நெஞ்சிலே நின்று நித்தமும் ஆடிய
நினைவுப் பூவெலாம் வாடி உதிருமா?
கொஞ்ச நஞ்சமாபட்ட இடர்? தினம்
கொள்கை காக்கச் சுமந்த சிலுவைகள்
நஞ்சுதின்று… இலட்சியம் வாழ்விக்க
நலிந்த துயர்.. இவை ஞாபக வெளியிலே
துஞ்சுமா? அற்ப விபத்தில் இறக்குமா?
தோற்றுப் போகுமா? இல்லையென் றுறுமினீர்;!
ஓடி இரத்தம் முழுதும் கலந்தது
ஓரக் கடலிலே என்றோர் அதிர்ந்திட,
வேசம் ஆயிரம் காட்டிய மாயமான்
விரித்த வலைகளும் முற்றாய் அறுபட,
நேசம் வைக்கலை பாசம் மறந்தனம்
நிஜத்தில் என்றவர்… வாய்கள் அடைபட,
தாகம் தீரலை என்று உரைத்தது
தமிழ்; விதையானோர் இன்று முளைத்தெழ!
அற்ப சலுகைகள் தாண்டிச் சுயத்துக்கு
அரியணை வேண்டும் என்றட்ட திக்கெல்லாம்
பற்றி யெரிந்தது புள்ளடிப் போரிலே!
பணிந்து போகாமற் பார்க்குண்மை சொன்னதே!
முற்றி வெடித்து முளைக்கும் இனிப்புது
முயற்சி… என்கின்ற நினைவுகள் இன்றைக்கும்
குற்ற மற்றிருக் கென்பதை எண்ணிட
குளிரும் நெஞ்சினில் கவிதை பிறக்குதே!