அண்மையிலே த.ஜெயசீலனின் ‘கனவுகளின் எல்லை’ என்ற கவிதைத்தொகுப்பு வெளியானது. பல கவியரங்குகள் கண்ட இவர் கவிதைத்துறைக்கு புதியவரல்ல. ‘கனவுகளின் எல்லை’ இவரது முதலாவது கவிதை நூலாகும்.
‘கனவுகளின் எல்லை’ சிறந்த கவிஞன் ஒருவனை எங்களிற்கு இனம்காட்டுகின்றது. நல்ல கவிதைகள் எப்போதுமே மறைந்துவிடுவதி;ல்லை. அந்த வகையிலே தான் த.ஜெயசீலனின் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் காலத்தால் அழியாத பதிவுகள். இந்நூலினைப் படிப்போர் இது மிகைப்பட்ட கூற்றல்ல என்பதனை உணர்ந்துகொள்வர்.
த.ஜெயசீலனே சொல்வது போல நாலுவரி சும்மா நாட்டிவிட்டு பாவலன் யான் என குலைக்கும் போலிகளே கூடிவிட்ட சூழலில் மங்காத பொன் ஓவியங்களான கவிதைகளாய் தமிழிற்கு அணிசெய்த கவிஞன் ஒருவனை ஈழத்து தமிழ் இலக்கியம் பதிவு செய்யப் போகிறது என்பதில் நாம் எல்லாம் பெருமைப்படலாம்.
இது குறித்து ஜெயசீலனின் கவிதை வரிகள் பின்வருமாறு விமர்சனம் செய்கின்றன.
“புற்றீசல் போலப் புறப்பட்டு ‘சொற்சிலம்பம்’
விற்போர் நடத்தும் வெருளிகளால் – பொற்பழிந்து
போனாலும்…ஓராள் புறப்பட்டுப் பாரதிபோல்
சீராட்டின் பூப்பாய் சிரித்து”
இவ்விதம் கூறும் இவரின் கவிதைகள் எத்தகையன என்று பார்ப்பின் அவை இதயவீணையின் இனிய அதிர்வுகள் – வசந்தகாலத்தூறல்கள் – சுகமான ராகங்கள் – குரூர வசிகரங்கள் எனலாம்.
தமிழர் போராட்டம் முனைப்படைந்தபோது எரியும் பிரச்சனைகள் கவிதைப் பொருளாயின. வீரஞ்செறிந்த வரலாற்று ஆவணங்னகளாக அவை பதிவு செய்யப்பட்டன. அவற்றின் தொடர்ச்சி இன்றும் நீடிக்கின்றது. த.ஜெயசீலன் கவிதைகளில் பல குரூரங்களின் சித்தரிப்புகளே.
இக்கவிஞரின் பொருட்கையாட்சியை
யதார்த்தமும் மனோரதியமும் இணைந்த தன்னுணர்ச்சியாக்கங்கள் எனலாம். அவற்றை பகுத்து பின்வருமாறு வகைப்படுத்தமுடியும்.
1. சமூகம் சார்ந்த சமகால எரியும் பிரச்சனைகள்
2. இயற்கையான எழிற்கோலங்கள்
3. கவிதை பற்றியும் கவிஞர்கள் பற்றியதுமான கவிதைகள்
4. நுண்ணிய தத்துவ சிந்தணைகள்
5. காதல் கவிதைகள்
இக்கவிதைகள் சரளமான ஓட்டம் கொண்டவை. தனித்துவமானவை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அதன் அழகியல் அத்துடன் தற்புதுமை கொண்ட உத்திகள்.
பள்ளிஎழுச்சி என்ற கவிதையின் இறுதிபகுதி “எங்கே இம்மண்ணின் இளைய திலகங்கள்?” என்று தொடங்கி “விடிந்துள்ளது : இளையவரே பள்ளி எழுந்து அருள்வீரே” என்று முடிகிறது. இது போன்றவையும்
“தள்ளாடித் தானாய் தலையாட்டும்; இந்த மரம்”,“இசைக்குமரை சுகித்தபடி”“முகிலுக்கு ஆர்தான் முகம் கழுவி விட்டார்கள்.
இருளுக்கார் வெளிச்ச உடைமாற்றிவிட்டார்கள்.
வண்டுகளின் வாய்களில் வாத்தியம் வைத்தது யார்?”
போன்று வரும் பகுதிகளும் முற்குறிப்பிடப்பட்ட தற்புதுமை உத்திகளிற்கு சிறந்த உதாரணங்களாகும்.
இக்கவிதைத் தொகுதியின் முற்பகுதி கவிதை பற்றியும் கவிஞர் பற்றியும் ஆகும். கலைஞர்கள் கலையிலே கிறங்கிப் போவதும் அதற்கு இதயம் கொடுத்துப் பரவசமாவதும் தம்மை மறப்பதும் ஒன்றும் புதிதலல்லவே.
“தீயெனவே எழுகுதென்னுள் பாட்டு – அதென்
தேகத்தை உயிரக்க வைத்து உசுப்புகிறது ஊற்று”
என்று கவிஞர் குறிப்பிடுவதும் இதனையே காட்டுகின்றது. “நாடி நரம்பான கவிதைக்கே எந்தன் மூச்சு” என்பதும் கவிதை பற்றிய கவிஞரின் மனக்கோலங்களை புலப்படுத்துகின்றதெனலாம்.
ஒவ்வொரு மனிதரிலும் கவித்துவம் இருக்கிறது. அதை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ ஆனால் அது இருக்கத்தான் செய்கிறது. மனதின் சிணுங்கலிலே, உரசல் ஓசைகளிலே,த.ஜெயசீலன் குறிப்பிடுவது போன்ற தருணங்களில் எல்லாம் இக்கவிதை மரம் பூச்சொரியும். கவிதைப் பூமரத்தை கண்டுணர்க என்பது ஒவ்வொருவரும் தம்முள்ளே உள்ள கவித்துவத்தை கண்டுணர வேண்டும் என்பதே.
நல்லூர் என்ற கவிதை
“வானம் குனிந்து வணங்க… முகில் திரண்டு
பூச்சூட்ட,
கோடி புதினம் குவிந்ததெனக்
கோபுரம் நிமிர்ந்துளது!
குரல் டைவக்கும் நாதமணி…” என்று தொடங்கி “நல்லூர் ஒரு நாளென் கேள்விகட்குப் பதிலளிக்கும்” என்று நிறைவு செய்யப்படுகின்றது. இங்கே அழகியல் மட்டுமல்ல் ஆழமான கருத்தும் உட்பொதிந்து சுவாரஸ்யமாக ரசிப்பை தூண்டுகிறது. நல்லூர் மணியைப்பற்றி சொல்லவந்த கவிஞர் குரல் கொடுக்கும் நாதமணி என்று கவிதையை அமைத்து இருக்கலாம். ஆனால் அவரோ குரல் வைக்கும் நாதமணி என்கிறார். இது இக்கவிதைக்கு கொடுக்கும் அழகியல் உத்தி எனலாம்.
“திருவிழா நாளென்றால் …
பல மடங்கு புனிதம் இந்தத்
தெருவை நனைக்கும்
தெய்வீகம் கரை புரண்டித்
திசையைப் புதுப்பிக்கும் தினந்தோறும் நமைத்திருந்த
நசியாதெம் விழுமியத்தை நல்லூர் மணி காக்கும்.” என்று எழுதிச் செல்கையிலே கறிக்கு உப்புப்போல அழகான சந்த ஓட்டம், ஒருவிதலயம் அங்கே இருக்கிறதை உணரலாம்.
‘அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில்’ என்பதுவும் தற்புதுமை கொண்ட சிறந்த கவிதைக்கு உதாரணமாகும்.
“தங்கமுலாம் பூசி தள்ளாடிக் கீழ்த்திசையில் திங்கள் எழுகின்ற வெண்கம்பளம் விரிக்க வீதி எல்லாம் நிலவின் பால் சிந்துறது” என்று தொடங்கி“அண்ணாந்து வானின் அமுதுண்டு உயிர் உயிர்க்க மண்ணின் நடக்கின்றேன்” என்று தொடர்ந்து “இன்நிலவு முன்பும் இளைஞனென… என் மண்மேல் வந்திருக்கும் எங்கள் வடலிகளில் பனிதடவி சென்றிருக்கும் பண்டைச்சிறப்பையெல்லாம் கண்டிருக்கும்” என்கையாலே கவித்துவம் உச்சத்தை எட்டுகிறது. “மாதர்களின் ஆலாத்தி…” என்று தொடங்கும் அதே கவிதையின் நீட்சி நெருக்கமான சொற்கட்டுக்களால் சற்று தளர்ச்சியடைகிறது.
நினைந்துருதலும், வடலியும் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை. நினைந்துருகல், தூர்ந்துப்போன கிராமத்தைப்பற்றிய ஏக்கமாக விரிகிறது. தாய்மடிக்கு திரும்பமுடியாத புலம்பெயர் மக்களின் எண்ணச்சுமையை – ஏக்கம் பெருமூச்சை துல்லியமாக அமைதியான முறையில் நாடிபிடித்து காட்டுகிறது. “கண்எட்டும் தூரத்தில் கவிழ்ந்திருந்த என் கிராமம் நெஞ்சில் தணல்மூட்ட நிலைகுலைந்தேன். காப்பரன்கள் என்னை அதற்கு மேலே செல்லவிடவில்லை. வந்து மீண்டும் நனைத்தமழை என்னகத்தை குளிர்த்தவில்லை” என்கிறது. இதில் அலங்காரச் சோடனைகள் அதிகமில்லை. ஆனால் சாதாரணமொழிக்குள் அசாதாரண உணர்வை எழுப்பும் தன்மை அமைந்து விடுகிறது.
‘வடலி’ என்ற கவிதையும் தாய்நாட்டில் மீதான ஏக்கத்தை சித்தரிப்பது தான.; போரின் உக்கிரத்தால் சிதைந்த தேசத்தின் பற்றிய மனத்துடிப்பே இது எனலாம். த.ஜெயசீலன் எழுதுவது போல “தங்கநிலம் தணல்அணிந்து தான் கிடக்கிறது. “செங்கமலம் சில நேரம் பூக்கும் சிரிக்காது மன்றில் கவியரங்கு மலர்வதெப்போ தெரியாது”“என்று புதுவடலியெழும்” யாருக்கும் தெரியாது. குறுநகை மலர்வுகளை கொய்யும் தாய்நிலத்தில் எப்படிச் செங்கமலம் பூக்கமுடியும் ஆனாலும் அது சிலவேளைகளில் மட்டுமே பூக்கும். ஆனால் சிரிக்காது படிமங்களை உவமையணி ஊடாட்டத்தில் அழகிய கவிதை பிறந்துவிடுகிறது. இவ்விதம் யதார்த்தத்தை அழகிய உணர்வுடன் கவித்துவமாக வடிக்கின்ற அழகை இக்கவிதைகளை படிப்போர் கட்டாயம் உணர்வர் அனுபவிப்பர்.
‘போர் தொடங்கப்போகிறது’. சராசரியான கவிதை மத்திம பிரிவில் இடக்கூடியது. இதன் முற்பகுதியும் முடிவும் நன்றாக இருந்தபோதிலும் இடையே போரின் முகங்களை புலப்படுத்தும் கவிஞர்; குரூர உண்மைகளை நெருக்கமான சொற்குவியலால் அடுக்கும் போது உயிர்த்துடிப்பை இழந்துவிடுகிறது. அடுத்து வரும் ‘மழைப்போர்’ என்ற கவிதை மிக மோசமானது. அது சொற்குவியலாகவே நின்றுவிடுகிறது. இக்கவிதையின் ஊடே சந்தத்தை ஓடவிட்ட போதிலும் சொல்ல வந்த விடயத்தை விட்டு கருத்தற்ற வெற்றோசை சுழல் பண்பு கொண்டதாக அமைந்துவிடுகிறது. இது கவிதை என்ற பிரிவுக்குள் அடக்கமுடியாதளவு மோசமானது. ஒற்றைக்குரல், எதிரினிலே வீழ்ந்த இடி, விசர்நாயும் போரும், மருட்டும் மழை என்பன சூழலின் கொடூரம் பற்றியவை. விசர்நாய்களும் மனிதம் மரணித்த பேய்களும் மனித வடிவில் இருந்து செய்யும் சித்திரவதைகைள் எமக்கு அதிர்ச்சி ஊட்டுபவை. எவராலும் மன்னிக்கப்பட முடியாதவை. ஜீரணிக்க முடியாதவை. மனிதர்கள் மிருக நிலைநின்று பின்னிறங்கி அரக்கநிலையை அடைந்தமைக்கு சான்றுபகர்பவை. ஆனாலும் மைந்தர்களின் மனவலிமையை – ஓர்மத்தை இக்கவிதைகளில் கண்டு கொள்ளலாம். சிகரட்டின் நக்கல்களை எதிர்கொள்ளும் உள்வலியை இக்கவிதைகள் ஆவணப்படுத்துகின்றன.
படகும் மனசும் வீரம் செறிந்த போராட்டத்தின் படப்பிடிப்பு. நீலக்கடல் ஓலம் அடங்கி ஒளியிழந்து கிடக்கும் காட்சியை காட்சிப்படுத்தும் கவிஞர் பின்வருமாறு காட்டுகிறார்.
“வெறுமை படர்ந்த கடல்
வெறித்து சிவந்த விழி
நெருப்பு எழும் மனது
நிற்கிறேன் இக்கரை மணலில்
மோனக் கடலுக்ன் முழுவிபரம் தெரியும்
அதை
நாளையது சொல்லிடலாம்.
தள்ளாடித் துவண்ட படி
செல்கின்றேன்
நாளை இன்னும் சீக்கிரமாய் நான் வருவேன்.”
மோனக்கடல் வார்த்தைகள் அற்று அமைதி கொள்கிறது. அதற்கு முழுவிபரமும் தெரியும். எப்பொழுதுமே வார்த்தைகளால் எல்லாவற்றையுமே விளக்கி விட முடிகிறதா? என்ன..
தாயகக் கனவைச் சுமந்தபடி இளையவர் செல்லும் துடிப்பை அது அறியும் ஆனாலும் மைந்தர்களின் தியாகத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடிகிறதா? எனவே வெறுமை படர்ந்து வாய்மூடி மௌனிஆகிறது கடல் நினைந்துருக வைக்கும் சம்பவத்தை இதை விட உணர்ச்சி துடிப்புடன் பதிவு செய்ய முடியாது என கருதுகிறேன்.
புள்ளாகிப் போக விரும்பும் ஜெயசீலனின் கவிதை நன்றாக உள்ளது. தடைகளும் துன்பமும் நிறைந்த வாழ்வின் குருவிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனிதர்களுக்கு இல்லைதானே!
‘நெஞ்சுக்குள் பூத்த நிலவு’ என்ற கவிதை வளர் இளம் பருவத்தினருக்கே உரிய காதல் வாழ்க்கை பற்றியது. மெல்உணர்வுகளின் ஊர்வலத்தில் திளைத்த கவிஞனின் இதயமொழி கவிதையூடாக வெளியாகிறது. எனவே இக்கவிதை வெற்றிபெற்றுள்ளதே என்பது தெளிவாகிறது,இக்கவிதைத் தொகுதியில் சராசரியான கவிதைகள் பல உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் பெரும்பாலானவை கவித்துவம் மிகுந்து மனதைத் தொடுகின்றன. பல கவிதைகள் கவித்துவ உச்சத்தை எட்டுகின்றன. சில கவிதைகள் சுய விசாரணை செய்வதாகவும் வாழ்வின் துன்பியல் கோலங்களை வரைவதாகவும் கூட இருக்கின்றன.
கவிதை விமர்சனம் செய்வோர் பலரும் கவிதைகளிலே ஆத்மார்த்தம் இருக்கவேண்டும் என குறிப்பிடப்படுவது உண்டு. இவ் ஆத்மார்த்தம் ஜெயசீலனின் கவிதைகளிலே நிறையவே உண்டு.
த.ஜெயசீலனின் கவிதைகளை பலமுறை படித்ததுண்டு. தோண்டதோண்ட ஊற்றெடுக்கும் ஊற்றாய், விரிக்கும் தோறும் ‘புதுப்புது அர்த்தங்கள்–புதிய வார்ப்புக்கள்’ இது ஒன்றே த.ஜெயசீலன் கவிதைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதற்கு போதுமானதென நம்புகின்றேன்.