‘அமுத விழா’ வில் எமது ‘இலய ஞானி’

‘எண்பதாம்’ ஆண்டில்; எனக்கு ‘வயதுகள்-
ஏழு’ ஆன பொழுதில்; மிருதங்கம்
கண்டு கேட்டதன் இலயத்தை இரசித்துக்
கற்க ஏங்கினேன்! ‘நல்லை ஆதீனத்தில்’,
‘அண்ணா மலை இசைத்தமிழ் மன்றத்தில்’,
அன்றென் விரலை மடக்கித் “தா..தீ” முதற்
கொண்டு ஒவ்வொன்றாய்ப் பழக்கிய கோமகர்,
குரு, ‘சிதம்பர நாதரைப்’ போற்றுவேன்!

அந்தச் சின்ன வயதில் என் ஆர்வத்தை
அறிந்து நாத நுட்பங்களைப் பிஞ்சுஞ்
சிந்தையும், பத்து விரல்களும், தேர்ந்துமே
தெளிய வைத்தவர்… ‘சிதம்பர நாதனார்’!
மந்திரம் என அவர் சொல்லியே தர
வளர்ந்தேன்! ‘அட்சரப் புரட்டல்’, ‘தளாங்கு’,
சந்த ‘தகஜணு’ பயிற்சி, உடன் பல
தாள பேதங்கள் மனதில் பதிந்ததாம்!

அன்று வாரத்தின் இறுதித் தினங்களில்
‘ஆதீனம்’ ‘கலைக் கோட்டமாய்’ மாறிடும்.
ஒன்று ரெண்டல்ல ஒருநூறு மாணவர்
உணர்ந்து மிருதங்கம், வயலின், குழல், பாட்டு,
நன்று கற்றோம். இடைவேளை நேரத்தில்
நாங்கள் எத்தனை பம்பல், விளையாட்டில்
இன்பம் உற்றோம்? எல்லாம் பசுமையாய்
எண்ணத் திரையில் இன்றோடும்; மகிழ்கிறோம்

மிருதங்க ஆசான் ‘சிதம்பர நாதனார்’
மிருது வாயும், குழப்படிக் காரரை
உறுக்கியும், கற்கும் பாடத்திற் கேற்பவே
ஒவ்வொரு குழு வாகப் பழக்குவார்!
வரிசையாய் ஐந்தாறு மிருதங்கம்
வைத்து… “இனி நீங்கள் வாசியுங்கோ” என
நெறிப்படுத்துவார், தடக்கத் திருத்துவார்.
நிதானமாய்த் தாள உளியாற் செதுக்குவார்.

முதலாம், இரண்டாம் ஆண்டு மாணாக்கர்க்கு
மூத்த ‘கிருபா அண்ணர்’ ‘ஆனந்தராஜன்’
உதவிட…, ஒவ்வோர் குழுக்களும் பாடத்தை
ஊன்றிக் கற்கும்; கேள்வி ஞானம் உடன்
அதில் எமக்குக் கிடைக்கும்; ‘அறை’ சில
அருகிலே விழும்; ஆனால் அங்கானந்த
நதி புரளும்; அயலில் வயலினும்,
நற்குழல், சங்கீதமும், மேய்க்குமாம்!

இறுக்க மான கற்பித்தலின் இடை
“எடுங்கோ பழையாட்கள்” என்பார் சிலநேரம்.
பிறகு என்ன… பெரிய கச்சேரியே
பெருக்கெடுக்கும்; பிரமித்துப் போய் வாய்கள்
திறந்து பார்ப்போம்! விரல்களோ… ‘மிஸ்ரம்’
‘திஸ்ரம்’, ‘சதுஸ்ரம்’, ‘கண்டம்’, ‘சங்கீர்ணம்’ என
நிறையும் தாளங்களூடு இலயங்களை
நேரில் கற்கும்; அப் ‘பரிவு’ எமைத் தூண்டுமாம்!

‘பாலசிங்கம் சேர்’, ‘கணபதிப் பிள்ளை சேர்’,
‘பரமசாமி சேர்’ ‘வேலாயுத பிள்ளையார்,
‘ராதா அக்கா, ‘சித்தி விநாயகம் சேர்’
‘நமசிவாயர்’, ‘வீ.கே. நடராஜனார்’
‘பாக்யா மிஸ்’, ‘புஸ்ப்பரத்தினம் சேர்’,
‘வரவு’ பார்க்கும் ‘மயில்வாகனம் மாஸ்ரர்’,
ஆசான்களாய்க்… கலை வேள்வி நடத்தினர்
அன்று; அந்த நினைவுகள் நீறுமோ?

‘நல்லைச் சூழலில்’ எத்தனை நூறுபேர்
நாம்… மிருதங்கம் கற்றோம்? எண்ணிலார்
நல்லிசை பயின்றோம்! ‘அண்ணாமலை
மன்றம்’ வழங்கிய வாய்ப்பால் நம் தொல்கலை
எல்லை கண்டோம்; போர் இடர் சூழ்ந்தது
எனினும்… எங்கள் கலைகள் அன் றார்த்தது.
‘நல்லை ஆதீனத்தின்’ பின் ‘மங்கையர்க்கரசியில்’
‘சாதனாவில்’ நம் வகுப்பும் தொடர்ந்தது.

எனக்கு மூத்தோராய்க் கற்ற ‘கண்ணதாசர்’,
இனிய ‘வேல்மாறன்’, என்று ஒரு பெரும்
தனி ‘மிருதங்க வாரிசுக் கூட்டம்’ இத்
தரணி எங்கும் செழிக்க …அமுதூட்டி
தனித்துவம் மிகு ‘தண்ணுமை வேந்தனாய்’..,
தன்னிகர் அற்ற நம் ‘இலய ஞானியாய்’..,
தனது பெருமையைப் பேசாத ‘யோகியாய்’..,
தளைத் துயர்ந்தவர் ‘சிதம்பர நாதனார்’!

எத்தனை கச்சேரி, அரங்கேற்றம்?
எத்தனை இசைவிழா? பெரும் பாடகர்
அத்தனை பேர்க்கும் பக்க வாத்யம் தந்து
அசத்தி; பேர், புகழ், விருது, பட்டம், பல
பெற்ற போதிலும் கர்வம் கொள்ளாது; தன்
பின்னவர்க்கும் தன் ஞானத்தை ஊட்டியே
நிற்கும் எளிமைக் குதாரணம், சிந்தா
நிறைகுடம், அன்னான்… நீடூழி வாழணும்!

எனக்குள் ‘ஓசைப்பண்பூட்டிய’ ‘நந்தி”, என்
இளமையில் ‘சுதி சேர்த்த’ முதற் குரு.
எனை இசை மறந்தாலும்… ‘சந்தக்கவி’
இயல்பாய் எனுளூற வைத்த கலைஊற்று.
இனிய ‘அமுத விழா’ வினைக் காண்கிற
எமது ஆசான், ‘சிதம்பர நாதர்’…வென்-
றினியும் பல்லாண்டு வாழ்ந்து ‘இலயமழை’
இன்னும் பெய்திட… வாழ்த்தி மகிழ்கிறோம்!

‘ஈழ மண்ணதன் தண்ணுமை வாத்திய
இலக்கணம்’ என இன்றும் திகழ்கிற
வேளம், ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’, ஊர்
மேடை தோறும் முழங்கிய ‘நாதம்’, பே-
ராழம் கொண்ட ‘இலயக்கடல்’, எம் ‘இசைத்
தாளக் கட்டு’, தகுதியால் இன்றைக்கும்
ஆளும் அன்பு, ஈர்க்கும் பெரும்பண்பு-
ஐயன்; வாழிய… காணுக நூறாண்டு!

Posted in கவிதைகள் | Comments Off on ‘அமுத விழா’ வில் எமது ‘இலய ஞானி’

ஈரம் இருக்கட்டும்.

ஈரம் இருக்கட்டும் இதயத்தில்.
வற்றாத
ஈரம் இருக்கட்டும் எண்ணத்தில்.
காயாத
ஈரம் இருக்கட்டும் எழுத்தில்,
உன் இசை, பேச்சில்.
வீரம் இருந்தாலும், விவேகம் மிளிர்ந்தாலும்,
காரம் மிகுந்தாலும்,
காலம் காலமாய்த் தமிழர்
மானுடம் பேசியதால்…
மனிதம் வளர்த்ததனால்…
காதல் ,இரக்கம் ,கருணை ,அருள் ,அன்பு, ‘அக
வாழ்வினது சாரம்’ என்று வகுத்ததனால்…
வீழ்ந்த எதிரிக்கும் ‘ பேராண்மை’ செய்ததனால்…
ஊரில் பகைவர்க்கும் ‘ஊராண்மை’ புரிந்ததனால்…
கோப நெருப்புக் குமுறி
எரிகையிலும்
சாபம் இடாமல் சகல உயிர்களிலும்
பாசங்கள் காட்டப் பழகியதால்…
இயற்கையுடன்
நேசங்கள் காட்டி நிமிர்ந்ததனால்…
சோதரரே..,
ஈரம் இருக்கட்டும் இதயத்தில்.
வற்றாத
ஈரம் கசியட்டும் எண்ணத்தில்.
காயாத
ஈரம் சுரக்கட்டும் எழுத்தில்,
நும் இசை, பேச்சில்!

Posted in கவிதைகள் | Comments Off on ஈரம் இருக்கட்டும்.

உயர்ந்தும் உதிருவார்.

யாவர் உனக்குத் தீமை விளைப்பினும்,
யாவர் உன்மேல் அவதூ றுரைப்பினும்,
யாரெவர் உனைக் காயப் படுத்தினும்,
யாரெவர் உனைக் களங்கப் படுத்தினும்,
நீ அதற்குப் பழிவாங்க வேண்டிய
தில்லை; காத்து இரு…நினை வீம்புக்கு Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on உயர்ந்தும் உதிருவார்.

உணர்வில் கலந்த நல்லை.

நல்லூர் கொடியேறி விட்டால்
அதன் நாற்திசையும்
பல்வேறு கொண்டாட்டம்.
பக்தித் திருவிழாக்கள்.
அவற்றின் விசேசம்,
அவற்றின் தனித்துவம், Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on உணர்வில் கலந்த நல்லை.

காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on காவல் தெய்வம்

கண் பெற்ற பேறு!

இந்த எழிலினை எங்குமே காண ஏலா-
திந்த அழகைவே றெவருமே
காட்ட ஏலாது.
இந்த வைபோகம் வேறெங்கும் கிடையாது.
இந்த ஆனந்தம் எல்லோர்க்கும் எட்டாது.
இந்தப் பெரும்பேறு ஏற்கார்க்குக் கிட்டாது. Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கண் பெற்ற பேறு!

குலவு நிதம்.

அழகும் அறிவும் அறமும் மறமும்
அருளும் நிறையும் அலங்காரா.
அவுணர் அழிய அமரர் நிமிர
அதிகம் உதவும் பெருமானே.
விழியில் கருணை வழிய, இதழில்
மிருது வசனம் பொழிவோனே. Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on குலவு நிதம்.

எம்மை எமக்குணர்த்தும் விழா.

சனசமுத்திரத் திடையில் தவழ்ந்துவந்தான்
தேரேறி
கனவான் என நல்லை ஆறுகமுகக் கந்தன்.
இந்த சன சமுத்திரத்தில்,
இந்த மக்கள் வெள்ளத்தில்,
சிந்தை இழந்து சிலிர்த்தபடி Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on எம்மை எமக்குணர்த்தும் விழா.

தொழுதோம் உன்னை நம்பியே!

எங்கள் குறை கண்ணில் படவில்லையா? – அட
எங்கள் குரல் காதில் விழவில்லையா
எங்கள் வேண்டுதலுக்குப் பதிலில்லையா? –ஐயா
எங்கள் இடர் கண்டுமின்னும் மெளனமா? Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on தொழுதோம் உன்னை நம்பியே!

நிழலாய்த் தொடரு!

யாரா யினிலும் அவர் அண் டிவர
சாதா ரணமாய்த் தழுவும் தலைவா!
வேரா கஎமக் குதவும் அரனே
வேலா பெருநல் லைகுகா சரணம்! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on நிழலாய்த் தொடரு!

தேரிலேறி தீமை தீய்ப்பான்

‘ஆறுமுகர்’ தேரிலேறி ஆடி வந்திடும் – காலை
அதிசயங்கள், அற்புதங்கள் கோடி பொங்கிடும்.
வீறுகொண் டாக்ரோஷமோடு சஞ்சரித்திடும் – வேலன்
விழிப்பிளம்பு தீமைகளை சங்கரித்திடும். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on தேரிலேறி தீமை தீய்ப்பான்

நல்லூரானை நாடி.

எங்கிருந்து இங்கு சனம் வந்து சேர்ந்தது? – அட
எள்ளுவிழ இடமிலாது எவ்வாறு சூழ்ந்தது?
எங்கிருந்து எந்தக் காந்தம் ஈர்த்திழுக்குது? – பக்தர்
இதயம் நல்லை அறுமுகனைத் தேடித் திரழுது!

யாரும் சேர்த்திடாது வந்திணைந்த கூட்டமாம் – ஏதும்
யாசகங்கள் வாங்கி சேர்ந்திடாதிந் நாட்டமாம்.
பேர் புகழிற்காக ஏங்கிடாத தேட்டமாம்- நல்லை
பெரியவன் தேரேறக் கண்டால்… ஆட்டம் பாட்டமாம்.

உடல் முழுக்க அலகு குத்தி வலி பொறுத்துமே -பறவை,
தூக்குக் காவடிகள், வந்து வியக்க வைக்குமே
அட இவரின் அன்பிற் கீடேதுமில்லையே – நல்லை
அரனின் வெறியர் அவனைவிட்ட கன்றதில்லையே!

தீயும் எரியும் கொடிய வெய்யில் எங்கும் தீய்க்கையில் – நேர்த்தி
தீர்த்துருண்டு காவடிகள் ஆடுவோர்களின்
காயம் அறி மாறும்…கந்தன் கருணைப் பார்வையில் – காலன்
கயிறுகூட அறுந்து போகும் வேலின் கூர்மையில்!

வந்த பக்தர் உளப்பசியைக் முருகன் போக்குவான் – அவர்
வயிற்றுப் பசியை அன்னதான மிடுவோர் ஆற்றுவார்.
நொந்தவர்கள் வந்து நெஞ்சமுருகி நேருவார் -அவர்
நோ வலியைத் துன்பத்தை ‘நல்லூரான்’ ஓட்டுவான்.

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரானை நாடி.

வேலன் விழா.

“யாரெவரும் எப்படியும் வாழட்டும்
இப்படித்தான்
வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்… Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on வேலன் விழா.

அருள் …கார்த்திகையில்

எதுதான் முடிவு எனவும் தெரியோம்.
எதுதான் விடிவு எனவும் தெளியோம்.
விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம்.
வினைஎன் னபழி தருமோ அறியோம். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on அருள் …கார்த்திகையில்

ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

யானொரு கருவி நீயே தான் சுருதி
யாதையும் பார்த்துக்கொள் நீயே!
யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை,
என்வெற்றி தோல்வி, நோய் சுகமும்,
யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே!
எனை இயக்கும் சக்தி நீயே! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on ஒதுங்குவோம் உன் அடி நிழலில்