வெள்ளைமேனியர் சூழ்ந்தும், அப்…பாரதம்
வெளிக்கவே இல்லை் இருண்டுகிடந்தது.
துள்ளிபிரிட்டிஷ் துரைகள் நடந்தனர்
சுதேசியம் சோர்ந்துமுடமாய் முடங்கிற்று!
வெள்ளிபோல் சிற்றரசர் சிலர் நின்றார்.
வீரபாண்டியகட்டப் பொம்மன் போன்றோர்….!
வெள்ளைவெள்ளமோ மூடிக் கவிந்தது.
வேதனைக்குளேபாரதம் மூழ்கிற்று!
இந்த‘காலனிக்’ கொடியயுகத்திலே
இந்தியர் தங்கள் முகத்தைத் தொலைத்தனர்.
கந்தலாகினர் கருகியும் வாடினர்
கதியிழந்தனர்…கைப்பொம்மையாகினர்!
பந்தம் பிடித்தவர் ஆங்கிலம் கற்றனர்
பதவிபெற்றனர்! பாரதநேசரோ
‘வந்தேமாதரம்’சொல்லவும் அஞ்சினர்!
மானஸ்தர் வெஞ்சிறையில் செக்காட்டினர்!
நீண்டுபிணைத்தஅடிமைத் தழைகளை
நெஞ்சுறுதியாம் ஆன்மபலத்தினால்
சீண்டிப் பார்த்து முயன்று அமைதியாய்
சிறிதுசிறிதாய் அஹிம்சைஅறஞ்செய்து
பாண்டவர் போலேபோருக்குப் போகாது
பசியைஆயுதம் ஆக்கித் …தனைத்தானே
மீண்டும் மீண்டும் வருத்திக்…கரையாத —
வெள்ளைக் கல்லுளம் கரைத்தவர்…காந்திஜீ!
பொக்கைவாயும்,சிரிப்பும்,வழுக்கையும்,
போர்த்தசால்வையும்,நால்முழவேட்டியும்,
நிற்கநடக்கஉதவும் கைக் கோலொன்றும்,
நேர்மைகாட்டும் கண்ணும்,கண்ணாடியும,
எக்கணமும் இளைக்காமெலிந்த…சீர்
எஃகுதேகமும்,காந்தியின் அடையாளம்!
முக்கியம் இவை அல்ல.. அவர் வாழ்க்கை
முறைமையே…உண்மை,எளிமைக் கிலக்கணம்.
வாழ்க்கையை..,அரிச்சந்திரநாடகம்
பார்த்துவரித்து ஓர் கொள்கைதவறாமல்
ஆழ்வதேவாழ்வின் அர்த்தமாய் வாழ்ந்தவர்.
அறத்தைமெய்யைக் கவசமாய்ப் பூண்டவர்.
தானேதன்னாடைநெய்தஎளிமையர்.
சுய உழைப்பதன் மேன்மையைச் சொன்னவர்!
கேளீராய்ச் சகமக்களைப் பார்த்தவர்
கீழைத் தத்துவஞான… வடிவிவர்
உப்புச் சத்தியாக் கிரகம் நடத்தியும்,
ஒத்துழை யாமைக் கொள்கையால் மக்களை
வெப்பமேற்றியும்,தாழ்ந்துநலிந்திட்ட
“ஹரிஜனர்”வீறுகொள்ள வழி செய்தும்,
துப்பாக்கிகுண்டுபீரங்கியைக் கூட
துணிந்துஉண்ணாநோன்பினால் வீழ்த்தியும்,
கற்பனைச் சுய ராச்சியம் கைவரக்
‘காந்தியப் பாதை’காட்டியும்,வென்றவர்!
“சத்யசோதனை”தன்னைத்தன் வாழ்க்கையால்
சகலருக்கும் சொல்லி,தன் தவறுகள்
பற்றிஒழிவுமறைவின்றியும் பேசி
பாரில் எங்குசென்றாலும் கதருடன்
சுற்றி,நகைத்திட்ட‘மேற்கை’அடக்கி…தன்
சுயநலம் விட்டு வாடி தன் மார்பிலே
சுட்ட‘கோட்சேயை’மன்னிக்கவும் கெஞ்சி
சுடர்ந்தொளிர்ந்தமஹாத்மாதான்…காந்திஜீ!
– த.ஜெயசீலன்