பந்தம்

பறவையிட்ட எச்சத்தில் புதைந்திருந்த விதையொன்று
திறந்த, காய்ந்த மண்ணைமீண்டும் சேர்கிறது.
பழமொன்றுள்
கனிந்த விதை…பறவைக்
குடல்வழியே செமிக்காமல்
தனைமீட்டு எச்சத்தோ டிழிந்து விழுந்திடுது!
இன்றுஇதன் விடுதலைக்காய் எச்சத்தின்
ஈரலிப்பே
போதும்…இதால்தோன்றப் போகும் மரம்…அந்தப்
பறவைக்கும் தனக்கும் இருந்த
ஏதோ பந்தத்தை
அறிந்திடவா கூடும்?
துளிமழையை வீழ்த்தி…எங்கோ
அகன்ற முகில்போல் அகன்றுபோச்சு அப்பறவை!
விதைக்குக் கவலையில்லை.
சேதாரம் விதைக்குமில்லை.
பறவைக்குப் பாதிப்பு ஏதுமில்லை.
விதையுயிரைக்
காத்ததப் பறவை…இது கனவுமில்லை.
அதேநேரம்
விதைமுளைக்கப் பறவை வழங்கிய
பங்களிப்புக்
குறைந்ததுவும் இல்லை.
இதுபோல…இதைப்போல
உனக்கும் எனக்குமான உறவு…ஏதோஓர்
தொடர்போடும் தொடர்பற்றும்
தொடருதென்ற பேருண்மை
புரிகிறது எனக்கு…அதேன் உனக்குப் புரியுதில்லை?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply