பச்சைத் தேவதை

சித்திரைச் சிறுமாரி தேன்தூவி
வானத்தைச்
சுற்றியுள்ள சூழலை ஜலக்கிரீடை செய்தகல
கழுவித் துடைத்த
கண்ணாடிபோல் இந்த
வசந்த காலத்தின் வருகை பொலிவேறி
குளுமையுடன் பளீரிட்டு
ஒளிபெருகிப் பூத்துளது!
தளிர்த்த மரஙகள் குருத்துப்பச்சை நிறத்தில்
அழகொழுகும் தேவதைகள் போல்
கையை அசைத்துளன!
ஒவ்வொரு விருட்சமும் ஒவ்வொரு தேவதையாய்
பச்சைப் பசேலென்று
பார்வையை குளிரவைத்து
இளநீல வானம்
இடைக்கிடை முகில்முயல்கள்
விளையாடும் மைதானம் போல்
பரந்து குதூகலிக்க
பச்சென்று ஒட்டிற்றென்
மனதிலிந்தப் புதுச்சூழல்!
காலடியில் பூச்சொரிந்து கம்பளம் விரித்துஅந்த
வானுக்கும் மண்ணுக்கும்
பச்சை ஒளிப்பிழம்பாய்
விஸ்வரூபம் கொண்டெழுந்த விருட்சத்தை
அண்ணாந்து
பார்த்தேன்,
மனது தானும் புதுத்துளிராய்…
மகரந்தம் பரப்பி மகிழ்ந்த சிறுபூவாய்…
அந்த மலைவிருட்ச
உச்சாணிக் கிளையிலொட்டி
இறங்கி வரமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply