காலையைப் பனி கட்டிப் பிடித்துமே
கருணை யற்று உறைந்திட வைத்திடும்
வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான
வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம்
சூடி… காற்று, சாரல், இருள், கூதல்
சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப்
பூசை, தீபம், மந்திரம், திருவெம்பாப்
பாடலால் எங்கள் பாவம் துடைப்பமாம்.
‘ஆதி அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதி’ வீதி சுற்றி வருகையில்
நாதக் குழல் தவில் நர்த்தனம் ஆடிடும்.
நம் மனம் உடல் பரிவால் குதித்திடும்.
“நாதி அற்ற நமக்கு இரங்கு” எனும்
நம் பஜனையில் புலன்கள் சிலிர்த்திடும்.
ஊதுஞ் சங்கு, நற் சேமக்கல ஒலி
உயிர் நரம்பை உரு ஆட வைக்குமாம்!
எட்டுத் திக்கும் எழும் கற்பூரச் சுடர்;
இவர் இவர்க்கெனச் செய்யும் அருச்சனை;
புட்டு, வடை, அவல், சுண்டல், பொரியென
பொழியும் மண்டகப் படிகள்; மனதினைத்
தொட்டு வருடிடும் ‘மாணிக்க வாசகம்’,
சுரந்து, கிழக்கில் இருந்து குளிர் ஓட்டி
எட்டிப் பார்க்கும் கதிர்கள், இவற்றினால்…
எம் கோவிற்தெரு சொர்க்கமாய் மாறுமாம்!