கைகள் கட்டிய காலமும் போனது.
கனவில் வாழ்ந்த கற் காலமும் போனது.
பொய்யாய் வாழ்ந்திட்ட காலமும் போனது.
போரால் வெந்ததீக் காலமும் போனது.
ஐயத்தோடு அலைந்து அடிமையாய்
அமைதிக் கேங்கிய காலமும் போனது.
“செய்வம் நாமெமக் காக எம் கையாலெம்
திசையை” என்ற பொற்காலம் வந்தாடுது!
வந்த காலத்தை வரவேற்றுப் பாடுவோம்.
வாசல் பெருக்கி நற்கோலம் நாம் போடுவோம்.
இந்தக் காலம் எமக்காய் இருந்தெமக்
இணையிலா அருள் நல்க… நாம் நேருவோம்.
இந்தக் காலத்தை மாற்றஎக் கிரகமும்
எழாமற் காக்க இயற்கையை வேண்டுவோம்.
இந்தக் காலப் பொழுதுள் எமக்கான
இனிமை யாவையும் மீட்க முயலுவோம்.
இன்று எங்களுக் கானஇக் காலத்தை
இங்கு கொண்டர அன்று முடிந்தவர்,
நின்று தீயில் குளித்தோர், துயர்பட்டு
நீறி…கீழ்நிலைக் கேகித் தொலைபவர்
என்ற பலரை நினைத்து ஒளிச்சுடர்
ஏற்றி.. இன்றவ் ஒளியில் மினுங்கியே
நின்று புதிதாய் நிமிர்வோரை வாழ்த்துவோம்!
நெருஞ்சிப் பாதையில் நியாயமுங் காணுவோம்.