இளையதலைமுறையின் எண்ணங்கள் சில

தமிழால் பட்டைதீட்டப்பட்டவைரம்

காலாதிகாலமாக எமது பாராம்பரியத்தில் இதிகாசங்கள், புராணங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை வெறும் கட்டுக் கதைகள், புளுகுகள் என“எமதுசிலநவீனர்களால்”மதிப்பிடப்பட்டும் கூட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காலக்கறையானால் இவை அரிக்கப்படாமல் இருப்பது உலகே அறிந்துகொள்ள முடியாத அறிவியலாகிவிட்டது. வெறும் கதைகள் என்ற எல்லைகளைத் தாண்டி, இவை தமக்குள் ஆழ்ந்த அழிவில்லா அறக்கருத்துக்களை கொண்டிருப்பதே இவற்றின் ‘சிரஞ்சீவிதனத்திற்கு’ ஒருகாரணமெனலாம். அதாவது இவை சிலவிழுமியக் கருத்துக்கள், பாமரனும் புரிந்து அறியக்கூடிய விதத்தில் எளியகதைகளாக வழங்கி எல்லாரையும் என்றென்றும் வழிப்படுத்திவருகின்றன.
இப்படிச சாகாவரம் பெற்ற ‘அற ஆக்கங்கள்’இ நிலையான ஆன்மா வௌ;வேறு பிறப்புக்களில் வௌ;வேறு ‘உடலுரு’ எடுப்பதுபோல, காலத்துக்குக் காலம் சிறுத்தும், விரிந்தும், மொழிவரையறைகளைக் கடந்தும் நிலைபேறடைவது கண்கூடானது.

திரு. முருகையன் அவர்களின் ‘இளநலம்’ என்பதும் சாகாவரம் பெற்ற தத்தவ ஆன்மாவொன்று தமிழுடல் எடுத்திருப்பது போன்றதே எனக் கூறலாம்.

வடமொழியில் காளிதாசன் பாடிய குமாரசம்வத்தின் முக்கியமான “அந்தம்” சும்மா பாட்டி வடை சுட்ட கதையாக தமிழுக்கு தரப்படாமல் “வடமொழியில் காணப்படும் இந்த அடிநாதக் கருத்து எம்மிடம் இல்லையே” என்ற ஆதங்கத்தில் முருகையன் அவர்களால் இறைவியார் அகப்பொருளாக்கப் பட்டுள்ளது.

இது வெறும் ‘இன்பஆடல்’ மட்டுமல்ல. பரம்பொருளும், சக்தியும் சேரும் படைத்தல் தத்துவவத்தின் யாதார்த்த, இலக்கியப் பதிப்பு இது ஆகும். இதனை வெறுமனே இன்ப ஆடலாகக் கண்டுவிரசம் இரசிப்பவர்கள் தோற்றுப் போவார்கள். ஆழங்கண்டவர்கள் இதனுள் அமிழ்ந்து ஆனந்திப்பார்கள்.

இந்த ‘இன்பஆடல்’ தேவைதானா என்னும் கேள்வி எழக்கூடும். “குமாரசம்பவத்தின்” முதல் ஏழு சருக்கங்களும் தமிழில் செய்யுள் வடிவில் ஏலவே பெயர்க்கப்பட்டுள்ளன. குமரன் ‘உதிக்கத் தொடங்கும்’ மிகமுக்கிய “சம்பவமே” எட்டாம் சருக்கமாகும். இது தமிழரின் ‘தயக்கத்தினால்’ தவறவிடப் பட்டதுபோலும். சிற்பமொன்றைச் செய்து அதன் கண் திறப்பதே கடைசிவேலை; முக்கியமானது! குமாரசம்பவம் எனும் சிற்பம் தமிழில் ஒருவாறு செதுக்கப்பட்டே இருந்தது; இப்போது முருகையன் அவர்களால் கண்திறக்கப் பட்டுள்ளது.

இப் பகுதியை விரசமானது என்று ஒதுக்கி எறியத் தேவையில்லை. கம்பன் தமிழ் மரபு,பண்பாட்டுக் ஏற்ப இராமகாதை பாடியது போலவே இதில் “தமிழ்”ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்பாட்டுமறையிலே “அதிஉச்சமான உணர்சிச் சம்பவங்களை”க் கூட முருகையன் தமிழாக்கி இருக்கிறார்.

“காதற் பாடம் கடவுள் பழக்கினான்
கட்டிலே கவுரிக் கொரு பள்ளியாம்
ஒதுவித்த குருவுக்குஇ தட்சணை
உதவல் போலமென் மேனி வழங்கினாள்”

“கங்கை ஆற்று மணலென மின்னிடும்
கட்டி லொன்றிலே…அன்னத்தின் தூவிபோல்
பொங்கி நின்றவிரிப்பு; வெண்மேகமாய்ப்
பொலிய, ஈசன் ‘முழுநிலா’ ஆகினான்.”

“கை விலக்கினான்; தூக்கம் குழம்பிய
கண்ணும்; காயம் படர் கனிக் கொவ்வையும்
செய் நலன்கள் கலைந்துள கூந்தலும்
திலகம் நீங்கிய நெற்றியும் காண்கிறான்.”

இந்த மூன்று பாடல்களின் மூலமும் கடவுளின் காமத்தை கூற எவ்வளவு ‘நளினமாக’ முருகையன் காவிய நயமாக்கிவிடுகிறார்! இவரின் கவித்துவம் விரசத்தை விழுங்கிச் செமித்துவிடுகிறது. “இறைவியார் அகப்பொருள்” கலையாகிவிடுகிறது. இதற்குப் பின்னும் இப்பாடல்களை எடைபோடாமல் “ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலாதவர்கள்” இது ‘காமச் சமாச்சாரமே’ எனவாதிட்டால்…கம்பனின் உண்டாட்டு படலத்தை; ஜெயங் கொண்டானின் ‘கடைதிறப்பை; சங்க அகத்துறை வேட்கைகளை; அருணகிரியாரின் “அருக்குமங்கையர்…” போன்ற திருப்புகழ்களை; பட்டினத்தடிகளின் பலபாட்டுக்களை என் செய்யப் போகிறோம்? இவையும் தவிர்க்க முடியாத எமது பண்பாட்டுத் தகைமைகள் தானென்பதே யதார்த்தம்.

சரி, இக்காலத்திற்கு இது தேவைதானா என்ற புளித்துப்போன கேள்விக்குப் பதிலைப் பார்ப்போம்! இன்றோ, நாளையோ நிகழும் சம்பவங்களைக் கலையாக்கினால் அவை இன்றைக்கும் நாளைக்கும் தான் பொருந்தும். என்றென்றும் நிலைபேறடைய முடியாது. ஆனால் குமாரசம்பவம் சொல்லும் “தத்துவ அடிநாதம்” என்றென்றும் இருக்கப்போவது; நிலைபேறானது; அது எமக்கு நேற்றும் பயன்பட்டது; இன்றும் பயன்படுகிறது ; நாளையும் பயன்படும். எனவே இது போன்ற “மெய்நூல்களின் விம்பங்கள்” என்றும் தேவையானவை தான். எனவே இது இன்றும் தேவையானதுதான்.

ஈழத்தின் “மஹாகவி” அவர்கள் “இராமாயண அகலிகையை”த் தமது அகலிகையாக மாற்றிய சித்துப் போன்றதே இந்த முயற்சியும் என்பது எனது அபிப்பிராயம். தனது கோணத்தில், தனது பார்வையில், தனது சுவையுடன் “அடிநாதம் மாறாமல்” முருகையனால் இது பிரதியெடுக்கப் பட்டுள்ளது. இதில் காளிதாசன், ர்நகைநவணஇ முருகையன் ஆகியோரின் “மூன்றுமுகங்கள்” பளிச்சிடுவது சிறப்பம்சமானது. இவ்விடத்தில் ஒன்று கூற வேண்டும்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்” என்பது பாரதியின் ஆதங்கம். எங்கள் இந்து மதத்தின் ஒரு மிகமுக்கிய “கூறை” ஒருமேற்கத்தியர் வடமொழி பயின்று, படியெடுத்து ‘உலகம் உய்ய’ வழங்கியிருக்கிறார் எனும் போது…நாங்கள் எங்கே நிற்கிறோம்? மேற்கத்திய மாயையில் மீண்டும் நமது ‘அறிஞர் பெருமக்கள்’ என்ன செய்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்துமதத்தின் சொத்தாம் முத்தொன்றை, தமிழர்களான நாம் அறிய வழி செய்த, எங்கோ இருக்கும் முகம் அறியாத அந்த ‘ஆங்கில அறிஞனுக்கு’ நாம் நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். நன்றி கூறாதுவிடின் நாம் தமிழராக முடியாது. கடைசியாக,

முருகையன் அவர்களின் ஆக்கத்தை எடைபோட என்னால் முடியாது. அதன் தன்மைகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறேன்.

இறுக்கமான இலக்கணக் கட்டுமானம், சட்டென்று வியப்பை ஏற்படுத்தும் சொற்சேர்க்கைகள், தெளிவாக இலகுவில் விளங்கும் நடை, கற்பனைகளைக் காட்சிப்படுத்தும் கச்சிதம் என்பன முருகையன் அவர்களின் தனிச் சிறப்புகள். இது மொழிபெயர்ப்பு என்பதால் அவரின் முழு விஸ்வரூபமும் இதில் புலப்படவில்லை. எனினும், வடமொழிக் காவியநயங்கள், ஆங்கில மூலத்திலிருந்து உயிர் குறையாத தமிழில் எதுவித இடைஞ்சல்களு மில்லாமல் ‘இளநலம்’ ஆக முருகையன் மொழி பெயர்த்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இது சாமானியரால் நிகழும் காரியமல்ல் சாதனைக் காரியம் தான்.

‘கங்கையாளின் இதழ்களைக் கவ்விய
கடல் மணாளன் இனிமை பருகல்போல்
சங்கரன் தன் மனைவியைச் சார்ந்தனன்
தலைவி இன்பம் தரல் பெறல் ஆயினாள்.’

‘கவ்வப் பட்ட இதழ் படும் நோவிலே
கைநடுங்க அடுத்த கணத்திலே
சைவப் பேரருளானின் சடாமுடிச்
சந்திரன் கதிர்த் தண்மையில் ஆற்றினாள்.’

“கூம்பும் தாமரை தும்பி விரும்பினால்
குடிபுகட்டும் இரவில்” எம் உள்ளெனத்
தாம் திறந்து சிறிது வழிவிடும்
தன்மை காட்டி அருள் நெறி சார்ந்தன.’

‘நிலவு தன் கதிர் நீட்டி இருட்டெனும்
நெடிய கூந்தல் அள்ளிடும்…கொஞ்சிடும்
இரவு தாமரை கண்கள் மூடுமே–
எழுந்த நாண உணர்வின் அருட்சியால்.’

‘முன்பின் இன்றி, முடிவின்றி எங்கணும்
மூடி நிற்கும் இருட்குழி தன்னிலே
கண் புகுந்திட ஆற்றல் இலாததோர்
கருவறைக்குள் உலகு கிடப்பதே.’

இந்த ஒருபானை பாட்டுச் சோற்றுக்குப் ‘பதமான’ ஜந்துபாட்டுச் சோறுகள் இவை. இதிலிருந்தே காவிய நயத்தைக் கணித்துக் கொள்ளலாம் தானே!

மொத்தத்தில் திரு.முருகையன் அவர்களின் படைப்புக்களில் இது வைரம் தான். ஆம்; வடமொழி வைரக்கல் ஒன்றைத் தமிழால் பட்டைதீட்டி ஜொலிக்கும் வைரமாக்கியிருக்கின்றார்
இது பெருமைக்குரியது.

,அன்புடன்
த.ஜெயசீலன்
328,பருத்தித்துறைவீதி
நல்லூர்,யாழ்ப்பாணம்.

இது 2000 ஆம் ஆண்டில் கவிஞர் முருகையனால் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட காளிதாசனின் வடமொழி நூலான ‘குமார சம்பவம்’ எட்டாம் சருக்கம் ‘இன்ப ஆடல்’ முழவதும் கொண்ட கலைச்சுவைப் படையல் நூலான ‘இளநலம்;’ நூலுக்கு என்னால் வழங்கப்பட்ட நயப்புரை ஆகும். இது ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’ வெளியீடாக வந்தபோது பிற்சேர்க்கை 3, பகுதியில் “ இளைய தலைமுறையின் எண்ணங்கள் சில” என்ற மகுடத்தின் கீழ் பிரசுரிக்கப் பட்டது. இவ் ‘இளநலம்’ முருகையனின் கவிப் படைப்பாற்றல், மொழிபெயர்ப்பு என்பவற்றின் தனித்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய படைப்பு என்றால் மிகையில்லை.

Leave a Reply