இரவொடுக்கம்

நிலவில் வசிக்கின்ற பாட்டி விளக்கணைத்து
உறங்கப்போய் விட்ட
அமாவாசைப் பின்னிரவு!
மின்மினி ஒளியோ தீக்குச்சி உரசலொன்றோ
விண்மீனின் மினுமிப்போ இல்லாத
வளமைபோல்
மின்சாரம் வெட்டுண்டு
துண்டான பேயிரவு!
குளிரைச் சமாதிசெய்து கொடியேற்றி
நசநசப்பை
புழுக்கம் அழைத்துவந்த பொல்லாத தீயிரவு!
காற்றின் விசிறிக் கரங்களையும்
கண்களையும்
கட்டியெந்தப் பாண்கிணற்றில் போட்டு முடித்தனரோ?
புல்லின் நுனிகூட அசையா அனலிரவு!
ஆவி உயிர்ப்பாலே
தனைக்குளிர்த்தும் மரம்போல
வேர்வைப் பிசுபிசுப்பே ஆறுதலைத் தரும் எனக்கு!
இந்த எரிச்சலிடை
நுளம்பின் கிணுகிணுப்பு
வெந்தஎன் மேனியில்வேல் பாய்ச்ச அலைந்திருக்க
இந்தப் புகைச்சலிடை எழுந்து வரும் நாயூனை
என்னைக் கடக்காமல் தரிக்கிறது!
அந்நாயைக்
கலைக்கத் திராணியற்று
கலக்கம் மனதிலுற்று
யாரோ? எவரோ? எதற்காயோ?
எனக்கேள்வி
கேட்டு இதயம் கிடுகிடென் றடித்திருக்க
மூலையில் எவ்வளவு முடங்க முடிந்திடுமோ
அவ்வளவு…ஒடுங்கும்
அருவருப்பு நத்தையொன்றாய்…
‘நான் ஒடுங்கி’ இரவழியச்
சபித்துக் கிடக்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply