உளிநுனிகளால் உணர்வைச் செதுக்கிடும்
உன்னதக் கலை வல்லவா! சிற்பங்கள்
விழிதிறந்துயிர் பெற்று உலவிட
‘விஸ்வ கர்மாவாய்’ வந்திங்கு வாழ்ந்தவா!
கலசம், யாளிகள், வாகனம், பீடத்தில்
கவிதை மின்னிட வைத்தவா! தேர்களின்
அழகில் வையமே சொக்கிடச் ‘செய்தவா’!
அதற்குள் ஏனின்று வானகம் ஏகினாய்?
கம்பனின் புகழ் பாடிடும் கோட்டத்தில்
காணுமிட மெல்லாம் நின்கையின் வண்ணமாம்
அம்சங்கள்…இன்று கண்ணீர் உகுத்தன.
அற்புதச் சிம்மாசனம் வெம்புது!
அன்பையும் பொன்னாய் அள்ளி வழங்கி எம்
அத்தி வாரத்திற்கு ஆதாரம் ஆகிய
இன்பமே உந்தன் பிரிவினை எப்படி
இதயம் ஏற்கும்? கண் நதியின்று காய்ந்தது.
நின் விரல்களில் கவின் அரசாண்டது.
நின் முகத்திலே தெய்வீகம் வாழ்ந்தது.
நின் மனத்தில் அருள் குடிபூந்தது.
நின் செயல்களில் அறமும் மிளிர்ந்தது.
நின் கொடையால் கலைகள் வளர்ந்தது.
நின் சிறப்புக்குச் சான்று நூறுள்ளது.
இன்று எம் நெஞ்சம் அழுகுது பொய்யுடல்
எரியும் நின்புகழ் என்றும் இறவாது!