1990 களில் எழுதத் தொடங்கிய கவிஞர்களில் த.ஜெயசீலன் தனித்துவம் வாய்ந்ததொரு படைப்பாளுமையாக நிலை பெற்றுள்ளார். இயல்வாணன், கோகுலராகவன், தாட்சாயினி, ச.முகுந்தன், சத்திரானி, அனலையூர்ச் சேந்தன்,கி.வாயுபுத்திரன், த.தர்மேந்திரா இமானியூர்ரட்ணேஸ், உடுவில்அரவிந்தன், தத்துவப்பித்தன், இராகன் முதலிய பலர் கவிதைகளை அக்காலத்தில் தொடர்ந்து பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதிவந்தனர். இவர்களில் சிலர் இன்று சிறுகதைத்துறையில் அடையாளம் பதித்தவர்களாக மாறிவிட்டனர். கவிதை எழுதிவந்தவர்களில் இந்த அணியைச்சேர்ந்த பலரும் உதயன்-சஞ்சீவி (கவிதை முற்றம்), முரசொலி, வெளிச்சம் போன்ற அச்சு ஊடகங்களில் எழுதிவந்தனர். இவர்களில் ஒரு சிலர் மரபார்ந்த கவிதைகளை படைப்பவர்களாகவும், பலர் கவிதையின் புதிய வடிவங்களை கையாழ்பவர்களாகவும் அமைந்தனர். இவர்களிடையே கவிதை பற்றிய புரிதல்களிலும் வெளிப்படுத்தும் வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன எனினும் அச்சு ஊடகங்கள் அந்த வேறுபாட்டைக்கடந்த ஒரு ‘பிரக்ஞை’ நிலையினைக் கொண்டிருந்ததால் இந்த இருவேறுபட்ட நெறிகளையும் ஒருசேர வளர்ந்தன.
குறித்த இந்தத்தலைமுறைக்குச்சற்று முந்தியவர்களாக பா.அகிலன், நிலாந்தன், கருணாகரன் போன்ற கவிஞர்கள் தனித்துவமான புதுக்கவிதை மரபில் ஒரு அடையாளத்தைப் பெற்றனர். இவர்களின் அடையாளம் சு.வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம், உ.சேரன் போன்றவாகளின் வழித்தடத்தில் நிலை பெற்றதொன்றாகும். இதன் நீட்சியை ‘வெளிச்சம்’ சரியாக அடயாளப்படுத்தி வளர்த்ததன் வழித்தான் இன்று அறியப்படும். சித்தாந்தன், யாத்ரீகன், தானா விஸ்ணு, எஸ்போஸ், மருதம்கேதீஸ், சத்தியபாலன், துவாரகன், கை.சரவணன்,மயூரரூபன், எனத் தொடரும் ஒரு பட்டடியலில் (பட்டியல் முழுமையாதல்) வரும் கவிஞர்களை அடயாளப் படுத்தியது. இந்த முயற்சியில் அ.யேசுராசா அவர்களின் ‘கவிதை என்ற சிற்றிதழின் இடமும் தனித்துவமானது. சம காலத்தில் புதுவை இரத்தினதுரை, முருகையன்,ச.வே.பஞ்சாட்சரம், கல்வயல் குமாரசாமி, சோ.ப போன்றவர்களின் வழித்தடத்தைப் பின்பற்றிக்கொண்டு வந்த இளைஞர்கள் த.ஜெயசீலன், ச.முகுந்தன், இ.சு.முரளிதரன், ஜெ.கி.ஜெயசீலன், கு.ரஐீவன் என விரிவுபெறும் ஒரு பட்டியலில் (பட்டியல் முழுமையானதல்ல) அடங்குவர். இந்த வேறுபாடு தெட்டத் தெளிவானது எனினும் அதனை முனைப்புப்படுத்திப் பார்ப்பதும்-வளர்த்தெடுப்பதும் அவசியமா? என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் ஏனெனில் யாப்பு, அணி, இலக்கணம் தெரிந்தும், தெரியாமல் வந்த பயிற்சியினாலும் கவிதையின் மரபுவடடிவங்களை கையாண்டு வரும் இந்தத் தலைமுறையின் கவிஞர்களும் கவிதையின் புதிய வடடிவங்களின் வழியும் தம்மை அடையாளப்படுத்த முனைந்துள்னர்
த.ஜெயசீலன் என்ற கவிஞனின் அடயாளம் தனித்துவமானது.கனவுகளின் எல்லை (2001)இ கைகளுக்குள் சிக்காத காற்று (2014) எழுதாத ஒரு கவிதை (2013) போன்ற கவிதைத்தொகுதிகளை இதுவரை வெளியிட்டுள்ள இவர் புயல்மழைக்குப் பின்னான பொழுது(2014) என்ற தொகுதியினை அண்மையில் வெளியிட்டுள்ளார்.ச.வே.பஞ்சாச்சரம் அவர்களினால் இனங்காணப்பட்டு மரபுக்கவிதையை முறைப்படி இ.முருகையனிடம் பயின்று அவரால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு கவிஞன் இவர். புயல் மழைக்குப் பின்னான பொழுது என்ற இவரின் கவிதைத் தொகுதியை முன்னிறுத்தி ஜெயசீலனின் கவிதைகளின் பலம் என்ன? என்பது தொடர்பாக பின்வரும் கருத்துக்களை கூறலாம்.
1. ஜெயசீலனின் கவிதைகள் மரபில் ஊறிய புதுமைகளை வெளிப்படுத்துவன. அதாவது மரபின் சந்தத்துள் சிறைப்பிடிக்கப்பட்டவை.
2. கவியரங்க கலைஞர்கள் தங்களின் கருத்துக்களை மக்களிடம் சேர்ப்பிக்க கையாண்ட ஜனரஞ்சக பண்பான உத்திகளை கவிதைகளின் எழுத்து வடிவத்தில் சேர்த்து – பின்பற்றிவரும் கவிதைகளாயிருத்தல்.
3. இவர் வெளிப்படுத்தும் கவிதையின் புதுவடிவங்களின் எதுகை, மோனை, சீர்,தளைகளுடன் “மீள் ஒழுங்கமைப்பு”செய்ய முனைந்தால் மரபுக் கவிதைகளுக்கான வடிவங்கள் வெளிப்படுமா என்று ஐயுறவைக்கும் கவிதை வடிவங்களாய் அமைதல்.
4. கவிதைக்கான புறவய வெளிப்பாட்டிலும் மாத்திரமன்றி அகவயமான வெளிப்பாட்டிலும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் கவிதைகளாக அமைதல்.
5. வாசகனின் புரிதலுக்கு தடையில்லாத இலாவகமான மொழியில் பேசும் கவிதைகளாக அமைதல்.
த.ஜெயசீலனின் ஏனைய கவிதைத் தொகுதிகளிலும் இத்தகைய பண்புகளை அவதானிக்க முடிந்தாலும் “புயல் மழைக்குப் பின்னான பொழுது” வில் இந்த அம்சங்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பது குறித்து சற்று விரிவாக நோக்கலாம்
‘புனிதமாக்கும் நெருப்பு’(பக்:19) என்ற கவிதைகளில் வரும் ஒரு சில வரிகள்
“ஏனெதற் கென்று
புல் பூண்டறியவில்லை.
ஏதோ சிறு பொறியாச் சுடர்ந்ததணல்….எண்ணெய் ஊற்றி எவரோ உசுப்பக்
கிளைத்தெழுந்து
பொசுக்கிற்று ஊரை
புனிதத்தின் பேராலே!
என்றவாறு அமைகின்றது. இந்த வரிகள் மரபின் சந்தத்துள் வசப்பட்டவை. கவியரங்கில் ‘காதுகளை ஈர்க்கும்’ சந்தங்கள் கொண்டவை. இந்த வரிளை
“ ஏனெதற் கென்று புல்பூண் டறியவில்லை
ஏதோ சிறுபொறியாய்ச் சுடர்ந்த தணல் – எண்ணெய்
ஊற்றி எவரோ உசுப்பக் கிளைத்தெழுந்து
பொசுக்கிற்று ஊரை புனிதத்தின் பேராலே!
என்று கவிஞரின் அனுமதியின்றி மீள ஒழுங்கமைக்கும் போது அவரின் தனித்துவம் வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. இந்த மீள் ஒழுங்கமைத்தல் பல கவிதைகளில் சாத்தியமாவதை கூர்ந்து அவதானிக்கும் போது கவனிக்க முடியும்.
த.ஜெயசீலன் அவர்களின் கவிதை மொழி மிக இலாவகமானது. ‘கடலடி’ பக்:09 என்ற கவிதையில்
“கடல்பொங்கிக் கோபமாய்க் கறுவித் துடித்திருக்கு படகெல்லாம் கரையில் படுத்துளன.
பசியோடு
கரையெங்கும் அடைமழைக்குள் கருவாடாய்…மீனவர்கள்”
என்று வரும் வரிகளில் ‘படகெல்லாம் படுத்துளன’,
‘அடைமழைக்குள் கருவாடாய் மீனவர்கள்’ என்பன கவிதையின் பொருளுக்கு ஏற்ற மொழியின் நுட்பமான பயன்பாடாகின்றது.அவ்வாறே ‘நீ – இல்லாத பொழுது’(பக்:23) என்ற கவிதையில்,
“நெருப்புள் முகிழும்…நீரின் ஒரு துளிபோல்
முளையொன் றெழும்ப முயலும்” என்று குறிப்பிடுகின்றார்.
ஒரு கவிஞனுக்கு நிலைத்த அடையாளம் கொடுப்பது அவனது படிமமொழியும், வடிவ நேர்த்தியும்,வெளிப்படுத்தும் உத்திமுறையுமே ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’(பக்: 12-13) கவிதையில் ஈழத்தில் நிகழ்ந்து முடிந்த போரின் துயரங்களையும் விளைவுகளையும் பாடும்போது:
“குருவியில்லாக் கூடுகளில்
குரங்குகள் குடியேற
குரங்குகளை ஏய்த்துச் சில குயில்கள் முட்டை இட்டுத்
தமைத் பெருக்க…எடுப்பார்கைப் பிள்ளையாச்சு
என் முற்றம்!”
என்று ‘சூட்சுமமாய்’ பாடமுனைகின்றார். இந்த வரிகள் படிமமாகி எம் சிந்தையை விரிக்கின்றது. சிலவற்றுடன் பொருந்திப்பார்க்க வைக்கின்றது. அவரவரின் அனுபவ வெளியில் சிந்திக்க இடம் தருகின்றது. அதே கவிதையில் தன் கணவனுக்கு நிகழ்ந்த கொடுமைக்காக நீதிகேட்கும் ‘கண்ணகி’ என்ற ‘குறியீட்டுப் பெண்’ பற்றிய தொண்மம் காலக்கொடுமை காட்டச் சிந்திக்கப்படும் விதம்
“தேடிக் களைத்தபடி
திருகி முலையெறிந்து
திசை தீக்கத் திராணியற்று
சிதைந்த முலைகளொடு திரிகிறார்கள் கண்ணகிகள்”
என்ற வரிகளில் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய மொழி, படிமம், தொன்மம் என்பன வலிந்து திணிக்கப்படாது, தேவைப்படும்போது வந்து வீழ்ந்தவையாக இயல்பான மொழியுடன் வெளிப்படுவது கூட ஜெயசீலனின் பலமாகவே கருதமுடிகின்றது.
ஜெயசீலனின் புயல் மழைக்குப் பின்னான பொழுதுவில் வரும் கவிதைகளை அவைகூறும் பொருளடிப்படையில் பருமட்டாக:
1. இயற்கை மீதான லயிப்பை பாடுவன
2. நாளாந்த வாழ்வு மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் பாடுவன.
3. போர்க்காலத்தினதும் அதன் தொடச்சியானதுமான விளைவுகளைப் பாடுவன.
4. வெளிச் சொல்ல முடியாத அவசங்களைப் பாடுவன.
5. வாழ்க்கைத் தத்துவங்கள் மற்றும் தத்துவ விசாரங்களைப் படுவன.
என்று வகைப்படுத்திப் பார்க்க முடிகின்றது.
‘வந்து போகும் பறவைகள்’ (பக்:20) ‘பெரும்கடமை’(பக்:36) போன்ற கவிதைகளில் கவிஞரின் இயற்கை தொடர்பான நேசிப்பு வெளிக்காட்டப்படுகின்றது. அடிப்படையில் ஒரு தாவரவியல் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் ‘ உயிர்பல்வகைமை’ தொடர்பாக சிந்திக்க வேண்டிய பொறுப்பும் உள்ளவராதல் வேண்டும். மரங்களை வெட்டிச் சாய்க்கும் மனிதனின் ‘நாகரிகம்’ குறித்து கேள்வியெழுப்பும் இவர்:
‘தணலுள் தளிர்க்கின்ற
முளைகளது வாழ்வுக்காய்
மூன்றுமுறை தினம் நேர்வேன்!
என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
‘கடலடி (பக் : 09) நிச்சயமற்ற நெடுவாழ்வு (பக்: 08) போன்ற கவிதைகள் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பாடுகின்றன. கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வின் எதிர்பார்ப்புக்கள் நிச்சயமற்றதாகிப் போவது தொடர்பாக பாடுகின்றார். கடலடி என்ற கவிதை,
“குஞ்சு குருமான்கள் குலைப்பட்டினியோடு…வெறுங்
கஞ்சிக்காய் காத்திருக்கும் காட்சி
உயிர் பிசைய….”
என்று மீனவரின் வாழ்வின் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தது.
போர் நிகழ்ந்த காலத்தின் கொடுமைகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் கவிஞர் ‘’பின்னான பொழுதில்” தொடரும் துயரங்கள் குறித்து அதிக அக்கறை எடுக்கின்றார். அண்மைக் காலத்தில் வெளியாகும் படைப்புக்கள் (‘’பின்னைப் போர்க்காலப் படைப்புக்கள்’’) போரின் பின்னான சூழலை வெளிப்படுத்துகின்றன. அப்படைப்புக்களில் வெளிப்படும் போரின் நினைவிடை மீண்டெழுதல், போரை மறுதலித்தல், தவறுகளை மீள்வாசித்தல், தொடர் வாழ்வுக்கான உளவளப்படுத்தல்,முன்னாள் போராளிகளின் மீள் வாழ்வு, வாழ்விடத்துக்கான மீள் திரும்புதல், வாழ் நிலத்தைத் தேடி மீட்டல், காணாமல் போனோரின் குடும்பச் சிதைவுகள், தாய்த் தலைமை குடும்ப நிலைகள், பிள்ளைகள் தலைமை தாங்கும் குடும்பத் துயர்கள் என்று தொடரும் பொருள்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் நிகழத்தக்க படைப்பு சூழ்நிலை இன்று காணப்படுகின்றது. இவை படைப்புக்களின் வழிவரன் முறையாக வெளிக்கொணரப்படும் பட்சத்தில் ஈழத் தமிழ் இலக்கியச் சூழலில் ‘பின்னைப் போர்க்கால படைப்புக்கள்’ தொடர்பாக சரியான பதிவுகள் சேகரமாகும். ஜெயசீலனின் கவிதைகளில் மனச்சிகிச்சை (பக்; :26), சாட்சி ( பக் : 13), புயல் மழைக்குப் பின்னான பொழுது ( பக் : 12), கட்டுவோம் நாம் நம் கூட்டை ( பக் : 38) போன்ற கவிதைகள் இதனைச் சரிவர வெளிப்படுத்துகின்றன. “சாட்சி” என்ற கவிதையில்
‘புதைகுழிமேல் மடடுமல்ல
போர் சிதைத்துத் தின்று… மீந்த
வெளிகளிலும்…
எஞ்சிச் சிதறுண்டு போய் எங்கும்
சூனியமாய்க் கிடக்கும்
சுவடிழந்த நிலம் மீதும்
எத்தனையோ பேரின் கனவுகள்’’
என்று வரும் வரிகளில் சுவடிழந்த – சூனியமாய் கிடக்கும் நிலம் பற்றிப் பேசப்படுகின்றது. “ஆதாரம் (பக்: 14) என்ற கவிதையிலும் இதுவே பொருளாய் பேசப்பட்டுள்ளது. ‘மனச் சிகிச்சை’ என்ற கவிதையிலே,
“மருந்து கட்டி விட்டகாயம்
மாறி வருகிறது!
கழற்ற வேணும் என்று முடிவான
அவயவங்கள்
கழற்றிப் பொய்க்கால், கை பொருத்தப்படுகிறது!
மிகப் பெரிய அறுவைச்
சிகிச்சைகள் செய்து
தலைக்குண்டுச் சிதறல்கள் கூட எடுபடுது!
புற உலகில் மாற்றங்கள் புலர்ந்தாலும்
அக மனத்தின்
இரணமும் காயமும் சிதறல் சிதைவுகளும்
பயமும் சந்தேகம் ஜயமும்
அப்படியே
புதையல் போல் கிடக்கிறதே!”
என்ற வரிகளில் ‘கவிதை கடந்த விவரணத் தன்மை’ அதிகம் இருந்த போதிலும் அது கூறும் பொருள் காலத்தேவையினை நன்குணர்ந்து வெளிப்பட்டுள்ளது.
வாழ்வின் “மீளெழுச்சிற்கு” இலவச ஆலோசனை கூற விளையும் – எரிகின்ற வேளையில் எமை விட்டோடிய மனிதர்கள் – தொடர்பான சித்தரிப்பு ஒன்று “கட்டுவோம் நாம் நம் கூட்டை” என்றகவிதையிலே வெளிப்படும் போது
“எங்களயற்
கூடொன்றில் வாழ்ந்து
கொடு நெருப்பைச் சகிக்காமல்
போய்ப்பனிக்குள் குகைதேடித்
தமைத்தாமே போஷித்து
விளைந்தவர்கள் மீண்டெம்
விருட்சங்களை நோண்டி
கிளைகளிலே ஏறிக் கிண்டிக் கிளறி… நாம்
கூடு அமைத்ததிலே
குஞ்சு பொரித்ததிலே,
பேடுகளை அடைகாத்த பெருமையிலே,
“இன்னென்ன
இருக்கென்று” பிழைகள் பிடித்து வகுப்பெடுத்து
பொழிகின்றார் அறிவுரை மழையை…
நாம் தும்மிவிட…”
என்று “விமர்சனம்” தொனிக்கக் கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த வரிகள் தமைத்தாமே போஷித்த மனிதர்கள் பிறரைப் போசிக்க முனையும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து சிந்திக்கத் தூண்டுவனவாக அமைகின்றன.
ஒரு படைப்பாளி தனக்குள் எழும் எல்லா வித மன அம்சங்களையும் வெளிப்படையானச் சொல்லிவிட முடியாத காலமொன்றில் வாழும் போது அவன் கூற வரும் ‘பொருள்’ மறை பொருளாகின்றது. மறை பொருளை ஏந்தி வரும் படைப்பின் வடிவம் அதற்கமைவாக மாறிவிடுகின்றது.: “கொழுந்துகளும் அட்டைகளும்” (பக் : 41 ), குழலோலம் (பக் : 46)இ போன்ற கவிதைகள் இத்தகையவை. இந்தக் கவிதைகளில் ஜெயசீலனின் மரபுக் கவிதை அடையாளம் ‘மங்கி’ கவிதை வடிவம், வெளிப்படுத்தும் முறை வேறகிப் போவதையும் இனங்காண முடிகின்றது.
ஜெயசீலனின் முன்னைய கவிதைத் தொகுதிகளில் அதிகம் வெளிப்படாத ஒரு பண்பாக இத்தொகுதியில் அவரின் தத்துவ விசாரங்களுடன் கூடிய கவிதைகள் அமைந்துள்ளன. நிர்வாண யோகம் (பக் : 61 ),கணமாற்றம் (பக் : 41 ) , வாழ்வினது அர்த்தம் (பக் : 75 ), சமநிலை (பக் : 64), போன்ற கவிதைகள் இந்தத் தத்துவ விசாரங்களை மனித வாழ்வு, மரணம், புறவுலகம் என்பன தொடர்பாகச் செய்கின்றன.
“ஒரு முகிலின் வடிவில் ஒன்றி
அதை வியந்து
என் எண்ணம் எங்கோ
சென்று திரும்பி வந்த
சில கணத்தின் பின் பார்த்தேன்;;;;;;;;,
நான் இரசித்த முகில் வடிவம்
மாறிப் புது வடிவாய் எனை வியப்பில்
ஆழ்த்திற்று”
என்று ‘கணபங்க வாதம்’ பாடுகின்றார் கவிஞர்.
பொது நிலையில் கவிஞர்கள் அகவய அனுபவங்களையும் புறவய அனுபவங்களையும் தருபவர்கள். இன்றைய கவிதைப் போக்குகளில் அகவய அனுபவம் குறித்துஅதிகளவில் அக்கறை கொள்ளப்படுகின்றது. மரபு வழியான கவிதைப் போக்கிலே வந்த ஒரு கவிஞன் பெரும்பாலும் புறவயமான அனுபவங்களைக் கவிதைகளில் வெளிப்படுத்துவது தவிர்க்கவியலாதது. ஏனெனில், மரபு வடிவங்கள் தமக்குள் கூறவந்த விடயத்தை ‘வளைத்து’ போடவேண்டியவையாயிருந்தன. இன்று அப்படியல்ல விடயத்துக்கேற்ப வடிவத்தை நெகிழ்த்தும் வழிவகைகள் உள்ளன.பொருள் வடிவத்தைத் தீர்மானிக்கும் நிலையில் ஒரு கவிஞனின் பரிமாணம் மாற்றமுறுகின்றது. ஜெயசீலனை பொறுத்தவரை முறையான மரபுப் பரீடச்சயத்தை வெளிப்படுத்தும் அதேவேளை தன் படைப்பாளுமையினால் புதிய வடிவங்களைக் கையாளும் திறனகளை உள்ளமைத்தள்ளார். ‘ஒரு பொறிச் சூரியன்’ (பக்:35), துயில் (பக்:24), ‘கனவுகள் விற்பவனும் வாங்குவோனும் (பக்:29) போன்ற கவிதைகள் எந்தப் புலத்து அனுபவ வேறுபாடுள்ள மனிதனுக்கும் ‘பொது நிலை அனுபவம்’ தரும் கவிதைகளாக வந்துள்ளன. இன்றைய தலைமுறையின் ஈழத்துத் தழிழ்க் கவிஞர்களில் இந்த இருவகை தடத்திலும் பயணிக்க வல்ல கவிஞராகவும், வாசகனுக்கு மிக அணுக்கமான மொழியில் பாடுபவராகவும் ஜெயசீலன் இந்தத் தொகுதியில் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.
(இக் கட்டுரை 21.12.2014 திகதிய தினக்குரல் வாரமலரின் பனுவல் பகுதியில் பிரசுரமானது)