின்றும்
காத்திருக்கும் கண்கள் வழமைபோல் ஏமாந்தே
திரும்பிவிடும் என்கின்ற யதார்த்தத்தை
மீண்டுமீண்டும்
ஏற்காது ஏங்குகிற பாசப் பிறவிகளை
தேற்றுதற்கு என்னிடத்தில்
சொற்கள் கிடையாது.
சொல்ல முடியாக் கதை
உனது நினைவுகள் மணலாய்ச் சிறுகல்லாய்
பெருகிக் கிடந்தனவே
என்பெரிய முற்றத்தில்.
தினமும் அவைகூடிச் சேர்ந்தன..
உனைக்காணாப்
பொழுதில் எனைப்பார்த்துக்
கண்ணைச் சிமிட்டின…நீ
அசோக வனத்திருந்து
மீண்டுவந்தாய் என்றார்கள்.
“வரும்போது பலதொலைத்து வந்தாயாம்”
சொன்னார்கள்.
மௌனம் ஒருவிலங்காய்ப்
பிணைத்திருந்தது உன்னை.
கலக்கம் ஒருமுகிலாய் கவிந்திருந்தது நின்னை.
உன்கையைப் பற்ற
இமையணை உடைந்துகண்ணீர்
வெள்ளமாய்ப் பாய்ந்து
மூடிற்றென் முற்றத்தை.
உன்விரலால் விழிதுடைத்தாய்…
ஊமையாய்ப் பிரிந்துபோனாய்.
முற்றத்தில் குவிந்து கிடந்தஉன் நினைவுகள்…உன்
கண்ணீரால் திரண்டு
கல்லாய் இறுகிற்று.
அந்தப் பெரும்பாறாங் கல்லை
அரும்பாடு
பட்டென் அடிவளவுக் கிணற்றுக்குள்
போட்டுவந்தேன்.
“கிணற்றின் அடியில்
இன்று இருக்குமது
ஒருநாள் வெளிவந்து ஒம்பிக்கும் உன்னுணர்வை
உலகுக்கு” என்கின்றேன்!
உன்னைஅன்று எங்குகாண்பேன்?
மூச்சும் குழலும்
உன்னுடைய மூச்சால் உயிர்த்து இராகங்கள்
எண்ணற் றிசைக்கும்
புல்லாங்குழல் எங்கே?
வெற்றுச் சடமாய் விறைத்திருந்த குழல்;
கண்முன்
முற்றும் துறந்த முனிபோல் மரத்த குழல்;
மேனகை ரம்பையென
மோகம் பொழிந்தபடி
கானம் இறைத்ததன்றோ நின்கருணை மூச்சாலே!
உன்மூச்சு…குழலை
ஊடுருவ ஊடுருவ
உன்விரல்கள்…குழலின்
துளைகளிலே நர்த்திக்க
ஆனந்த இராகங்கள் ஆயிரம் பிறந்திந்தச்
சூழலிற் சொரிந்து
சொக்கவைத்த தூரையெல்லாம்!
உடலினை மட்டும் உசுப்புகிற
மூச்சு…ஊரின்
உயிரை மனதை உறையவைத்த துன்குழலால்!
மாயக் குழலாய், வேய்ங்குழலாய்,
உயிர்ப்பசுக்கள்
பால்சொரிந்து தம்மை
மறந்தனவே நின்மூச்சால்!
அந்தக் குழலெங்கே?
அதையியக்கும் நின்மூச்சின்
சந்தந்தான் எங்கே?
சகலருமே கேட்கின்றோம்.
விந்தையென நீயும் விரைந்தொளிந்து போனதெங்கே?
கொலையின்றி அமையா உலகு
காயங் களிலிருந்து கசிகிறது செங்குருதி!
காயா இரணங்களிலே
வடிகிறது சீழ்;;; நித்தம்
இரவுகளில் தூங்காது இரத்தக் கனியாகி
அழுதழுது காய்ந்து
வற்றலான நின்கண்ணால்
விழுகிறது மிகச்செறிவாய்
ஓரிரண்டு துளிகண்ணீர்.
படுக்கைப்புண் போட்டுப் பாளம் பிளந்திருக்க
எவரும் கவனிக்கா இவனின்மேல்
ஈ மொய்க்க
வடிகிறது ஊனம்.
கேட்டவரம் சாபமாக…
வெடித்த இதயத்தில்
வெளித்ததும்பும் நிணம்; இந்த
உலகே கொலைக்களமாய்,
சித்திரவதைத் தலமாய்,
இலங்குவதே உண்மையென்ற
எதார்த்தம் மறந்துவிட்டு;
கதறலிலும் ஓலத்தை அடக்கிவந்த அமைதியிலும்
பிறந்ததுவே அமைதி இசை
இதனை ஏற்காது;
கொலைகளாலும் வதைகளாலும் வாழுவதே
உலகினுயிர்
என்பதை மறைத்துவிட்டு;
கங்கைகளால்…
காவிரியால்…
மந்திரித்த நீரால்…
மண்ணைப் புனிதமாக்கும்
தந்திரமென் றெதோசெய்து
தனைக்காக்கும் காண்….மனிதம்.
உயிர் தொலைதல்
மனதினது ஆணிவேர் அறுந்துமே துண்டான
அடியிருந்து சாறாய்ப் பெருகிடுது செங்குருதி.
சூடாய்ச் சொரிந்து,
சிலபொழுதிலே குளிர்ந்து,
மண்ணை நனைக்குதது!
வேரின் வலியுணரா
இலையும் கிளையும் இளமொட்டும் பூபிஞ்சும்
விழுதும் வழமைபோல் விண்ணளைய…
வேரறுந்த
இடத்தில் உயிர்போகும் வேதனை பெருகிடுது!
தொடரும் நொடியில் இவ் வலியும்
மெய் வேதனையும்
உடலம் முழுவதை ஆட்கொள்ளும்;
அனுபவிக்க
முடியா வருத்தமுமே மூளும்;
வலியினுச்சம்
உயிரைப் பிடுங்கி ஊரினது எல்லைதாண்டி
எறிந்தும் விடக்கூடும்;
இதுநன்றாய் விளங்கிடினும்…
அறுந்துபோன ஆணிவேரை ஒட்டவைக்க இயலாமல்…
பெருகும் குருதியை
உறையவைக்க முடியாமல்…
நாளை முழுமரமும்
பாறும்இதை மறவாமல்…
சுயநினைவைப் படிப்படியாய்
தொலைக்கிறது காண்…யதார்த்தம்.
காற்று
அனாயாச மாக அசைகிறது காற்று.
அதீத அழகின்றி
ஆர்ப்பாட்டம் எதுமின்றி
ஆக்ரோஷம் இன்றி
அதிரும் நடையுமின்றி
ஆடம் பரங்கள் அணுவுமின்றி
மிக மெதுவாய்,
தேவதை ஒருத்தியாய்,
அவளின் துகிலசைவாய்,
பூக்களெலாம் ஒத்தடம் கொடுக்க
வலிகளைந்து
அனாயாச மாக அசைகிறது காற்று.
திவ்ய நறுமணத்தைத் திசைகளின்மேற் பூசி
அவ்வளவு ஆறுதலாய்
அத்தனை மிருதுவாய்
எவ்வளவு இதமாய் எமைவருடிப் போகுதிது?
மஞ்சள் வெயிலில்
மினுங்கும் இலைகள் ஊடும்,
கொஞ்சமும் அசையாக் கிளைமேலும் நகர்கிறது.
கண்மூடி இந்தக் காற்றை
ரசிக்கின்றேன்.
நெஞ்சாரக் காற்றின் இதத்தை
நுகர்கின்றேன்.
என்மேனி பரவசிக்க எனைமறந்தே
நிற்கின்றேன்.
கையை விரித்து வரும் காற்றை
அளைகின்றேன்.
கைகளிலே சிக்கிடுது…
காற்றில் மிதந்துவந்த
பெயரறியாப் பறவைகளின்
குருதிகாயாச் சிறகுகள்..!.
உயிர்பிரிந்து அனாதையான
சூடகலா மூச்சுக்கள்..!
அனாயாச மாகக் காற்றசைந்து போகிறது!
கரைசேர்க்கும் கலங்கரை
நிலவென்னும் கலங்கரை விளக்கு
நெடுமிரவில்
திசைகாட்டி யாகத் திகழ
அதைநோக்கி
அலைகளிலே மோதி அலைபட்டு ஒருவாறு
கரைதேடும் படகாய்க் கனவோடு நடக்கின்றேன்.
மரங்கள்… உறைந்த
குன்றங்கள் போலிருக்க
“காற்றை, அதன் குறும்பைப்
பொறுக்காதார் கட்டிவைத்தார்?”
என்றெனைநான் கேட்கின்றேன்.
இதயத் துடிப்புக்கு
சுதிசேராச் சிள்வண்டின் இரைச்சல்
தெறித்திருக்க
தொலைவிலொரு ஊழை “இயமனினது அசுமாத்தம்
இருக்கும் வலய”மிது என்றுரைக்கச்
சுதாரித்தேன்.
இருட்கடலில் நீந்தி இலக்கடைய
நிலவினது
ஒளியுதவும் என்றாலும்
உறுமுகிற இயமனினது
மேதியூர்தி அச்சம் ஐயத்தோ டிதயத்தின்
மூலையிலே நாய்போல
எழுந்து சுற்றிப் படுக்குதடா!
எத்தனை கலங்கரை விளக்குகளைக்
கண்டுவிட்டோம்?
எத்தனை கலங்கரைப் பொறியில்நாம்
சிக்கிவீழ்ந்தோம்?
எத்தனை கலங்கரைகள்…‘கானல் ஒளி’ உமிழ
நம்பியே ஏமாந்து
ஈசலாக நாம் வீழ்ந்தோம்?
நிலவுக் கலங்கரையோ
நம்பிக்கை ஒளியூட்ட
நடக்கின்றேன்;
நான்தேடும் இலக்கடைவேன்…நம்புகிறேன்!
நெருப்பினையும் எரிக்கும் நிஜம்.
நெருப்பை அணைக்கிறீரா?
நெருப்பை வளர்க்கிறீரா?
நெருப்பு ஒருபொறியாய் நிலத்தில் புகையுதுதான்.
அதைமுற்றாய் நீவிர்
அணைக்கவும் விரும்பவில்லை!
அதைமுற்றாய் நீங்கள்
வளர்க்கவும் நினைக்கவில்லை!
உங்கள் நலத்திற்கு ஏற்ப
ஒருவிதமாய்
இங்கே தணலைக் கையாள விரும்புகிறீர்.
நெருப்பு அறியாது…
தான் பிறரின் கைகளுக்குள்
தங்கியுள்ள சோகநிலை!
எவரினது கையுமின்றி
நெருப்பு சுயமாக எரிந்திடாது என்பதனை
உணர்கின்றேன் யானிவ் உலகினிலே!
நெருப்பினது
ஆற்றலை உள்ளம் அறிந்திருந்தும்
அதையுமொரு
நாய்க்குட்டி போல
நடத்துகிற வலியோர்கள்,
அவர்களது வரலாறு,
அவர்வகுக்கும் தந்திரங்கள்,
பெரியதெனும் உண்மையினை அடியேன்
உணர்ந்துகொண்டேன்.!
எந்தளவு எரியவேண்டும்…
எப்போது எவ்வாறு
எதையெதை நெருப்பு எரிக்கவேண்டும்…
எதையெதைத்தான்
எரிக்காமல் தணிந்து இருக்கவேண்டும்…
என்பவற்றைத்
தீர்மானஞ் செய்யும் திசைமுகத்தோர்
இலாவகமாய்
தங்கள் நலத்திற்கு ஏற்ப
நினைத்தபடி
நெருப்பினைக் கூட ஆட்டுகிறார்…
ஊமையானேன்.
நிழற் துயர்
“தங்கி இருப்போனின் தகமை எவ் வாறிருக்கும்?”
என்பதற்கு எனது
நிழல் நல்ல சாட்சியாச்சு.
என்னிலே தங்கி இருக்கும் என் நிழல்…எனது
ஒவ்வொரு அசைவிலும் உருமாறும்!
சிலவேளை
நெடுக்கும்,
சிலவேளை நிலைகுலைந்து குறுகிவிடும்.
சிலநேரம் என்முன் நிமிர்ந்து நடந்திருக்கும்.
சிலநேரம் என்பின்னால் ஓடிவரும்… ஏழையாகும்.
நானெங்கே நிற்கின்றேன்?
நானெங்கே செல்கின்றேன்?
என்பதிலென் நிழலினது வாழ்வும்..
அதன் மானமதும்
தங்கி இருக்கும்;
தனியே என் அசைவில்மட்டும்
என்றில்லை;
என்னை வழிநடத்தும் ஒளியினதும்,
என்னை அலைக்கும்
இருளின் திசையினதும்,
விருப்பு வெறுப்புக்கு ஏற்பவும்…என்நிழலோ
குறுகும்,
விரியும்!
தன்விருப்பம் போலநிழல்
எதுசெய்யும்? எதைச்செய்யும்??
தம்காலில் நில்லாதோர்,
இரண்டாம் பிரஜை, எளியோர்,
எனமலிந்து
தங்கியிருப்போரின் தகைமை… நிழல் போன்றிருக்கும்.
உருவும்,
வழிநடத்தும் ஒளியும், அலைக்கழிக்கும்
இருளும்…எதெதென்று
தெரிந்த என் நிழலுக்கே
இந்தக் கதியென்றால்…
இவற்றினுண்மை அறியாத
தங்கி இருப்போரின்
தகைமை எவ்வாறிருக்கும்?
தடைச்சுவர்கள்
கண்கள் அறியாக் கனத்த கயிறுகளாய்
எம்மைப் பிணைத்திருக்கும்
எண்ணிலாச் சடங்குகள்.
எங்கேநாம் போனாலும் “இங்கே போ” எனப்பின்னே
நின்று செடில்பிடிக்கும்
சம்பிர தாயங்கள்.
விட்டு விடுதலையாய்ச் சிறகு விரித்தபடி
கட்டுப்பா டெதுவுமின்றி
ககனம் அளப்பதற்கு
எம்மை விடாமல் எமைத்தடுக்கும்…
யாராரோ
தம்மை நிலைநிறுத்தப்
போட்டுவைத்த சட்டங்கள்.
நாங்கள் விரும்பாத போதும்…நம்
சந்ததியால்
சுமந்து வரப்பட்டு எமக்கும் சுமையாக
அமைந்து விடுகிறது…
அர்த்தமற்ற நடைமுறைகள்.
தடுக்க முடியாத தடைச்சுவர்கள்.
நாம்செல்லும்
இடமெல்லாம் எம்மோடு தொடர்ந்துவரும்!
“கவசங்கள்
இவை”என்று சிலபேர் எண்ணினாலும்
உயிரோடு
நம்வாழ்வைப் புதைக்குமிவை
‘அருவச் சமாதிகள்’
என்பதுதான் நிஜம்; யார்க்கும்
ஏனென்று விளங்காத,
நாம்தவிர்க்க முடியாத, நம்மோடு கூடவரும்
இவைகள் கயிறசைக்க…
ஆடுகிற பொம்மலாட்ட
வாழ்வு…அதன் சுதந்திரத்தை,
ஆழ்மனதின் விருப்புகளை,
நிறைவேற்ற முடியாமல்
‘இவற்றின் சிறைகளிலே’
நீறாகிப் போவதுவே… இன்றும் நிஜ யதார்த்தம்!
வைராக்கிய வலிமை
வளைந்து கொடுக்காமல் வளரும்.
நேராக
வளைந்து கொடுக்காமல் வைரமாகத்
தான் நிமிரும்.
என்னதான் வறட்சி என்றாலும்
வெயிற்கொடுமை
என்னதான் வந்தாலும்
எவருமே அன்பூட்டித்
தண்ணீர் ஒருசொட்டுத் தராத வறுமையிலும்
எந்தப் புயலிடையும்,
எத்தகைய காற்றிடையும்,
எந்தவித வெள்ளம் வரினும்,
கொடுங்கணைகள்
எத்தனை சிதறிடினும்,
எதையும் கணக்கெடாமல்…
தனது சௌகரியம் தனைச்சிறிதும் எண்ணாமல்…
ஆணிவேர் இல்லாப் பொழுதும்
அயற்பக்க
வேர்கள் இடையறாது முயல
அதைநம்பி
ஆதாரம் அத்தனையும் தன்உழைப்பினாற் தேடி
யாரையும் எதிர்பார்த் திராமல்
கருக்குவாள்
தீட்டி நிமிர்ந்து
காற்றோடும் வெயிலோடும்
தீராது மோதி
தீக்குள்ளும் நோய்க்குள்ளும்
தானாய் எழும்பும் வடலிகளைச் சீராட்டி
நிழலுமில்லா வெளியில் நிற்கும்…ஆம்
பனை…எந்த
எழிலுமின்றி…எதையும் சாதிப்பேன்
எனும்ஒற்றை
வைராக்கிய வலிமை யோடெம்
குறியீடாய்,
எமது அடையாளமுமாய்,
எண்ணற்ற நன்மை நல்கி
நிற்கும்…எவரும் தறிக்க வரும்போதும்
சற்றும் தயக்கமின்றி
அடங்கிப் பணிதலினைப்
பற்றி நினையாதெம்
வாழ்வைப்போல் நிமிர்ந்துநிற்கும்.
தவறவிட்ட பொழுதுகள்
அந்தப் பொழுதுகளை அலட்சியமாய்த் தவறவிட்டோம்.
அந்தப் பொழுதுகளின் அழகுகளை;
மேன்மையினை;
சந்தோஷ மொட்டு விரிந்த தருணத்தை;
வெந்த கொதி தணித்து,
வெயில்குறைத்து, மப்போடு
மந்தாரம்…வான வில்லாம் குடைபிடித்து
வந்திருக்கப் பன்னீர் தெளிப்பதெனச்
சிறுதூறல்
சிந்திவிட மௌனச் சிலையாய்… அயலுறைந்த
அந்திப் பொழுதை;
அலட்சியத்தால் தவறவிட்டோம்!
பசும்புல் போர்த்துப் பனிக்குடம்
சுமந்திருந்த
வசந்த வெளியினிலே கைபிசைந்து
வாய்புதைய
நெருங்கி அமர்ந்திருந்து
நினைவுச் சுரங்கத்தில்
பெரும்பாளப் பொன்வெட்டி எடுத்தோம்;
எனினுமோர்
சின்ன இடைவெளியால்
சிரமம் மிக அடைந்து
மென்மை துறந்து மனதினிலோர்
வக்கிரமுள்
உறுத்திக் கிடக்க…
உரசிவிட்டும் பிரிந்தோம்நாம்!
பொறுமை சிறிதுமின்றிப்
புரிந்துணரா தகன்றோம் யாம்!
கொஞ்சமேனும் விட்டுக் கொடுத்திருந்தால்
வக்கிரமுள்
பஞ்சாகிப் போயிருக்கும்…
பலியாகிப் போனோம்காண்!
அந்த முடிவும், அதால்வந்த தனிமையதும்,
இன்று அதனாலே
ஏற்பட்ட துயர்இழப்பும்,
எண்ண உயிரை இரணமாக்கும்
மனஉழைவும்,
என்று.. பெரியவிலை கொடுத்தோம்;
துடிக்கின்றோம்!
அந்தப் பொழுதுகளை அலட்சியமாய்த் தவறவிட்டோம்.
அந்தப் பொழுதுகளை
மீண்டும் அடைவதற்கு
எந்த வழிகளுண்டு?
தீர்ந்துபோகாக் காதலுடன்
அந்த இடைவெளியை நினைந்து
தவிக்கின்றோம்.
நேரத்துடன் வீடேக
மாலை மிகவிரைவாய் மங்கி இருளுதிப்போ.
தூரப் பயணத்தால்,
தொலைவேக வேண்டியதால்,
தூறல் விழுந்து தொடர்ந்திடியும் மின்னலும்
ஏதோ ஓர் அச்சத்தை
இதயத்தில் இழைத்ததனால்,
நேரத்துடன் வீட்டை நெருங்கிவிட வேணுமென்று
சோர்ந்திறுகி மீண்டும்
துணிந்து நடக்கிறதென்
கால்கள்;
அயலில் கவியும் தனிமையதால்…
போம் வழியில் சுடலை, பேயுலவும் வெளி, கடக்க
வேணுமென்ற அச்சத்தால்…
விரிகிறதென் விழிகள்;
மாலை மிகவிரைவாய் மங்கி இருளுதிப்போ!
மழையில் நனைந்தீரஞ் சுவற விரும்பாது,
சூழும் துயரிருளில்…
நிலவுமற்ற நடுவழியில்…
யாரும் விளக்கேற்றித் திசைகாட்டா முட்தெருவில்…
தங்கி அஞ்சுந் துயரைத்
தவிர்க்கும் பதற்றத்தில்…
வீட்டின் நிலையெண்ணி,
எனைக்காணா என்னுறவு
ஏங்கித் துடிப்பதெண்ணி,
எப்படியும் வேளைக்கே
வீடேகி நிம்மதியாய் ஆற வேண்டி,
இதயத்தின்
சத்தம் துரத்த;
நாயூளையும் விரட்ட;
எட்டி நடக்கின்றேன். ஏய்…சகியே!
என்கையைப்
பற்று இறுக்கமாகப் பற்று…பின் தங்காதே!
சற்றே களைத்தாலும் சமாளி;
‘அடி’ எட்டிவை!
எனக்குத் துணையாக…மனதுக்குத் தெம்பாக
எனது பயணத்தில்
இணையாக வா…தொடர்ந்து.
மௌன வார்த்தை முட்கள்
குளக்கரையில் இருக்கின்றோம்…
மௌனத் தபசிகளாய்!
பேச்சுப் பிறக்கவில்லை இருவர் உதடுகளில்.
மௌன மொழியில், கண்ணசைவில்,
சைகைகளில்,
ஏதேதோ பரிபாஷை தன்னில்,
எமக்கிடையில்
உரையாடல் நிகழ்ந்ததுவாய் உணர்கிறது.. எனதுஉளம்!
மாறி மாறி எறிந்தோம் கற்களினை
குளத்திலெழும்
வெவ்வேறு அலைகளினைக்
கண்டுகொண்டோம் இல்லைநாம்!
எறிந்த கற்களினால்
குளத்தினது நீர்மட்டம்
உயர…நமைக் காக்கைகளாய்
நினைத்திருக்குமோ குளமும்?
எமைச்சுற்றி வட்டமிட்ட பெயரறியாப் பறவைகளை,
எம்மீது ஊர்ந்து
கடந்துபோன அட்டையொன்றை,
எம்மீது பூ உதிர்த்த குளத்தோரப் பூவரசை,
எம்மோனம் கலைக்காது
இங்கிதம் காத்தகாற்றை,
எம் தவத்தைக் கண்டுமிக
வியந்த குளத் தாமரையை,
எம்மோனம் கண்டு தாமும் மௌனித்த பட்சிகளை,
சட்டைசெய் யாமல்…
திடீரென்று விடைபெற்றுத்
திரும்புகிறோம்;
காலடியில் துடித்துளன நிமிடங்கள்!
முட்களென உதிர்ந்துளன
நாம்பேசா வார்த்தைகள்!
களவு
தாமரையோ தவளையோ தவமிருக்கும் கொக்குகளோ
ஏதுமற்ற குளமாச்சு என்மனது.
அடுப்பிலிட்ட
தோசைக்கல் போலவே சுட்டு
வரண்டு…காலின்
பித்த வெடிப்பைப்போல்
அடி பொருக்கு வெடித்திருக்கு!
எனது மனக்குளத்தில் இருந்த குளுமைநீர்,
மலர்ந்த மலர்கள்,
தவளைகள், மீனினங்கள்,
தனித்திருந்து புலனாயும் கொக்கு,
சகலதையும்
உன்பார்வை கொண்டேதான் போயிற்று.
மனக்குளத்தில்
வெறுமையும் வரட்சியும் மட்டும் நிறைந்திருக்கு!
மனத்தின் அழகு
முகத்தில் தெரியுமன்றோ…
எனது வெளித்தோற்றம்
கருவாடாய்த் தோன்றுதென்று
எனது அயலின்சொல்
என்செவியில் விழுகிறது!
கருவாடு எப்படித்தான் மீனாக மாறும்? இக்
கருவாடு
உன்கண்கள்
களவெடுத்த அத்தனையும்
திருப்பித் தரும்போது…
மீனாகத் துள்ளி எழும்!
காதல் மழை நனைவீர்.
காதல் மழைகாணாக் கலட்டுத் தரிசாகத்
தானே..நும் மனது
தகித்து வரண்டு புல்
ஏதும் விளையாமல் வெடித்துக் கிடக்குதின்று.
கோபம் விரக்தியிவை
கொழுந்துவிட் டெரிந்திருக்க
உங்கள் மனது கல்லாய் மிகப்புழுதி
மூடிக் கிடந்தது!
வரட்சிக்கு இசைவான
கடின கரட்டுத்தோல் நகருயிர்கள் தானங்கே
நசு;சுகளைக் கக்கி நகர்ந்து
திரிந்தன..ஆம்
இயற்கைப் பசும்எழிலை
இரசிக்கவில்லை உங்கள்கண்.
இனிய மெல்லிசையோடு
இணையவில்லை நும் செவிகள்.
கவிதைகளை இலக்கியத்தைக் கதைக்கவில்லை
உங்கள்வாய்.
முரட்டுக் கரங்களிலே
முளைக்கவில்லை ஒருரோசா.
காட்டு மிராண்டிகளாய்க்
கழிந்ததுதான் நும்வாழ்வு.
வாள், கத்தி இரத்தமும் கொலையோடும்
அலைந்தீர்நீர்.
இவ்வளவே வாழ்வென்று இருந்தீர்;
இருக்கின்றீர்.
உங்களது வட்டத்தைத் தாண்டியும் ஓர்உலகு
உள்ளதென எப்போ உணர்வீர்?
உணர்ந்தாலும்
உமைத்தடுக்க ஆளிருப்பர்;
அதைமீறியா நிமிர்வீர்?
அறியேன்;
‘இது’பற்றி அறிவீரா…அதுமறியேன்!
உங்களின்மேல்…
பாசம், கருணை, அன்பு, காதலெனத்
தூறல் விழுந்தும்மைத்
தூய்மைசெய நேர்கின்றேன்.
வாருங்கள் ‘சமூக’ மழைக்குள்
அழைக்கின்றேன்.
மழைச்சாட்சி
மழைதான் எழுப்பிற்று.
மழைதான் உசுப்பிற்று.
மழைதான் உணர்த்திற்று.
மழைதான் இயக்கிற்று.
மழைதான் உடலுக்குள் மின்சாரம் பாச்சிற்று.
மழைதான் உயிருக்குள் அனற்சூடு ஏற்றிற்று.
மழைதானே சூழலினை
மணியாக மாற்றிற்று.
மழைதான் குளிர்பூசி
இணைத்தொட்டிப் பிணைத்திற்று.
மழைதான் விலகாமல் இருக்க உதவிற்று.
மழையினது பேரோசை
முனகல்களை மறைத்திற்று.
மழை பெலத்து…நாம்நகரப்
புதுவேகம் ஊட்டிற்று.
மழை தணிந்து நாம்களைத்து விழ..
சிரித்து வாழ்த்திற்று.
மழைதன் குளிர்மனதால் ஆசீர் வதித்திற்று.
மழை ஆழ்ந்த மௌனத்துள்
தான்..பொழிந்து நிறைந்திற்று.
மழை;
விடியல் வருமுன்னே திடீரென்று
பொழிந்து..பெய்த
மழை; எமது வாழ்வினர்த்தம் தன்னை
மறுபடியும்
நமக்குணர்த்தி நம்மைப்
புதுப்பித்த சாட்சியாச்சு!
இதயத் துடிப்பு
இதயம் திறந்து எது இருக்கென் றாராய
உதவி;
அனுமதியை உனக்களித்த நீதவானார்?
எனது இதயத்தை
என்அனுமதியும் இன்றி
எனக்குத் தெரியாமல்
சிப்பியெனவே திறந்தாய்!
எனது இதய இருட்டறையில் விளக்கேற்றி
எனது இரகசியங்கள்,
எனக்குப் பிடித்தவைகள்,
எனது கற்பனையின் எச்சங்கள்,
இலட்சியங்கள்,
எனைக்கவர்ந்த முகங்கள்,
இவற்றையெல்லாம் பாதுகாத்தேன்!
எனது கனவுகளைக் கண்ணாடிப் படமாக்கி
தனித்தனியாய் மாட்டிவைத்தேன்!
எப்படியோ இதயத்தை
அடைந்து…அதன்பூட்டை நெம்பித் திறந்து…அதுள்
புகுந்தென் இரகசியங்கள் பார்த்துவிட்டாய்.
அங்கெல்லாம்
நீயே இரகசியமாய்,
நீயே வியப்புகளாய்,
நீயே என் கற்பனையாய், இலட்சியமாய்,
இருப்பதனை
கண்டுமா என் கண்ணைநேர் காண மறுக்கின்றாய்?
வருடல்
பார்வையால் முதலில் பாவியெனை வருடிவிட்டாய்.
வார்த்தைகளாம் பூக்களினால்
பின்னர் வருடிவிட்டாய்.
இதயத் துடிப்பாலும் கொலுசின் ஒலியாலும்
விதவிதமாய் வந்த கனவாலும்
வருடிநின்றாய்.
நெருக்கம் அதிகரிக்க,
நெருக்கம் நெருங்கிவர,
அருகமர்ந்து சுடுகிற மூச்சாலும்
இடைவெளியே
அற்றணைந்த போது இதழாலும்…உடலாலும்…
முற்றாய் எனைமயங்க வைத்தாய்
வருடிவிட்டாய்.
ஓவ்வோர் வருடலும் ஒவ்வோர் விதமாக
தேவநிலை அடைந்தேன் தேவதையே!
நின்ஸ்பரிசம்
பாவம் களைந்ததடி பால்நிலவே!
எனையுனது
மனதாலும் வருடென்று வணங்குகிறேன்.
எனைஎன்றும்
உனது உயிராலும்
வருடிக் கொடுத்தெனது
மனக்கலக்கம் தீரென்று மன்றாடிக் கேட்கின்றேன்.
உவமைக்குள் சிக்காத உணர்வு
காமம் தனித்தொருவர் கடக்க முடியாத
பேராறு;
அதுவோர் பென்னம் பெருவானம்.
எண்ணிக் கணிக்கவொண்ணா திறைந்த கரையின்மணல்.
மென்மை உணர்வுதந்தும்,
மிருக வெறியோடும்,
எம்மைக் கடக்கும் இளங்காற்று.
கைகளுக்குள்
சிக்காத சூரியப்பொற் சிதறல்.
மூச்சடக்கி
முங்கியாழம் காண முடியாச் சமுத்திரம்.
தகதகென் றெரியும் தணற்சுவாலை.
சில கணத்துள்
சகலரையும் தாக்கிச் சரிக்கும் புவிநடுக்கம்.
அகஉணர்வில் தோன்றும் ஆழிப் பேரலை.
புலனில்
ஊற்றெடுத்து உடலை மூழ்கடித்திடும் வெள்ளம்.
சுவைக்கச் சுவைக்கச் சுவைக்கும் கிணற்றுநீர்.
நடக்க நடக்கவே
நீண்டுசெல்லும் பாலைவனம்.
படிக்கப் படிக்கவே
பொருள்விரியும் வேதநூல்.
திடீரென்று தோன்றி நீறிவிடும் விண்கல்லு.
சில்மிஷச் சிணுங்கலுடன்
சிதறியோடும் நீர்வீழ்ச்சி.
கல்லைக் கவிபாட வைக்கின்ற சிற்றோடை.
முற்றத்தில் பூக்கின்ற முல்லை.
அதன்வாசம்.
தொட்டாற் சிணுங்கியாய் துவளும் சிறுஅரும்பு.
பட்டென்ற அதிர்வுக்கே
நொருங்குகிற முட்டையோடு.
காமம் இணைந்திருவர் கண்டடைய முடியாத
உலகின் முடிவு.
உறவினது விஸ்வரூபம்.
உலக உயிர்ப்புக்கு ஊக்குவிக்கும் தேன் அமுதம்.
காமம் தனித்தொருவர்
கடக்க முடியாத
பேராறு; அதுவோர் பென்னம் பெருவானம்.
வேடங்கள் தேவையில்லை
கூடா ஒழுக்கம் இல்லார்க்குக் குவலயத்தில்
வேடங்கள் வேண்டிய தில்லை!
பளபளக்க
மொட்டை அடித்தோ, முகம்மூடி நெஞ்சுவரைத்
தாடி விழுதுவிட்டோ,
சராசரிநான் இல்லையென்று
பட்டையிட்டுக் காவி கட்டிடவோ தேவையில்லை!
உலக ஒழுக்கம் தவறாது,
அறவாழ்வுக்கு
எதுஎது ஆகாதோ அவையொறுத்து,
அவம்செய்து
பழிச்சொல்லைத் தேடாது,
பயம்விட்டு நீதி நேர்மை
கணங்காத்து,
உண்மைக்குக் காவலாய் நிதம்நின்று,
எந்தப் பிறஉயிர்க்கும் தீங்கு பயக்காது,
எவரினதும் வாழ்வுக்கும்
இடையூறு செய்யாது,
எவரினதும் வயிறு எரிய எண்ணை ஊற்றாது,
எவரினது முன்னேற்றப் பாதைக்கும்
பொறாமையெனும்
தடைகளினைப் போடாது,
மொட்டைக் கடிதங்கள்
வரையாது, கல்லுக் குத்தாது,
அன்புருவாய்
போதுமென்ற மனதோடு, ஆன்மபலத் துணையோடு,
பிறர்க்காய்த் துணிந்துமே சேவை
புரிவோர்க்கு
வேடங்கள் தேவையில்லை;
விருது, கிரீடம் தேவையில்லை;
பட்டம் பதக்கம் பாராட்டும் தேவையில்லை;
காலமிவர் பேரைக்
கல்வெட்டாய்ப் பொறித்துவைக்கும்!
காலங் கடந்துமிவர் நாமத்தை
வரலாறு
பேசும்; உதாரண புருஷரான
இவர்நடந்த
பாதச் சுவடுகளைத்
திசைகாட்டி எனஏற்கும்!
முதுமையின் வலி.
“ஐயா” எனநானும் அழைக்க
இனங்கண்டு
“தம்பி” என அணைத்துத் தழுதழுத்து
விழி குளமாய்ப்
பொங்கிவர வார்த்தை தளம்பி…நொடிப்பொழுதில்
தன்னைச் சுதாரித்துக் கொண்டு
விழியோரக்
கண்ணீர் துடைத்துக் கதைத்தார்
அம் ‘முதியமகன்’!
“எப்படிச் சுகம்” என்றேன்;
“இருக்கிறோம்” என்றார்; தன்
கைகூப்பிக் கொண்டேதோ வலிந்து கதைத்தவரின்
உள்ளத் துயரை
உணரத்தினவாம் வார்த்தைகள்.
எந்தனது பாட்டன் என்கண்முன் வந்துபோனான்.
எந்தனது பாட்டனின்
இறுதிப் பொழுதுகள்
வந்தென்…முன் நின்ற வயோதிபரைச் சுற்றிற்று.
வரிசையாய்க் கட்டிலிலே படுத்திருந்த
இவர்போன்ற
பலர்எழுந்து “தம்பி” போட்டுக் கதைத்தார்கள்.
தாங்கள் தனித்துத் தடுமாறி
அலைந்து…ஒன்று
சேர்ந்திங் கிருப்பதனை,
உறவு சுற்றம் கைகழுவி
விட்டதனை, எந்தன் மனவிழிகள் ஈரமாக…
தங்களுள் புதைந்த சோகத்தில்
மிகக்கொஞ்சம்
வெளியில் வர….சொல்லி
ஓர்திசையை வெறித்தார்கள்.
முதியோர் இல்ல முகாமையாளர்
அன்பள்ளிப்
பொழிய மலர்ந்தார்கள்.
போலியற்ற ஆதரவு,
பாசத்துக் கேங்கிப் பொழுதைப் பகிர்ந்தார்கள்.
‘கடைசிக்குக்’ கூட
பிள்ளைகளோ…உற்றவரோ
வருவது குறைவென்ற
முகாமையாளர் வார்த்தையிலே
மனிதநேயம் கருகிய வாசம் அடித்ததையா..
எனக்கு; விடைபெற்றேன்!
ஏக்க விழியிலொன்றென்
ஊர் கேட்டு… “தானும் அவ் ஊர்”
என்றுருகிற்று!
இவர்களினைச் சந்தித்த இருமணிகள்
எந்தனது
இதயத்தைப் பிசைந்த வலி
இப்போதும் வலிக்கிறது!
நகர மாந்தர்
யாரையும்…எவரும் கிஞ்சித்தும் கணக்கெடாமல்
ஏதோ ஒருதிசையில்
இயந்திர கதியில்
ஓடிக்கொண் டிருக்கின்ற ஒளிததும்பும் மாநகரில்
தனித்தலையும் ஒருசருகாய்
நானும் அலைகின்றேன்!
“மாநகரம் கோடிகோடி மக்கள்,
வசதிகள்,
யாவையையும் கொண்டிருந்தும்…
யாவரும் என்னைப்போல்
தமக்குத்தாமே துணையாய்த் தானே அலைந்திடுவார்?”
என என்னுள் கேட்கின்றேன்.
என்ன விசர்வாழ்க்கை?
அதிகாலை தொடங்கி அரையிரவு கழிந்தபின்னும்
எதற்கோ அலைகின்றார் இவர்கள்;
மறுபடியும்
நாளை இதேபோல நாயாயே அலைந்திடுவர்!
இவர்களது வாழ்வின்,
இவரின் பிறப்பின்,
இவர்களின் உழைப்பின் அர்த்தமென்ன? நானறியேன்!
உழைத்துக் கொடுக்காட்டில்…உதறும்
நகரமென்ற
பயத்தில் பகலிரவு பாடுபட்டு உழைத்துத்தம்
நிலையை நகரில் நிலைநாட்டி
விட்டதன்றி
வாழ்வு இரசிக்கும் வசந்தங்களை எல்லாம்
சாகடித்து விட்டதுதான்
இவர்களது சாதனையோ?
மறுநாளும் இவர்களுக்கு இன்றைப்போல் ஒருநாளோ?
வாழ்வின் எதிர்பார்ப்பு வரமாச்சோ?
சாபமாச்சோ?
ஓவ்வொரு மனிதரும் தம்தம் திசைவழியே
ஓடிக்கொண்டிருத்த லன்றி
உணர்வு புலன்களுக்குச்
சேதாரம் இல்லாமல் சிறிய இந்த வாழ்க்கையினை
வாழ்ந்து கழிக்கவில்லை!
“வஞ்சிக்கப் பட்டீரோ”
ஏன்நீர் சிரிக்கவில்லை?
“இதுவரமா? சாபமதா?”
என்று ‘எந்திர’ மனிதரை வழிமறித்தேன்;
ஏறஇறங்க நோக்கி விலகினர்…..பதிலில்லை!
தொலைந்த சிற்பம்
சிற்பங்கள் நன்றாய்ச் சிரித்தபடி…அம்சங்கள்
அத்தனையும் உள்ளடக்கி
அழகின் நவரசங்கள்
பொங்கிப் பிரவகிக்க ‘பாவங்கள்’ பெருகிவர
கலைநுட்பம் கொப்புளிக்க
மாசு மறுவற்று
அதிசயத்தை தம்தம் அபிநயத்தில் காட்டிநிற்க
பரவசயாய் அவ்வழகைப் பருகி
இலயிக்கையிலே
சிற்பமே தெரிந்ததன்றி,
சிற்பஞ் செதுக்கியவன்
கற்பனையும் அவனின் கைத்திறனும் கலைமனமும்
படைத்தவனின் பேர்புகழும்
மறைந்து மாயையாச்சு!
படைப்பு உயிர்வாழ…படைத்தோனின்
பெயர், உடலும்
இறந்ததாக மாறும்
பின்நவீனத்துவ உலகில்
சிற்பிபட்ட சிரமம்…,அவன்
சிந்தையில் கருக்கொண்ட
கற்பனையைக் கல்லிலே காட்ட அவன் பட்டகஷ்டம்,
ஓர் உளிக் கொத்தலும்
தவறி விழுந்திடாமல்
அடைகாத்த கவனம், இரவுபகல் பசிமறந்து
அவனெடுத்த சிரத்தை,
கண்திறந்து…சிலைசிரிக்க
அவன்பட்ட சந்தோஷம்,
கூலிபெற்று அவன்அகல
“ செதுக்கிய இச்சிலை
உனக்குச் சொந்தமில்லை”
என்போர்முன் அவனுற்ற ஏக்கம் யாவும்
மறைந்துபோச்சு!
படைப்போன் தொலைந்துபோக
படைப்பை எவரெவரோ
உரிமைகோரி விமர்சிக்;;;;;;;கும்; உற்சாகத் திடை…
சிலையின்
மௌனம்…படைத்தவனை
மனதால் தினந்தேடி
அலைகிறதோ?
தனைச் செதுக்கி விட்டகைக்கு ஏங்கிடுதோ?
சிலையும் செதுக்கியோனை மறந்ததுவோ?
எனக்கிளம்பும்
கேள்விப் புகையில்என்
கலைஇரசிப்பு வருத்தமாச்சு!
மாய வலை
தான்சிக்கிக் கொள்ளாமல்
தனது வலைதன்னை
தான்பின்னும்…சிலந்தி தனைத்தக்க வைத்தபடி!
வெள்ளி இழைநூலை
எச்சில் துளிதொட்டு
என்னவொரு இலாவகமாய் எழிலாய்…அவ்
வலையாகப்
பின்னுகிறாள் இவ்எழிலி?
அழகுணர்ச்சி, கலைநேர்த்தி,
மிகநுட்ப மாகச் சிக்கவைக்கத் திட்டமிடல்,
தானொரு அந்தத்தில்
தவம்போல் இருந்தபடி
“யார் இரையாம் இன்றைக்கு” என்ற நினைவிலூறி,
ஒரு உடல் சுவைக்கும் கொடூர மனம்மீட்டி,
இவ்வைய அரசியல்போல்
தானுமொரு சதிதீட்டி,
இருக்கிறதே வாய்நூலால்
காற்றில் வலைவீசி,
இரைதேடிக் காத்தபடி இந்தச் சிறுசிலந்தி!
இப்பெரிய பூமியிலே
இதன் சிறிய வலையில்விழ
எப்படித்தான் வருகிறது
எங்கிருந்தோ ஒருபூச்சி?
தொடர் பயணம்
பயணம் தொடர்ந்து நடந்துகொண் டிருக்கிறது.
பயணம் எனைஎங்கோ
இழுத்துப் பயணிக்க
பயணம் நகருதென்று அயல்வாய் அலம்பிடுது.
கால்கள் நடக்கக்
கஷ்டப் படுமிடத்தும்
மனது நடப்பதனால்…பயணம் தொடர்கிறது.
எங்கெங்கோ எப்படியோ
பிரிந்து பிரிந்து செல்லும்
பாதைகள், சந்திகள், பாலங்கள்
தவமிருக்க
எங்கும் வெறுமை
எரிந்து புகைந்திருக்க
எனக்கு இணையாக இடைக்கிடை
பறவைசில
எனைஆச்சர் யமாய்ப் பார்த்து
எனைக்கடக்க
வெள்ளிகளும் திசைகாட்டும் விண்மீனும்
பொய்ச்சிரிப்பு
மாயங்கள் செய்தென்
விழிமருள வைத்திருக்க
நடக்கின்ற பாதையெங்கும் நாறிப் புழுத்திட்ட
பிணங்களது நாற்றம்
காற்றில் பிணைந்திருக்க
சருகுகளும் முள்ளும்
குன்றுகுழிப் பாதைகளும்
கவனமற்று ஓடும் நதிகளும்
பின்தொடரும்
சூரியனும் நிலவும் புலனாய்ந்து பார்க்க என்
பயணம் தொடர்ந்து
நடந்துகொண் டிருக்கிறது.
எண்ணிய பொழுதுள் ஏகேலாது அரைவதற்கு
என்னதான் தாமதங்கள்?
இலக்கு நகர் சேர்வதற்கு
சரியான வழிகளினைத் தேர்ந்தனவா என்கால்கள்?
பயணக் களைப்பும்
பயணச் சலிப்பும்
பயணத்தில் காயம் பட்ட
அவஸ்தைகளும்
அயரவைத் தாலும்…
அகத்திருந்தோர் அசரீரி
உசுப்ப
தொடர்ந்து இயக்கிவிடப் புத்துயிர்த்து
பயணம் இக் கணத்தினிலும்
தொடர்ந்தபடி இருக்கிறது!
கனவுகளைக் கலைக்காதீர்
கனவுகளைக் கலைக்காதீர்!
கனவுகளைக் கலைக்காதீர்!
நனவுகளில் ஏதும் நடவாது என்பதனால்;
கனவுகளைக் காணும் கணத்தில்
சிறிதளவு
ஆறுதலை ஈட்டி,
அகம் வலியைச் சிறிதகற்றித்,
தேறுதல் அடைவதனால்;
சித்தம் நனவுகளில்
அனுபவிக்க முடியா அனைத்துச் சுகங்களையும்
அனுபவித்து ஆசையைத் தீர்த்து
மகிழ்வதனால்;
இலாபங்கள் கனவுகளில் மட்டும் கிடைப்பதனால்;
இலவசங்கள் கனவுகளில் மட்டும்
நிறைவதனால்
விலங்கு பலபிணைத்தெம் விருப்பங்களைத் தடுக்கும்
சமூகமும் சூழலும் அரசியலும்
அமைத்திறுக்கும்
வியூகம் தகர்க்குமாற்றல் கனவுகட்கே வாய்த்ததனால்
கனவுகளைக் கலைக்காதீர்!
கனவுகளைக் கலைக்காதீர்!
அடைய முடியாத ஆசைகளை,
எம் உழைப்பால்
அணுக முடியாத அற்புதத்தை,
எம்பலத்தால்
கைக்கொள்ள முடியாத கௌரவத்தை,
எம் திறத்தால்
பெற்றெடுக்கு முடியாத பேறுகளை,
சேர்த்து…பெருங்
கல்லாக்கி நினைவுகளின் ஆழத்தில்
நிதம்புதைத்தோம்!
அந்த ஏழ்மை ஏக்கங்கள்
ஆழ்ந்த நினைவிலூறி
எழுந்து கனவுகளாய் மாறி
எம்துயர்வாழ்வின்
உறக்கப் பொழுதையேனும் திருப்திப் படுத்துவதால்…
நித்திரைக்குள் ஏனும் நிம்மதியைக் காட்டுவதால்…,
கனவுகளைக் கலைக்காதீர்!
கனவுகளைக் கலைக்காதீர்!!
கனவும் நனவும்
கனவுநெடுஞ் சாலைகளைக் கடக்கப் புறப்பட்டோம்.
கனவுகளை உண்டு,
கனவுகளாற் பசிதணித்து,
கனவுகளை நீராக்கித் தாகம் தினந் தணித்து,
கனவுகளின் வர்ணம் கலந்து
உடைபுனைந்து,
கனவுகளை அணிந்து,
கனவுவீடமைத் தமர்ந்து,
கனவு நிழலடியில் கண்வளர்ந்து,
கனவுக்குள்
கனவுகண்டு அதற்கே காலஞ் செலவளித்து,
கனவுகளாற் சாலைசெய்து,
கடந்து ஒரு பெரிய..
நனவு இலக்கடைய
காலைமுன் வைத்தின்றும்
கனவு நெடுஞ் சாலையினைக்
கடந்துகொண் டிருக்கின்றோம்.
கனவுகளே எல்லாமாய்ப் போனதனால்
சூழ்ந்துவந்த
நனவின் யதார்த்தத்தை
முகங்கொடுக்க முடியாமல்…
நனவுகளின் சுமையைச் சுமக்க முடியாமல்…
நனவுப் பொறிக்குள்
சாணக் கியமாக
குனிந்து புகுந்துதப்ப
முடியா திடிந்துள்ளோம்.
நனவில் பசியும் தாகமும் நெருப்பாகி
உணர்வைப் பொசுக்க
உடல்பிளந்து இரத்த நதி
மனைகளினை மூழ்கடிக்க
ஒருவழியும் தெரியாதோர்…
கனவுகளை மறந்து கரைந்தோட,
கனவுகளைத்
தின்று குடித்தோர் நாம்..
கனவுகளாய்ப் போகின்றோம்!
கனவும் அவசியந்தான்;
யதார்த்தத்தை மாற்ற…வேண்டும்
நனவுகளில் நம்பிக்கை!
அதைத்தேடி நிலம் மிதித்து
அனல்குளித்து ஏறி
அடியெடுத்து என்றுவைப்போம்?
கனவுகள்
கலைந்து போன கனவுகள் எத்தனை?
கருத்தரித்து வளர்ந்து வருகையில்…
கலைந்த அந்தக் கனவின் வடிவென்ன?
கலைந்த கனவின் பொருளென்ன? ஆம்..அதன்
விளக்கம், விலையென்ன? என்ற விபரத்தை
விட்டு வைக்காது…எங்கோ முகிலெனக்
கலைந்து போன கனவுகள் எத்தனை?
கனவு கைவிட்ட நனவுகள் எத்தனை?
கனவு ஒன்றை முழுமையாய்க் காண்பதார்
கையிலுள்ளது? அதனைக் கலைப்பதும்,
கனவைக் கலையாமல் காணவே வைப்பதும்,
கலைந்த கனவை…இயல்பு பிசகாமல்
இணைப்பதும், வேறு கனவென மாற்றலும்,
என…இவையை யார் தீர்மானஞ் செய்வது?
மனது தான் கனவைச் சுரக்கும் எனின்
மனம் முன்… உரைத்ததா கனவை? யார்சொல்வது?
ஆர்வம்
அவமானம் விளைவிக்க வேண்டுமெனும் ஆர்வத்தை
முகத்திலோ,
இதழின் முறுவலிலோ,
கடுகளவும்
வெளிப்படுத்தா வெகுளியாய்
விடைபெற முன் புன்னகைத்தாய்.
புன்னகைத்து விட்டுப் போகையிலே…
உன்பார்வை
ஒன்றை எனக்கு உணர்த்திற்று.
முகத்தினிலோ
உதட்டினிலோ இல்லாத
அவமானப் படுத்தும் ஆர்வம்
மனதுளொரு புற்றுள் மறைந்து படுத்துளதை;
அதுஓர்நாள் மெல்ல அசைந்து
தலையையாட்டி
நாக்கிரண்டை நீட்டி நானெதிர் பார்த்திடாத
ஓர்பொழுதில் படமெடுத்து
உயிர்போகக் கொத்திவிடும்
என்பதை;
என் மனதுள் இருந்த கீரி சொல்லிற்று!
புன்னகைக்குப் பதிலாய்ப் புன்னகைத்தேன்.
திரும்பிவந்தேன்.
என்மனதின் கீரியினை “எப்போதுந் தயாராயே
நில்”லென்று எச்சரித்து
நிதானமாய் உறங்குகிறேன்!
சிறியனும் பெரியனும்
“யான்பெரியோன் என்ற ஆணவம் அழித்துவிட்டு
வாழும்” என்று சொல்கின்றீர்!
எனைச்சுற்றி வாழ்பவர்கள்…
தாம்பெரியோர் என்ற மமதை
கொண்டலைகையிலே.,
தாம் உயர்ந்தோர் என்ற
தலைக்கனத்தோ டுலைகையிலே.,
யாரையும் சிறுபுழுவாய்…
அற்பப் பதர்களுமாய்…
நோக்கித்தாம் மகுடம் சூடியதாய்த்
துள்ளுகையில்…
‘ஏனையோர் சகலரையும்’
புறக்கணித் தொதுக்கையிலே…
ஆதிக்கம் புரிந்து அடக்கத் துணிகையிலே…
நான்மட்டும் எனைத்தாழ்த்தி
அவர்ககடிமை யாகலாமோ…?
யாவும் புரிந்த,
யாவையையும் இயக்குகிற,
ஆண்டவன்முன்;
இந்த இயற்கையின்முன்;
அறத்தின்முன்;
“நான்சிறியன், கடையன்” எனயான் உணர்கின்றேன்.
ஆணவத்தை அவர்கள்முன்
அழித்தெனைநான் அற்பனென்பேன்!
ஆனால் ‘எதுவுமற்றும்’ தாம்பெரியோர்
என்றோதி
ஆயிரம் நெறிஅறிந்தும்…ஆணவம்அழிக்காது
யாரையும் எடுத்தெறிந்து
தம்நலனே பெரிதென்னும்
மானிடர்முன்…நான்பணியேன்!
நான்சிறியன் எனஉரைக்கேன்!
யான்அவர்முன் என்ஆற்றல் நிரூபிப்பேன்
தலைநிமிர்வேன்!
தீதும் நன்றும்
“நல்லவனா கெட்டவனாநான்”;…
எனைநான் கேட்டதில்லை!
நல்லவன்தான் என்கின்ற நட்புகளும் உண்டு..
இல்லை
இல்லையிவன் கெட்டவனென்
றெண்ணுகிற நெஞ்சுமுண்டு!
நல்லவர்கள் என்னைக் கெட்டவனாய்க் கண்டதில்லை!
நல்லவனாய் என்னைக்
கெட்டவர்கள் சொன்னதில்லை!
நல்லவர்க்கு நல்லவன்நான்
கெட்டவர்க்குக் கெட்டவன்தான்.
வல்லவர்க்கு வல்லவன்யான்
மதிப்போரைத் தொழுவேனாம்.
நல்லவனா கெட்டவனா நானென்ற தீர்மானம்
இல்லைஎன்னிடத் திலில்லை;
என்முன் வருபவரின்
சொல்லில், செயலில் சூக்கும மனம் குணத்தில்
உள்ள தந்தத் தீர்மானம்
என்னிடத்தில் ஏதுமில்லை.
நல்லவர்க்கு நல்லவன்யான்
தீயவர்க்கோ தீயவன்தான்
வல்லவர்க்கு வல்லவன்நான்
மதிப்போரைத் தொழுவேனாம்.
நல்லவனா கெட்டவனா நான் என நான் கேட்டதில்லை!
நல்லவனா தீயவனா நான்?
எனக்குள் குழப்பமிலலை!
மனிதனாயிருத்தல்
மனதனாக நீயிருந்தால்…
மனிதனாக நானிருப்பேன்.
மனிதனாய்நீ பழகிநின்றால்
மனிதனாய் நான் பழகிடுவேன்!
மனிதனாக இல்லாமல் மிருகமாக நீயிருந்தால்
மனிதனாயே உன்னோடு
எப்படிநான் முகங்கொடுப்பேன்?
‘மனிதம் தொலைத்த… மனிதர் மலிந்த…மண்ணில்,
மனிதம் மறந்த மலட்டு யதார்த்தத்தில்,
மனிதனாகத் தான்நானும் வாழ
விரும்புகிறேன்!
மிருகமாக வாழ்வதனை மிகவும் வெறுக்கின்றேன்!
மிருக நிலையடைதல்
கேவலந்தான் என உரைப்பேன்!
மனிதனாக நான்வாழ
மனிதனாய் நீ திகழவேண்டும்.
மிருகமாய்நீ இருந்தபடி…
“மனிதனாய்நீ இரு” என்று
நெருக்குகிறாய்;
உனக்கும் நியாயம் தெரியவேண்டும்!
மனிதனாய் தானேயான் வாழவந்தேன்;
சமூகமே நீ
மிருகமாய் இருப்பதனால்…
மிருகக்குணத் தோடென்மேல்
பொருதுவதால்…
மனித தர்மங்கள் தாண்டியொரு
மிருகமாக உன்னோடு
நானும் பொருதவந்தேன்!
முகமூடி வாழ்வு
உங்கள் முகங்களுடன் உங்களைக் காணலாமா?
உங்கள் முகங்களிலே
உண்மையான உங்களது
உணர்ச்சிகளை மட்டும் உணர முடிந்திடுமா?
முகங்களின்மேல் நித்தம்
முகமூடி அணிகின்றீர்.
முகங்களிலே வெவ்வேறு
முகமூடி புனைகின்றீர்.
ஒவ்வொரு தினத்தினதும் இயல்பு,
இலாபநட்டப்
பலன்களுக்கு ஏற்ப பரிச்சயமாய்
வைத்திருக்கும்
முகமூடி ஒவ்வொன்றை விடியுமுன்
அணிந்துபோவீர்.
நாளொன்றில் சிலநேரம் நான்கைந்து முகமூடி
போடவும் துணிகின்றீர்.
உங்கள் கைப் பையினுள்ளோ…
உங்கள்காற் சட்டையுள்ளோ மிகவும்
இலாவகமாய்
மடிப்புக் குலையாமல்
அவற்றைவைத்துக் கொண்டலைவீர்.
முகமூடிக் கேற்ப
முகபாவம் மாற்றுகிறீர்.
தலைமாற்றி மாற்றித் தப்பிப் பிழைக்கின்றீர்.
சாகும் வரையும்
சகல சந்தர்ப்பத்துக்கு
ஏற்பவும் அவற்றைக் கையாளப் பழகிவிட்டீர்.
இடைக்கிடை புதிதாய்
எங்கிருந்தோ வாங்குகிறீர்.
புனிதம், சமயம், பொதுவுடமை, அரசியல்கள்,
இனம், மொழி, சாதி, நவீனம், பின் நாகரிகம்,
ஜனநாயகம், உலக மயமாதல்
எனும் ‘கடைகள்’
ஒவ்வொரு விதமாக உருவாக்கும் முகத்திரைகள்
எப்படிநீர் வாங்கி
ஏற்றபடி அணிகின்றீர்?
முகமூடியே இன்று முகமாயும்
சிலர்நின்றீர்!
முகமூடியை முகத்தில் பிரிக்க முடியாமல்…
முகமூடியை வாழ்வில் அகற்ற நினையாமல்…
நிற்கின்றீர்.
தலைநிமிர்ந்தே எல்லோரும் நிற்கின்றீர்!
உங்கள் முகங்களுடன்
உங்களைக் காணலாமா?
உங்கள் முகங்களிலே
உண்மையான உங்களது
உணர்ச்சிகளை மட்டுமே உணர முடிந்திடுமா?
நினைவு கூர்தல்
என்னை மறப்பதுதான் எனது பெருங்குறையே!
என்னியல்பு என்ன?
எனது கடனென்ன?
என்பிறவிப் பொருளென்ன? எனது வழியென்ன?
என்சிறப்பு என்ன?
என்தனித்துவம் என்ன?
என்றன் அடையாளம் என்ன?
குறையென்ன?
என்பவற்றை அடிக்கடியான் மறந்து
யதார்த்தத்தின்
இன்ப துன்பத்துள் இறங்கி அவைஅலைக்க
எங்கெங்கோ ஓடுகிறேன்.
என்குணம், இயல்பினையும்
என்பிறப்பு நோக்கம் எனது கடமையையும்
மறந்து ‘எவனாயோ’ மாறி நடக்கின்றேன்.
மறந்தென் சுயத்தை மறந்து
ஏதேதோ
வேசத்துக் கேற்ப விளையாடித் திரிகின்றேன்.
ஏதோ ஒருநொடியில்
என்னைநான் நினைவுகூர்ந்து
என்னைநான் கண்டுகொண்டு
எனக்குள் நான் சுதாரித்து
என்னியல்பில் நடக்கையில்…
மீண்டும் யதார்த்தமெனும்
மோகினிகள் சூழ முழதாக மாறுகிறேன்.
என்னை மறப்பதுதான் எனது பெருங்குறையே!
என்னைநான் மறவாமல் இருக்க
ஒருவரம்தா
என்னிறையே!
எனைமறப்பேன் நான்;
நினைவூட் டிறையே!
மலர்க மனிதம்
மனிதாபி மானம் மலரும்நாள் எப்போது?
மனிதத்தை மனிதம்
வாழ்த்தும்நாள் எப்போது?
மனிதனை மனிதன் மதிக்கும்நாள் எப்போது?
மனிதர்கள் மனிதர்களாய் வாழும்நாள் எப்போது?
மனிதனும் மனிதமும்
வாடிக் கிடந்ததுவும்,
மனிதனும் மனிதமும் காயப்பட் டகன்றதுவும்,
மனிதனும் மனிதமும் மனதைத் தொலைத்ததுவும்,
மனிதனும் மனிதமும் உயிர்ப்பை இழந்ததுவும்,
மனிதனும் மனிதமும் அடிமைப்பட் டிருந்ததுவும்,
மனிதனும் மனிதமும் தெருநாய்போ லிறந்ததுவும்,
நனவினது சாட்சிகளாய்
நேற்றுக் கிடந்தனவே…!
ஒருநரனின் துயரை மறுமனிதன் பார்க்காமல்…
ஒருநரனின் சோகத்தை மறுமனிதன் தேற்றாமல்…
ஒருநரனின் பாரத்தை மறுமனிதன் பகிராமல்…
ஒருநரனின் ஏக்கத்தை மறுமனிதன் ஏற்காமல்…
ஒருநரனின் உணர்வுகளை
மறுமனிதன் மதியாமல்…
ஒருநரனின் தனித்துவத்தை மறுமனிதன் போற்றாமல்…
இருக்கும் வரை மனிதம்
இரணப்பட்டு இடிந்திடுமே…!
மனிதரில் மனிதம் இருந்த நிலைமாறி
மனிதரில் மிருகம் வளர்ந்து தொலைக்கிறதே…!
மனிதருள் வாழும்
மிருகத்தை வேட்டையாடி
மனிதத்தை மனிதருக்குள்..
‘அன்பால்’ விதைத்துவிட்டால்…,
மனிதாபி மானமிம் மண்ணெங்கும் பூத்தெழுமே…!
மனிதத்தை வளர்ப்பதுவே
எங்கள் பணிஎன்று,
மனிதத்தை மீட்பதுவே எங்கள் கடனென்று,
மனிதாபி மானத்தை மதித்துச்
சரிசமனாய்
மனிதரை நடத்துவதெம் வாழ்வின் இலக்கென்று,
‘நினைத்து’ எல்லோரும் நிதமுழைத்தால்
சொர்க்கத்தை
நனவினிலே கண்டுநாங்கள்
வெல்வதுவும் சாத்தியமே.
நதியென நினைத்த காட்டாறு
நதிபோலச் சீராய் நகருமென நானிருந்தேன்.
நதிபோலக்..
கம்பன் உவமித்த கவிதையெனும்
நதிபோல வாழ்வு நகருமெனக் காத்திருந்தேன்.
வானிருந் திறங்கி மலைதடவி,
பூமியதன்
மேன்மைகளை வாங்கி,
விழுந்து வனங்களினை
வெளிகள் வயல்களினை
விளைந்த மனிதத்தை
அளைந்தபடி, ஊர்க்குள் கிளைபரப்பி,
சலனமின்றி,
ஓர்திசையில்
முன்னோர் உறுதிசெய்த ஓர்வழியில்
ஓடி, இறுதியிலே ஒருஞானக் கடல்கலக்கும்
வான்நதிபோல் வாழ்வு
வாய்க்குமென்று நானிருந்தேன்.
ஆனாலோ வாழ்க்கை அழிவுகளைக் கொண்டோடும்
காட்டாறா யெல்லோ
கரையை உடைத்தபடி
தங்கு தடையின்றி வரம்பைத் தகர்த்தபடி
எங்கெங்கென் றில்லாமல்
எங்கெங்கோ ஓடிடுது.
ஒருசீராய்ப் போகாமல்…இறுதியிலே எங்கேபோய்
நிறைவதெனத் தெரியாமல்
கட்டுக்குள் நிற்காமல்
தறிகெட்டு எவரும் தடுக்க முடியாத
வெறிகொண்டு
அழிவுள் விழுந்தடித்துப் போயிடுது.
நதிபோல வாழ்வு நகருமென நானிருந்தேன்.
விதியின் விருப்பமிது.
இயற்கையையா விளங்கிவிட்டேன்?
ஆணவம் அழி
நான்நினைத்த ஒன்றைத்தான் நான்செய்ய முடியும்!
நீ நினைத்த ஒன்றைத்தான்
நீ செய்யவும் ஏலும்!
நான்நினைத்த ஒன்றை…
நீ செய்தல் எளிதில்லை.
நீ நினைத்த ஒன்றை…
நான்செய்தல் சுலபமில்லை.
நான்நினைத்த ஒன்றை..,
நீ செய்து காட்டுங்கால்
நீ நினைத்த ஒன்றை நான்செய்தல்
சாத்தியமே!
நீ நினைத்த ஒன்றைமட்டும்
நீ தொடர்ந்து செய்திருந்தால்…
நான்நினைத்த ஒன்றைமட்டும்
நான்செய்தல் தவறிலையே…
மனதும் மருந்தும்
மனதின் இரணங்களுக்கு மருந்துகட்ட ஆளிலையா?
மனங்களது காயமுற்றும்
மாற்ற வழியிலையா?
மனங்களொவ் வொன்றினிலும்
சிறுகாயம் இருக்கிறதே.
மனங்களொவ் வொன்றாலும் இரத்தம் வழிகிறதே.
மனங்கள் சிலவற்றின் புண்…
சீழ்ப் பிடித்திருக்கே.
மனங்கள் சிலவற்றில் வெளிக்காய மாயன்றி
மறைந்திருக்கும் கண்டல்
வலியைப் பெருக்கிடுதே.
பெருங்கொடுமை கண்டு பேதலித்து
அதிர்ந்திடிந்து
அவற்றிருந்து மீள முடியா அயர்வோடு
சிதைந்து சிலமனங்கள்
மௌனத்துள்…சமாதியாச்சு!
நம்பிநம்பி ஏமாந்து நடுத்தெருவில் மிதிபட்டு
வெம்பிச் சிலமனங்கள்
விரக்தியில் அமிழ்ந்துபோச்சு!
உடலும் சிறைப்பட்டு உளமும் சிறைப்பட்ட
இடரில் சிலமனங்கள்
இடிவிழுந்த பூக்களாச்சு!
பாதிப்பைக் கண்டு பகுத்தாலும்
மருந்துகளோ
ஏதும் சிகிச்சைகளோ இன்றிப் பலமனங்கள்
வேதனையைத் தீர்க்க
விடைதெரியா தொடிந்திருக்கு.
உடலிலுள்ள காயங்கள்…
ஒருபொழுது காய்ந்திடலாம்…,
அவய இழப்பைப்பொய் அவயவம் நிரப்பிடலாம்…,
மனதினது காயம் வடுக்களினை
ஆற்றாமல்,
மனதின் கிழிவுகளைத் தையலிட்டோ
சத்திர
சிகிச்சைசெய்தோ மாற்றாமல்,
அசட்டைசெய்து விட்டு..இருந்தால்
எதிர்காலச் சுபீட்சத்தில்
நிரப்பவொண்ணா வெற்றிடமே
தொடர்ந்திருக்கப் போகிறது.!
இதையார் புரிவரின்று?
இறுதிச் சொல்லான உறுதிச் சொல்
உயிருக்கு உறுதிதரும் அமுதமென
உன் ஒரு சொல்
என நம்பித் தானே இருந்தேன்…உன் வாய்பார்த்து!
உயிர்க்கு இறுதிதரும்
கொடிய துளிநஞ்சு…
பாம்பினது பற்கள் ஊடு பாய்வதென
உன் இதழால்
வீழ்ந்தது உனதச்சொல்…! உயிர்துடிக்கக் கிடக்கின்றேன்!
உயிர்க்கு உறுதிதரும் அமுதச்சொல்
எவ்வாறு
உயிர்க்கு இறுதிதரும் நஞ்சாச் சுரைப்பாயா?
அமுதத்தை நஞ்சாய்
ஆக்கவல்ல மனஒருமை
உனக்குள்ளே தோன்ற உதவியோரைச் சொல்வாயா?
அமுதம் எதனாலே நஞ்சூறி… நஞ்சூறி…
அதுவே முழுநஞ்சாய் ஆனமர்மம் பேசாயா?
அமுதத்தை நஞ்சாக
ஆக்குவது மிக எளிதா?
அமுதத்தில் நஞ்சு விளைவதுவும் சாத்தியமா?
அமுதமே நஞ்சான வரலாறு
முன்புஉண்டா?
எப்படியோ அமுதச்சொல் நஞ்சூறி
என்காதில்
வீழ்ந்து முழுஉடலை நீலம்பாரித் திடவே
செய்தபடி பரவுதடா!
சீவனினைக் காப்பாற்ற
வழியுண்டா?
நஞ்சை முறிக்கும் இன் னொருநஞ்சுசு;
சொல்தந் தெனினும்
எனைக்காக்க மாட்டாயா?
பாவ வழிப் பயணம்
இவ்வுலகம் எத்தனை தரம் பாடம் கற்பித்தும்,
இவ்வியற்கை மீண்டுமீண்டும்
தண்டனைகள் பலதந்தும்,
காலமோ கண்முன் உதாரணங்கள் காட்டிடினும்,
வரலாறு பலநூறு முறை
தீர்ப்பு எழுதிடினும்,
திருட்டும் அயோக்கிமும்…
திருந்தாமல் பொய்களவில்
பிறனை வருத்திச் சுரண்டி அநீதியாகத்
திரட்டிப் ‘பழிச்செல்வம்’ சேர்த்து
உயிர்பறித்தும்
ஜெயித்திடலாம் இந்தச் செகத்தையென்று
மிகத்துணிந்து
நிற்குதுகாண்….
நியாயம் செத்ததென நினைக்குதுகாண்!
நீதியைக் கேலிசெய்து,
அநீதிக்கை கோர்க்குமிவர்
ஆடுகிற ஆட்டமென்ன?
பேசுகிற வார்த்தையென்ன?
ஈடாடா தென்றேய்த்துச் சேர்க்கின்ற செல்வமென்ன?
ஊருலகைத் திசைதிருப்பச்
செய்யும் ஓட்டு மாட்டென்ன?
பிழைகளை மறைப்பதற்காய் இவரிறைத்த
பொய்களென்ன?
எவரையும் பேய்க்காட்ட
இவர் ஏற்ற வேஷமென்ன?
சற்றும் சளைக்காமல் சரித்திரத்தை
மறந்திவர்கள்
வெற்றியெனத் துள்ளுகிறார்…
தோல்விகளின் புதைகுழிக்குள்!
எத்தனையோ ஆட்டம் ஆடியவர் இன்றெங்கே?
எத்தனை வாய்ப்பேச்சும்
பேசியவர் போனதெங்கே?
பொய்க்கணக்குக் காட்டிப்
பொதுச்சொத்தைத் தின்றவர்கள்
உய்ந்த கதை எங்கே?
ஊர்உலகை ஏமாற்ற
வந்தவர்கள்…
ஏமாந்து மாண்டகதை கோடி…இங்கே!
அற்பத் தனமாய்
அனுபவிக்க அவாப்பட்டோர்
முற்றாய்த் தொலைந்து முறிந்ததுதான் வரலாறே!
இவ்வுலகம் எத்தனை தான்
பாடங்கள் கற்பித்தும்,
இவ்வியற்கை மீண்டுமீண்டும் தண்டனைகள்
பலதந்தும்,
“அறம் வெல்லும் பாவம் தோற்கு” மென காலமும்
வரலாறும் உதாரணங்கள் வாயால்
நிரூபித்தும்,
பொய்யும் புரட்டும் திருட்டும் அயோக்கியமும்
அதர்ம முயல்வும் ஆணவமும்
கொலைக்குணமும்
தொடர்கிறது;
தொடரட்டும்!
யான்நடப்பேன் அறவழியே!
ஒட்டுறவு காய்ந்த உலகு
உனது விருட்சம் உயர்ந்துன் உறவுகளின்
கிளைகளினைக் கொண்டு
கிளைத்துச் செழித்துளது!
அவனின் விருட்சம் அகன்று…அவன்
குடும்பத்தின்
கிளைகளைப் பரப்பிக் கிளைத்து நிமிர்ந்துளது!
எனது விருட்சம்
எனது இரு பிஞ்சுகளாம்
கிளைகளை விரித்திப்போ
கிளைக்கத் தொடங்கிடுது!
முன்னொருகால் விருட்சங்கள்
ஓன்றோடொன் றிணைந்து
பென்னம் பெருந்தோப்பாய்ப் பிணைந்திருந்த
காலத்தில்
எத்தனை உறவின்-இழை யோடிற்று?
பறவை
எத்தனையோ… பேதம் எதுவுமற்று
கிளைகளிடை
கூடுகளைக் கட்டி குதூகலித்துப் பாசப்பண்
பாடிக் களித்துப்
பரஸ்ப்பரம் உதவிசெய்து
வாழ்ந்து கூட்டுறவின் வனப்பில் செழித்தது;..ஆம்
இன்று குடம்ப விருட்சங்கள்
தனித்தனியாய்
நின்று தமைத்தாம்தான் வளர்த்துளன!
தோப்பென்ற
ஒன்றின்று இல்லாது
தொடர் பிணைப்பைத் தொலைத்துத்
தத்தம் கிளைவளர்க்கத்
தண்ணீருக் கேங்கியன!
ஒருவிருட்சம் தனைச்சுற்றி வேலிகட்டி
மற்றையதோடு
உறவாடத் தவிர்த்து ஒடுங்கிற்று!
இன்பதுன்பம்
எதையுமே பகிராமல் இறுகிற்று!
உறவினது
உயிர்ப்பை மறந்து உறைந்துபோச்சு!
இத்துயர
யதார்த்தத்தில் பாவ(ச) பறவைகள்….
கூடுகட்ட
கிளைகள் கிடைக்காமல்;
முட்டையிட்டுத் தாம்பெருக
வழியும் தெரியாமல்; மௌன முகாரிபாடி
விருட்சங்களைச் சுற்றிச் சுற்றி
வந்து திரும்பிடுது!
சமநிலை
கொன்ற சிலரும் தின்ற பலருமென
நிறைந்து இருக்கையிலும்
நியாயம் பகர்கையிலே…
எல்லோரும் மனுநீதிச் சோழரென எண்ணுகிறோம்.
பின்முதுகின் அழுக்கு,
முன்முகத்தின் பூச்சு,
எண்ணமெலாம் ஊத்தை எனும்போதும்
யாபேரும்
“நாங்கள் மிகப்புனிதர்” என்று அளக்கின்றோம்.
எதிலென்ன இலாபம்
எதிலென்ன தேறும்
எனக்கணக்குப் பார்த்தே எதை எவருஞ் செய்தாலும்
எல்லோருமே தர்ம
சீலரெனச் செப்புகிறோம்.
எவனும் தன்மேல் பிழையில்லை என்றவாறே
தவறுகளைச் சற்றும்
தயக்கமின்றிச் செய்கின்றான்.
எவனெவனும் தன்முடிவே சரியென்று
தான்நினைத்த
அனைத்தையும் அஞ்சாமற் செய்யத் துணிகின்றான்.
எவனும் தன்செய்கை
தருமமென நிரூபிக்க
கவனமாகக் காரணங்கள் கற்பித் திருக்கின்றான்.
ஆனாலோ அனைவரையும்
ஆட்டுவிக்கும் ஓர்பெரியோன்
யாரெவரின் செயலுக்கும் ஏற்றவாறு
மிகச்சரியாய்
தீர்ப்பெழுதிச் சமநிலையைத்
தொடர்ந்து நிலைநாட்டுகிறான்.
களை களை
களைகளெல்லாம் மிகச் செழிப்பாய்ப் பெருகி…வீசும்
காற்றுடனே தலையாட்டி…விதைகள் தூவி…
விளைகிறது; யாரெவரும் தண்ணீர் ஊற்றி….
எரு தூவிக் காக்காமல் இயல்பாய் எங்கும்!
மழையில்லை, கொடுவெய்யில் தொலைய வில்லை,
வளருதிவை! நோய்களின்முன் தப்பித் தப்பி
முழுவயலை நிரப்புமிவை! மருந்தடித்தும்
முழுவதையும் அழிக்குமாற்றல் எமக்கு இல்லை!
கவனமாகப் பராமரித்துத் தண்ணீர கட்டி
கடைப்பிடிக்க வேண்டியநுட் பங்கள் பேணி
அவதானம் காத்தும்… நம் பயிர்கள் வீழும்!
ஆங்கு களை இடர் ஜெயித்து நிமிர்ந்து வாழும்!
கவலைப் பட்டேதுமில்லை; உடல் வளைத்துக்
களைகட்ட இயலாட்டில்…பயிர்க்குப் போகும்
அவசிய நீர் கனியுப்பைக் களைகள் போட்டி
போட்டடித்துக் கவர்ந்து…வென்று வாகை சூடும்.
களை களையும் போதேதான் பயிர்கள் பூத்துக்
கனிகாயைத் தரும்; எனவே இரக்கம் விட்டு
முழுப்பலத்தைச் செலுத்தி…அவை அழிந்தே போக
மூர்க்கமாய் முயன்றால்தான் பலன் கை எட்டும்.
களைகளது திறனறிந்து…களைகள் கொல்லி
விசிறாட்டில்…உலகத்தில் பசியே வாழும்!
களை போன்ற தீயவரை… இரக்கம் இன்றிக்
களைந்தாற்தான் மானுடமும் தழைக்கும் ஓங்கும்.
கேட்காதோ எங்கள் குரல்
எண்ணுக் கணக்கற்ற நாதசுரம் தவிலிசைகள்
மட்டும்தான் நின்செவிக்குக் கேட்டிடுமோ?
மிக உயர்ந்த
பட்டுடுத்திப் பகட்டாய்ப் பாடுகிற சங்கீதம்,
விற்பன்னர் மீட்டும்
வீணை குழல் நாதம்,
நட்டுவாங்கம் சிந்த நடனமாட்டும் ஜதி நுட்பம்,
ஊர்உற்று நோக்க
ஊர்வலமே உருவாட
ஆர்க்கும் பஜனை ஆர்ப்பாட்டம்,
ஓதுவாரின்
ஆலாபனை வேதம், ஆழும் உயர்பதவி
முன்சென்று மரியாதை ஏற்க…
வளமையான
பூசைநேரம் இல்லாதும்
பொழியும் திருமந்ரம்,
என்பவற்றை யேஉன் செவிகள் இரசித்திடுமோ?
ஏழைகளாய்…
அன்பன்றி ஏதுமற்ற அற்பர்களாய்…
உன்னையன்றித் தஞ்சம் ஒருவரில்லை என்பவராய்…
உண்மையன்றிப் ‘புனைந்து’ உரைக்க
அறியாதவராய்…
கந்தல் அணிந்தாலும் கசிந்துள் தொழுபவராய்…
எந்தக் கலைகொண்டும்
ஏற்றத் தெரியாமல்
இடாம்பீகம் பகட்டு எவையுமற்ற பாவிகளாய்…
கடைசியில்நின் றுன்தீபம்
காணத் துடிப்பவராய்…
உன்னைநம்பி வாழ்பவராய்…
உயிர்நீயென் றுருகுவோராய்…
நிற்கின்ற எங்களது நியாயமான குரல்…உனது
செவிகளுக்குக் கேட்காதோ?
சிந்தை குளிர்த்தாதோ?
என்பாதை என்பயணம்
என்னுடைய பாதையில்தான் இப்போ நடக்கின்றேன்.
என்னுடைய பாதையில்நான்
போகும்வரை போவேன்.
என்வழித் துணையாய் என்பேச்சுப் பல்லக்காய்
உன்னை அழைக்கலைநான்…
என்பாட்டில் போகின்றேன்.
என்வழிக்கு உன்னை வாவென் றழைத்தேனா?
என்வழிதான் திறமென்று
நானுனக் குரைத்தேனா?
என்வழிக்கு வராததற்காய் உனைப்பகையாய்க் கண்டேனா?
என்வழிதான் எனக்குச் சரியென்று
நடக்கின்றேன்!
என்மனதை முழுமையாய் ஏற்று நகர்கின்றேன்.
“என்வழியென் இலக்கடையும்” எனநம்பிப் போகின்றேன்.
என்வழி தவறென் றெண்ணேன்…
அதைநம்புகிறேன்!
உன்வழிதான் சரியென்று நீயுரைத்தாய்….நடக்கின்றாய்.
உன்பாதை உன்பயணம்
உன்னையான் விமர்சியேன்.
என்பாதை பயணத்தை விமர்சித்தால் அதையேற்கேன்.
உன்வழி தவறென்று நான்சொல்லேன்.
அதேபோல
என்வழி தவறென்று நீசொல்ல அனுமதியேன்.
என்வழிக்கு வா என்று உனைக்கேட்கேன்;
அதுபோல்நீ
என்வழிக்கு வா என்றால் அதைஏற்கேன்;
விதி…மாறி
உன்வழிக்குக் காலம் எனையழைத்தால்
நான்வருவேன்.
என்வழியில் காலம் உனைச்சேர்த்தால் வரவேற்பேன்.
அந்தநாள் வரும்வரைக்கும்…
என்வழியே துணைஎனக்கு!
என் இலக் கடைய இன்றென் வழிசிறப்பு.
சந்தேகம் இன்றி
தளராமல் நடக்கின்றேன்.
உன்வழியில் இலக்கடைய உனைஇன்று வாழ்த்துகிறேன்.
தூரப்பறத்தல்
தூரப் பறக்க வேண்டுமெனத் துடிக்கின்றேன்.
தூரத்தில் உள்ள தொடுவானம்
அதைத்தாண்டி
விண்ணில் நிறையும் வியப்புக்கள்
மாமலைகள்
எங்கும் விரியும் எழில்..நிற்கும் விருட்சங்கள்
தங்கத்தில் தோய்ந்த தரை
துள்ளித் ததும்புகிற
ஆழி, அதன் ஆழ்ந்த அர்த்தம்,
வகைவகையாய்
மானுடர்கள்,
அன்னார் மனதில் துளிர்த்தெங்கும்
பூத்த விழுமியங்கள்,
புலனுணராத் தத்துவங்கள்,
காய்த்த கலைகள்,
கனிந்த வரலாறு,
கால மழையில் கரையாத சிந்தனைகள்,
வேர்த்தும் இரத்தம் விதைத்தும் அடைந்த வெற்றி,
இப்படி இப்படியாய்…
எண்திசையும் விரிந்திருக்கும்
அற்புதங்கள்; அத்தனையும் இரசித்து
உருசிப்பதற்கு
“தூரப் பறந்துபார்க்க வேண்டும்” துடிக்கின்றேன்!
தூரப் பறக்க வேணும்என்று
துடித்தலொன்றே
போதுமா?
வேண்டும் பொருத்தமான சிறகு; மற்றும்
பாரம் குறைந்தஉடல்
பகலிரவு பாராமல்
தூரம் கடக்க வேண்டும் தொடர்சக்தி!
என்னுடைய கைகள்
பிணைக்கப்பட்டிருக்கையிலே
என்னுடைய கால்கள் இயங்க ஏலா வேலியுள்ளே
என்னுடலைச் சிலுவையில்
ஏற்றி அடிக்கையிலே
என்அடுத்த வேளைக்கு என்னவழி
எனஎவரும்
நிச்சயமாய்ச் சொல்லாத நிலையினிலே
என்மூச்சைத்
துச்சமென்று எவரும்
நிறுத்தவல்ல சூழலிலே
தூரப் பறக்க வேண்டுமெனத் துடிக்கும் என்
ஆசைக்கு ஏதேனும்
அர்த்தம் இருக்கிறதா?
நல்லவர்க்கு…நல்லவன்
எல்லோர்க்கும் நல்லவராய் இருத்தல் மிகச்சுலபம்.
எல்லோர்க்கும் அன்பனாய்
இனித்தல் மிக இலகு.
எல்லோரும் சொல்வதற்கு எப்போதும் தலையாட்டி,
எல்லோர் கருத்தினையும் ஏற்று வழிமொழிந்து,
எவருமே ஏமாற்ற
ஏமாளியாய் இருந்து,
எவருமொவ்வோர் விதியெழுத
அத்தனையும் அனுமதித்து,
அவரவர்தம் எண்ணத்துக்கு ஆட… இடம்விட்டு,
அவரவர்தம் விருப்பத்துக்கு
எதுஞ்செய்யப் பொறுத்திருந்து,
அவரவர்தம் தவறைத் தொடர
கணக்கெடாது,
அவரவர்தம் ஊழல்களில் வெல்லத்…. தடுக்காது,
அனைவரும் விரும்புகிற
ஆமாஞ் சாமியாக
அனைவருமே ஏய்க்க நினைக்கும் அசடனாக
இருந்தால்…பிழை சரியைத்
தட்டியே கேட்காமல்
மரநிலையில்…உண்மை நீதி, நியாமம் தர்மத்தை
உரையாத ஊமையாய்த் திகழ்ந்தால்…
மிகச்சுலபம்
எல்லோர்க்கும் நல்லவராய் இருத்தல் மிகச்சுலபம்!
அப்படித் திகழ்பவரை
‘நல்லவர்க்கும் நல்லவராய்’
இப்புவியே ஏற்கட்டும்; எனக்குக் கவலையில்லை!
நல்லவர்க்கு மட்டும் நல்லவன்யான்.
தீயவர்க்கு
எல்லையற்ற தீயவன்நான்.
ஏய்க்க நினைப்போரை
ஏய்க்கின்ற வல்லவன்தான்.
‘அவரவர்’ நிலைக்கேற்ப
வாழாமல்… ‘நினைத்தபடி’ வாழ்வதனை ஏற்கேன் நான்.
பொய்யைப் புரட்டை
பொறுமையாகப் பார்க்கேன் யான்.
உய்ய எதுஞ்செய்யும் உலுத்தர்களைப் போற்றேனாம்.
நீதி வழிநான் நடக்க
அநீதியாக
மோதித் தடுப்போரின்
மூக்கை உடைப்பவன்தான்.
எல்லோர்க்கும் நல்லவனாய் இருத்தல் மிகச்சுலபம்.
எல்லோர்க்கும் நல்லவன் அல்லன்நான்;
நல்லவராய்
அல்லாதோர் யார் தொடினும்…
அவரை ஏய்க்க வல்லவன் காண்.
பழி அஞ்சி வாழ்தல்
பழிஅஞ்சிப் பகுத்துண்டு வாழ்ந்தேன்;
பாவமெனும்
பழிக்கு அஞ்சித்… தேடி
முயன்றுழைத்துப் பாடுபட்டு
உழைப்புக்கு ஏற்றதெனும் ஊதியமாஞ் செம்பொருளைப்
பகுத்துக் கடவுளர்க்கும்,
பெற்றோர் உறவுகட்கும்,
எனைச்சேரும் நட்புக்கும், எனக்கும்,
எனவகுத்துக்
கொடுத்துண்ட பின்பு…
வெறுங்கையே எஞ்சினாலும்
கிடைத்த அமைதியினால் ‘கீழ்–மேலே’ செல்லாது
சீரான ஒருவாழ்வைப் பெற்றுச்
சிலிர்த்துள்ளேன்!
அறவழியில் அடியெடுத்து வைப்பதனால்
“என்னநிலை
வருமோ” எனுங்கேள்வி எழா…
நெஞ்சோ டிருக்கிறேன்!
செய்வதெல்லாம் செய்துவிட்டுப் பாவப் பரிகாரம்
செய்து சுடலைஞானம் பெற்று
ஊரெல்லாம்
அள்ளிக் கொடுத்தும் ‘சாந்திகாணார்’ போலன்றி
பயனஞ்சிப் பொருள்தேடிப்
பாக்கியவானாய்ப் பயண
வழியினிலும் நிம்மதியாய் உறங்குகிறேன்!
எனைநம்பித்
தொடரும் உயிர்கட்குத்
தொல்லைநேரா தெனும்…உறுதி
திடமாய் மனதில் தெரிய நடக்கின்றேன்!
பழிக்கஞ்சார்…பொருளை
பனையளவு குவிப்பார்கள்;
குவித்ததனை யார்க்கும் கொடாது
புதையல்களைக்
காக்கின்ற பூதங்க ளாக இருந்து தம்
நிம்மதி தொலைத்து
சந்ததிக்கும் தீவினையை
தம் புதைய லோடு தாரைவார்த்து
செய்தபாவ
விமோசனந் தேடிப் பிராயச்சித்தம் புரிந்தும்
‘அமைதியற்ற மரணம்’ அடைவதனை
வழிநெடுகப்
பார்த்தபடி என்காலைப் பலமாக வைக்கின்றேன்!
பழிக்கஞ்சிப் பகுத்துண்ண வேண்டும்
எனும்அசையா
உணர்வையிக் கணமும் மனதிலூட்டும்
ஒருபொருளைத்
துணைக்கொண்டு நடக்கின்றேன்;
துல்லியமாய் இலக்கடைவேன்!
காலா வதியாகும் காலத்தின்முன்
காலா வதியாகின்ற காலமொன்று வரும்…நாமும்
காலா வதியாகின்ற காலமொன்று வரும்
அந்த
நாளென்று வருமென்று நாமறிய முடியாது!
ஆனாலும் அந்நாள்
அருகிலா தொலைவினிலா
என்பதனை ஓரளவு எதிர்வுகூற முடியும்…அதால்
காலா வதியாகின்ற காலத்தின் முன்
நாங்கள்
ஏன்பிறந்தோம் என்ற கேள்விக்கு விடைகண்டு
நாம்பிறந்த காரணத்தை நன்குணர்ந்து
எங்களினால்
ஆகவல்ல அத்தனையும் ஆக்கிப் படைத்து…நம் –
-மால் என்ன இயலுமோ
சாதனை அதிற்செய்து
காலா வதியாகின்ற காலத்தின் முன்…எங்கள்
உச்சந் தனைத்தொட்டு
உடன் அதனைத் தொடர்ந்துசெய்ய…,
அடுத்த தலைமுறைக்கு அதைக்கொண்டு சேர்க்க…,என
வாரிசை இனங்கண்டு
எம்திறனைக் கையளித்து
வாழ்வின் பயனைநாம் வாழ்ந்துகாண வேணும்…ஆம்
காலா வதியாகிவிட்டால்
பின்னர் உலகில்நாம்
பாரச் சுமையாயே பார்க்கப் படுவோம்…அந்
நாளில் நம் நிமிடங்கள்
பயனற்றே தானிருக்கும்…
என்பதனால்…காலா வதியாகும் நாளின்முன்
உள்ள ஒவ்வொரு வினாடியும்
வீணாகிப்
போகாமல் எம்மைநாம்
புதுப்பித்துக் கொள்ளவேண்டும்!
காலமிடும் கோலங்கள்
காலத்தின் கைகள் கவனமாய்
மண்மீது
போடுகிற கோலங்கள் புயல்மழைக்கு அழிந்துபோம்
கோலங்கள் தானே?
அடிக்கடி அழித்தழித்து
போடுமதன் கோலங்கள் கலையப்
புதுக்கோலம்
தோன்றுவதும்;
அதுமறைந்து புதுக்கோலம் பூப்பதுவும்;
காணக் கிடைக்கிறதே!
வானில் முகில்கணமும்
மாறிப் புதுப்புதிய சித்திரத்தைத் தீட்டுவதாய்…
வாழ்க்கையதன் கோலங்கள்
மாறித் தொடர்கிறதே!
காலம் சிறுகுழந்தை தானா?
விளையாட்டும்
குறும்புக் குணமும் கொண்ட சிறுபொடியா?
எந்தக் கணத்தில் எங்கு
எவர்மீது
எப்படித்தான் மாற்றங்கள் என்கின்ற கோலமிட்டு
என்செய்யும் என்பதையும்
எவர்தான் அறியஏலும்?
எப்போ அழகாக்கும்? எப்போ பழுதாக்கும்?
எப்போ கிறுக்கிவிடும்? எப்போ கிழித்தெறியும்?
என்பதுவும் யார்க்கும் புரியாப் புதிராக
தோன்றிடுதே?
காலத்தின் கைகளினைக் கட்டுவதார்?
காலத்தின் கைகள்…அழகைமட்டும் வரைவதற்குப்
பழக்குவதார்?
காலத்தை வழிநடத்த வல்லவரார்?
அழியாச் சிலகோலம்…கலையாப் பலகோலம்…
எழுதிற்றுக் காலம் இயற்கையிலே…
இதுஎங்கள்
வாழ்க்கையிலும் இவ்வாறு
நல்லநல்ல கோலங்கள்
போடவைக்கப் பாடம் புகட்டுவதார்?
என்கின்ற
கேள்விக் கவிதைகளை
விட்டுவிட்டுச் செல்கின்றேன்!
காலத்தின் காதுகளில் அதை உரக்கச்
சொல்லி…அதை
திருத்தவல்ல தெய்வத்தைத்
தேடி அலைகின்றேன்!
காலத்தின் பின் ஓடுதல்
காலத்தின் கையைப் பிடித்து நடக்கின்றேன்.
காலம்என் சிறுகையைக்
கணக்கெடாமற் போகிறது.
காலம் எனைவிலத்திக் கடந்து நகர்கிறது.
காலம் எனைக்கண்டும்
காணாமற் செல்கிறது.
காலத்துக் கென்போல் கணக்கற்றோர் இருக்கலாந்தான்…
ஆனால்…எனக்கோ
காலமொன்றே துணையிங்கு.
காலத்தின் கைபிடித்து நடக்க நினைத்துப்… பின்
காலம் உதறியதால்,
காலம்கை விட்டதனால்,
வீழந்து கிடப்போரும்…
அவரின் சுவடுகளும்…
காற்றில் மழையில் கரைந்து மறைவதையே
கண்டு அவர்கள்மேல் கவலைகொண்டு
கருணைகொண்டு
நின்றாலும்;
“அவர்கள்போல் நானும் விலாசமற்று
இன்றழியக் கூடாது” என்று
எனையுதறும்
காலத்தின் கையை இறுக்கிப் பிடித்தபடி
காலத்தின் வேகத்தோடு ஓட முயல்கின்றேன்!
எட்டி உதைக்கின்ற
காலுக்கு முத்தமிட்டு
பற்றிப் பிடிக்கின்ற அடிமையென இல்லாமல்..,
திருவிழாக் கூட்டத்தில்
தவறிவிடக் கூடாது
எனும்பயத்தில் அழுது தகப்பன்பின்
மிரண்டோடும்
சிறுவனெனக் காலத் தகப்பனின் கரிசனையை
எதிர்பார்த்து அதன்பின்னே
இழுபட்டுச் செல்லுகிறேன்.
காலம் எழுதும் விதியின் கதை
ஒருவனது தேவை உள்ளவரை
காலந்தான்
வரவேற்புப் பாடி
வாழ்த்தி வணங்கியவன்
புகழைப் பரப்பிப் புளுகி
அவனிடத்தில்
கறக்கும் அனைத்தினையும் கறக்கும்;
அவனிடத்தில்
பெறஇருந்த பலனெல்லாம் பெற்றுவிடும்;
மறுகணமே
அவனுக்கு அடித்த காற்றைத் திறந்து…அவன்
பெறுமதி குறைத்து
பிணமாக்கி விட்டுவிடும்.
அவன் கதை அந்த இடத்தோ டறுந்திடுமா?
அவனின் பணிதடுக்கி
அப்படியே நின்றிடுமா?
இல்லையில்லை
காலம் இன்னொருவனைத் தெரியும்.
அன்றறுந்த கதையின் தொடர்பைப் புதுப்பிக்கும்.
அன்றுவிட்ட பணியை
அடுத்தவர்க்குக் கையளிக்கும்.
“அன்னவன் போல் இவனும் செய்வானா?”
எனும் ஐயம்
என்றென்றும் காலத்துக் கிருந்ததில்லை.
புதியவனால்
முன்னெடுக்கப் படும்யாவும் முழுமைபெற…
வரும் பலனே
காலம் எதிர்பார்த்த கடைசி முடிவு;
இதுவே
காலம் எழுதும் விதியின் கதையாகும்.
காலச் சித்தன்
காலம்…யாரையும் கணக்கெடாமல்
தன்பாட்டில்
போகுமொரு சித்தனைப்போல்
போய்க்கொண் டிருக்குதுகாண்.
யாரோடும் பேசாது, யார்சொல்லுங் கேட்காது,
யார்துணைக்கும் ஏங்காது,
யார்தயவும் தேடாது,
யாரும் நெருங்க விடாது,
தனக்குத்தான்
பேசி…சிலசமயம் பெரிதாய்ச் சிரித்து…ஏசி
ஓடி…பலசமயம்
உட்கார்ந்து வெறித்து…விசர்க்
கோலமுஞ் சூடிக் குதுகலிக்குஞ் சித்தனைப்போல்
போய்க்கொண் டிருக்குதுகாண்!
அதைநெருங்க ஓர்அச்சம்
தானாய் எழுவதனால் தயங்கிஉள் அடங்குகிறோம்.
ஆனாலும் அதனின்
ஆசிக்காய் ஏங்குகிறோம்!
சற்றருகே வந்து தழுவாதோ?
புன்னகைத்து
பற்றியே தீட்சைதந்து நாம் பணிய வாழ்த்தாதோ?
என்று தவித்தாலும்…
ஏதோ பயத்திலதன்
பின்னோடத் தயங்குகிறோம்.
பெருங்கோபம் கொண்டதுவோ…
சாந்த சொரூபியோ… யாம் கண்டறியோம்.
அதன்வழியில்
சிலரை நிறுத்திச் சிரிக்க…அவர் வெல்வதுவும்;
சிலரை விரட்டிக் கலைக்க…அவர் தோற்பதுவும்;
சிலரிடம் திருவோட்டை
நீட்டியே பிச்சைபெற
அவர்கள் செழித்துச் கொழுப்பதுவும்;
அற்பமான
பொருளை அதுவளங்கப், பெற்றோர்…
செலவ ராவதுவும்
நித்தம் நிகழ்வதாய்க் கதையாச்சு.
காலமெனும்
சித்தனின் சித்து விளையாட்டுக் கணந்தோறும்
அற்புதமாய் எங்கும்
அரங்கேறி வருகுதென்றும்;
எப்படியும் அதனருளைப் பெற ஏங்கும்…எல்லோரும்
உள்ளே பயத்தோடு
தமது அந்தரங்க
அசிங்கத்தை அதுவும் அறிந்தென்ன தண்டனையைத்
தந்திடுமோ என்ற
தயக்கத் தொடும்; அலைய
தம்மைத் திருத்தாதோர்…குறுக்கு வழியிலேனும்
செம்பொருளைச் சேர்க்கக்
காலத்தை ஏய்க்கநிற்கக்
காலம்…யாரையும் கணக்கெடாது தன்பாட்டில்
போகுமொரு சித்தனைப்போல்
போய்க்கொண் டிருக்கிறது.
மரணப் பறவை
மரணத்தின் நீழல் படிகிறது திசையெங்கும்.
மரணத்தின் நீழல்
படிகிறது தெருவெங்கும்.
மரணத்தின் நீழல் படிகிறது உயிரெல்லாம்.
மரணத்தின் நீழல் படிகிறது அணுவெல்லாம்.
மரணம் மிகப்பெரிய
அருவப் பறவை…அது
இடையறாது எங்கும் சிறகடித்துப் பறந்தபடி
“கிடைக்குமா இரை” யென்று
கேட்டு அலைந்திருக்கும்.
மீன்கொத்தி ஒன்று வெகுதொலைவில்
தியானம்போல்
காத்திருந்து நீர்ப்பரப்பில்
காணுகிற மீனையொரு
நொடியிற் பறந்துவந்த கௌவி மறைவதுபோல்
தொலைவில்..பருந்தொன்றாய்
வட்டம் அடித்தபடி
மரணப் பறவை இரைக்காய் அலைந்திருக்கும்.
எந்த இரையை
எப்போ பிடிப்பதென்று
அந்தப் பறவை அறியும்!
அதையதனை
எப்படி எங்கே எப்போ பிடிப்பதென்று
விதியேட்டில் தினந்தோறும்
மிகச்சரியாய் மிகத்தெளிவாய்
வாசித்துப் பார்த்து வரிக்குவரி பிசகாது
சாதித்துக் காட்டுவது அதனின் திறமையென்று
சொல்லுபவர் உள்ளார்!
“சும்மா எழுந்தமாறாய்
அகப்படும் எதையும் அள்ளிக்கொண் டோடிவிடும்”
என்று அதன்மீது
குறைசொல்லுவோரும் உள்ளார்.
ஆனால்..பலதடவை
ஆச்சர்யப் படும்படியாய்
பிடர்பிடித்துப் பலரை பின்னிருந்து ‘எதோ’ தள்ளி
வகையாக… இடத்துக்கு வரவழைக்க;
சாப்பறவை
பிடித்துக்கொண் டோடியதைப் பார்த்தோர்…
யதார்த்தத்தில்
பயத்தோடு ‘அதை’ப்பற்றிப்
பறையாமல் வாழ்ந்துள்ளார்.
திருப்தி
கடலினது ஆழம் காணவில்லை எனக்கவலைப்
படவில்லை நான்; ஏதோ
பக்கத்துக் கடற்கரையில்
மூச்சுப் பிடித்து முங்கி எழுந்தேனே…
என்று திருப்திப் படுகின்றேன்.
என்முன்னே..
உலகம் கடலாய் விரிந்து பரந்துளது.
முழுதையும் தரிசித்து,
முழுதையும் கற்றறிந்து,
முழுதையும் அனுபவிக்க முடியாது…இதையறிவேன்.
என்னால் இயன்ற வரையும்,
தெளிவான
என்பார்வைப் புலத்துள் கிட்டுகிற அத்தனையும்,
என்செவியிற் கேட்கக்
கூடியஎவ் இசைகளையும்,
என்புலனுக் கெட்டும் எதையும்,
தரிசித்து
அதனை அறிந்து, அதனை உணர்ந்து..அதை
அனுபவித்து மகிழும்
ஆசைமிகக் கொண்டேன்.
என்னைவிட இவ்வுலகை அறிந்தோர்
உணர்ந்தோரை
கண்டுஅவர் அனுபவத்தைக்
கேட்கத் துடிக்கின்றேன்.
என்னைவிட இவ்வுலகை அறியா திருப்போர்க்கு
என்னறிவைச் சொல்ல
இயன்ற வரைமுயல்வேன்.
நேற்று… உலகம் சிறியதென நினைத்திருந்தேன்!
இன்று…உலகம்
“நேற்றையதை விடப்பெரிதே”
என்று முடிவுசெய்தேன்!
நாளைய உலகம் ‘இன்றை
விடப்பெரிதாய் இருக்கும்’ எனக்கு;
இதையறிவேன்!
இந்தப் பெருமுலகில் நானுமொரு துகளாய்
வந்து பிறந்து வாழ்ந்தேனே…
எனும்மகிழ்வில்
விந்தை உலகையின்றும்
வியப்போடு பார்க்கின்றேன்!
கற்றல் கற்பித்தல்
அரிவரி வகுப்பில் அழுது இருப்போன்முன்
விஞ்ஞானி செய்யும் விரிவுரைபோல்
எந்தனுக்கு
நீயுன் முழுஅழகை, நீயுந்தன் மெய்ப்பொருளை,
நிரூபிக்க முயல்கின்றாய்!
நீ மேதை என்பது எனக்குப் புரிகிறது.
நான்பேதை என்பதை ஏன் மறந்தாய்
யார் சொல்லுவது?
நீசொன்ன உண்மை, நீசொன்ன நிரூபனங்கள்,
நீசொன்ன ஏதேதோ நியாயம்,
விதிவிளக்கம்,
ஏதும் புரியாமல் ஏதோ பெருவிளக்கம்
சொல்கின்றாய் என்ற சுரணையுடன்
அடிநுனிகள்
ஏதும் அறியா திருக்கின்றேன்!
மறுபடியும்
நீயுன் விரிவுரையை
நிகழ்த்தத் தொடங்குகிறாய்!
எங்கோ ஒருபிழை இருக்கிறது…
இல்லாட்டில்
இப்படியோர் இடைவெளியில்
இருந்திடுமா கற்பித்தல்?
எங்கோ ஒருதவறு தோன்றிற்று…இல்லாட்டில்
இப்படியோர் தொடர்பின்றி நிகழ்ந்திடுமா தொடர்பாடல்?
அரிவரி அறிவோடு இருக்கின்றேன்;
இயற்கையே…நீ
மாபெரிய விஞ்ஞானியாய் உன் சிறப்புகளை
சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!
மலைத்தபடி சோர்கின்றேன்.
என்னையேன் தெரிவுசெய்தாய் ….
இறைஞ்சியே கேட்கின்றேன்?
என்னை அடுத்தடுத்த தரமுயர்த்தி,
குறைந்தபட்ச
அறிவூட்டி, உந்தன் அருகில் நெருங்கிடவை;
இல்லை அரிவரி அறிவுக்கு
இறங்கிவந்தென்
அருகில் அமர்ந்துவிடு…
அனைத்தையுமே கற்றிடலாம்.
இயற்கை முதல்
இயற்கையின் சக்தி இணையில்லாப் பெருஞ்சக்தி!
இயற்கையின் நீதி
எல்லோர்க்கும் நிகர் நீதி!
இயற்கையின் தர்மம் எவரெவர்க்கும் சமதர்மம்!
இயற்கையின் தீர்ப்பு இறுதிப் பெருந்தீர்ப்பு!
இயற்கையென் பதென்ன? அறிக….
நீ, நின்சுற்றம்,
உன்அயல், உன்சூழல், உயிர்க்கோளம், ஆகாயம்,
எண்ணுக் கணக்கற்ற சூரியன்கள்,
பிரபஞ்சம்,
இன்னும் அகிலாண்ட கோடி பிரமாண்டம்,
அத்தனையும்….கொண்டதே
இயற்கையின் அம்சம், அர்த்தம்!
இயற்கையின் அங்கம்தான் எல்லோரும் எவ்வுயிரும்.
இயற்கையின் சக்கரத்துள்
சுழல்பவை தான் எல்லாமும்.
இயற்கையதன் கூறு…சடம், சக்தி,
உயிர் என்பனவும்.
இயற்கையே சடத்தை சக்தியை இயங்கவைக்கும்.
இயற்கையே தன்னைப் படைக்கும்;
இறக்கவைக்கும்.
இயற்கையே உயிரை உருவாக்கும்;
அழித்தெடுக்கும்.
இயற்கை தன் தேவைக்கு ஏற்ப தனை மாற்றும்.
இயற்கைதான் வாழ்வை நடத்தும்; முடித்துவைக்கும்.
இயற்கையைப் படைக்க
எவராலும் இயலாது.
இயற்கையை அழிக்க
எவராலும் முடியாது.
இயற்கையினை மாற்றல் எவராலும் ஆகாது!
ஓர்உயிரை உண்டாக்க
உனக்குமட்டும் ஆற்றலில்லை….
ஒரு கொலையைச் செய்ய உனக்கு உரிமையில்லை….
ஒருவடிவை மாற்ற
உனக்குத் தகுதியில்லை….
நீயோர் கொலைசெய்தால்
இயற்கையுனைச் சாகடிக்கும்.
நீயோர் பிழைவிட்டால் இயற்கைநின்று தீர்ப்பெழுதும்.
நீயோர் வெற்றிடத்தை ஏற்படுத்தின்
அதுநிரப்பும்.
நீயோர் புதுமாற்றம் நிகழ்த்தின்
அதுஎதிர்க்கும்.
இயற்கையை நீயும் அழிக்க முயன்றாலோ…
இயற்கை படையெடுத்து
நீ தாங்கா அழிவுதரும்!
இயற்கையைப் புதிதாய் நீ படைக்க வந்தாலோ
இயற்கை விபரீத விகாரங்கள்
தோற்றுவிக்கும்!
இயற்கையின் தோற்றத்தை ஆய்வுசெய்து பார்த்தாலோ….
இயற்கையின் பிறப்பை, பெருவெடிப்பை,
உயிர்த்தோற்றம்
கூர்ப்பை, நீ சோதித்துக் கொண்டாலும்
அதன்முழுமை
காணும் சவாலில் நீ தோற்றிடுவாய்…
இது யதார்த்தம்!
ஆனால்… இயற்கை
உனை ஓர் கருவியாக்கி
தேவைக்கு ஏற்ப ஐந்தொழிலும் செய்யவைக்கும்.
இயற்கையை முன்னோர் இறையென்றார்.
அறமென்றார்.
இயற்கை தான் விதியென்றார்.
இயற்கைச் சமநிலையைக்
குழப்பின்….,இயற்கைச் சமநிலைதான் குழம்பிவிடின்…,
அழியுமிந்த அண்டமென்று
ஆன்மாவால் உணர்ந்து கொண்டார்.
இயற்கையை நீ காதல் செய்;
இயற்கையினைத் தோழமைகொள்;
இயற்கையுடன் ஒத்தோடு;
இயற்கையுடன் இணைந்துவாழ்;
இயற்கைக்குத் தாசனாகு;
இயற்கையோடு இயைந்து ஆழு;
இயற்கையுடன் ஏட்டிக்குப் போட்டியிட்டு,
முரண்பட்டு,
இயற்கைக்குச் சவால்விட்டு,
இயற்கையினைச் சீறவைத்து,
இயற்கையை நீ வெல்ல இயலாது!
குருவாக
இயற்கையை நீ கொண்டாடு!
இதன்பொருளே அறமென்றோ….
இதன் செயலே விதியென்றோ….
இதன்வடிவே இறையென்றோ….
எட்டிய நின் அறிவுக்கு எதையுஞ்சொல்;
இயற்கை தான்
கட்டி அவிழ்த்துலகம் காக்கின்ற
(ெ)ப(ர)ரும் பொருளாம்…
கற்றுக் கொள்;
அதுசுரக்கும் ஞானத்தை உணர்ந்தே…வெல்!
பொறுப்பு
கண்விரிந்த இடமெல்லாம் கல்முளைத்த மலைப்பாதை.
எண்ணுக் கணக்கற்று
எழுந்த சிகரங்கள்.
சிகரங்களுக் கிடையே திடீரென்று
செங்குத்தாய்
புகுந்தோடும் ஆழப் பள்ளங்கள்.
உலகத்தின்
முடிவிதென்று சொல்லும் முனை;
அதல பாதாளம்.
பிடித்து விடும் உயரத்தில்
தலையுரசிப் போம்…முகில்கள்.
தொடர்ந்துநோக்கத் தலையைச் சுற்றும்
மலைவிளிம்பு.
படைவரிசை போற்படர்ந்த பாறைகள்.
இடைக்கிடையே
சடசடென்று வீழ்ந்தசையும் சிற்றோடை.
எண்திசையும்
உறைந்திருக்கும் குளிரின் ஊசிகுத்தல்.
ஆகாகா
மலைமடியில் இருந்த மணிப்பொழுது
நினைவுகளின்
அலைகள் எனைஅள்ளி மகிழ்வில் அமிழ்த்திற்று.
அன்றுநான்…மலைத்தொடர்முன்
“யார்நீ” எனக்கேட்டேன்.
என்னிடமும் அதே வினாவை
மலை திரும்பக் கேட்டிற்று.
மீண்டும் “உன் பேரென்ன”
என அடுத்த கணை…விட்டேன்.
“உன்பேரென்ன” மீண்டும்
மலை திருப்பித் தாக்கிற்று.
நான்கேட்ட கேள்விகளை மலைதிரும்ப
எனைக்கேட்க
நான் திகைத்தேன்;
எனை இயற்கை ‘கேள்விகேட்கும் யதார்த்தத்தை’
நான்கண்டேன்;
பதில் சொல்லும் ‘பொறுப்பை’ யான்
அன்றுணர்ந்தேன்.
இனி வரும் நாட்கள்
வாழ்வு என்ற பயணத்தின் பாதியை
மனம் விரும்பியோ விரும்பாதோ இதுவரை
நான் கடந்துளேன்;… இந்த யதார்த்தத்தை
நம்பக் கடின மாக இருக்குதாம்!
பாதி எப்படிப் போனது? நாள்தொறும்
பயணஞ் செய்து வயதுங் கழிந்தது!
நாட்கள் எல்லாம் பயனுள்ள நாட்களா?
நகர்ந்த வயதெதுஞ் சாதனை செய்ததா?
காயம் காணாத நாளெலாம் வீணெனக்
கழிந்த நாட்களாய்.. வீரன் கணிப்பதாய்ப்
போன நாட்களில்…எனக்குப் பயனற்றுப்
போன நாளெவை? பிரயோசனந் தந்து
போன நாளெவை? பொய்யில் புரட்டினில்
போன நாளெவை? பிறர்க்கு உதவிடப்
போன நாளெவை? சுயநல மீட்புக்காய்ப்
போன நாளெவை? நிழலினைக் கேட்கிறேன்!
யார்க்கும் என்நிழல் குளிர்தந்த நாளெது?
யார்க்கும் என்நிழல் குடைதந்த நாளெது?
யார்க்கும் என்மனம் அருளிய நாளெது?
யார்க்கும் என்குரல் உதவிய நாளெது?
யார்க்கும் என்கவி இதந்தந்த நாளெது?
யார்க்கும் என்னுயிர் ஒளிதந்த நாளெது?
வீணாய் உறங்கி, வில்லங்கப் பகைதேடி
வேரும் அறுந்து ஈடாடிய நாளெது?
யாரையும் நோகடித் திட்ட நாளெது?
யாரையும் பழி தீர்த்திட்ட நாளெது?
யார்க்கும் துரோகம் செய்த பொய் நாளெது?
யாருக்கும் கண்ணீர் சிந்திய நாளெது?
யானே நிம்மதி காணும் படி…நானாய்
யார்க்கும் உதவி அவரின் இடர்வீழ்த்தி
வாழ்ந்த நாளெது? வாய்ச்சொல்லில் வீரனாய்
வாழ்ந்திடாது…செயற் பட்ட நந்நாளெது?
போன காலமோ போனது தான்; வாழ்வில்
போன நாட்கள் புதைந்தவை தான்; அதில்
வீணெனப் போன நாட்கள் அதிகமா?
வீணடிக் காத நாட்கள் அதிகமா?
கேள்வி கட்குச் சரியான விடையின்றிக்
கிடப்பதால்…வரும் நாட்களும் வீணாகிப்
போகலாம்! அதால் மீதமாய் உள்ளதை
வீணடிக்காது உண்மையைத் தேடுவோம்!
என்னைச் சுகப்படுத்து
உன்னைவிட உலகில் யாரும் துணையில்லா
என்னை அணைத்துக்கொள்;
எனது உடல்காக்க
உன்னையொரு கவச குண்டலமாய் நல்கையா!
சின்னச் சிராய்ப்பும்
குருதிசிந்தும் காயமதும்
பென்னம் பெருந்தழும்பும் எந்தவித வடுவும்
என்னை அணுகாமற் தடுத்து
ஆட் கொண்டுவிடு!
இந்த மனதை இரணமாக்க
எத்தனிக்கும்
பேய்களது கைகாலைப் பிடுங்கியெடு!
என்னுயிரின்
வலியையுன் கடைக்கண் பார்வைக் களிம்புபூசி
ஆற்றிவிடு!
உளமோ கல்விழுந்த குள…அலையாய்
சஞ்சலப் படும்போது சாந்தப் படுத்திடவா!
எந்தன் அகமோ இடிவிழுந்து கருகாதுன்
மந்திரக் கரத்தையே
இடிதாங்கி ஆக்கித்தா!
உன்னைவிட உறுதுணைகள் யாரும் உலகிலில்லை,
நின்னைவிட யாவரையும்
யான் நம்பப் போவதில்லை,
உன்னைவிட அமைதிதர ஓர்உறவும் எனக்கில்லை,
என்பதனால்…
எனக்கு நிழலாய் நீ அபயமருள்!
உன்கருணை மழையாலென்
உளக்கோபக் கொதிப்படக்கு!
உன்பரிவுப் பனிநோக்கால்
மனக்கலக்கம் தெளிந்திடவை!
புன்னகையாம் தென்றலினால் என்னுயிர்க்கு
மருந்துகட்டி
உன் கை வருடலினால் என் ஐயம், அச்சமோட்டி
என்னைச் சுகப்படுத்து எக்கணமும்
நல்லூரா!
கல்லால மரநிழலில் கருணை கூர்ந்த
கடவுளைநான் காணவில்லை; போதி என்ற
நல்லமர நிழலினிலே ஞானம் பெற்றும்
நடக்கவில்லை நான்; ஏதும் சிலுவை தூக்கி
இல்லைஉயிர் என்றிருந்து…உயிர்த்து…ஊர்க்கு
இறைதூதன் எனும்படி யான் உயர வில்லை!
வெல்வதற்கே பிறந்திருந்த அசுரர் போலும்
விளையவில்லை; வெறும் நரனென் வினையால் வாழ்வேன்.
கணங்கணமும் ஓயாத அலைகள் போலே
கடுந்துயர்கள் வழிமறிக்கும்; மிரட்டிப் பார்க்கும்.
வணங்கியெழச் சொல்லும்; ஆம் வாய்மை மீறி
வழிதவறத் தூண்டும்; பொய் பித்தலாட்டம்
“துணைஉனக்கு” எனத் தொடரும்; இவற்றை எல்லாம்
துச்சமெனத் துணிந்தெதிர்த்து மனிதன் என்ற
உணர்வூற வாழ்ந்து ஒரு கவிஞன் ஆகி
உயிர்க் கவியால் வலிதுடைப்பேன்…சிறியோன்…நானும்!