மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து
அரசாளத்
தோன்றிய பகலாய்
ஒளிர்ந்தது பெருவாழ்வு!
சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன
பேயிருளில், மினுங்கித் திரிகின்ற
மின்மினிப்
பூச்சிகளின் ஒளியாய்… கண்கூச வைக்கிறது
காண்…இன்றை வாழ்வு!
சூரியன் தொலைந்துபோனான்!
யாராரோ மின்மினிகள் சூழ்ந்துவந்து
“இருள்விரட்டி
மீட்போம் பகலை” யெனக் கைநீட்டி
தம்ஒளியின்
பின்னால் வருகவென்று அழைத்துளன.
சூரியனின்
வண்ணப் பகல்நினைவுக் கேங்கி…அச்
சூரியனின்
இன்மையினை எண்ணி,
“மின்மினிதான் சூரியனோ”
என்று சூரியனை அறியாத சேய்கேட்க
என்சொல்வ தென்று இளைத்துவாடி
மின்மினிகள்
பின்சென்றெம் வெளியில்
கயிறுதனைப் பாம்பென்றும்…
பாம்பைக் கயிறென்றும்…பார்த்துக் கதிகலங்கிச்
சூழும் இருட்டுள்ளே
மீள முடியாமல்
வாடுகிறோம்:
“நாளைமீண்டோர் சூரியன் வாராதா?
நீளும் இரவில் நிலவோ,
விண் மீன்தாமோ,
வால்வெள்ளி ஒன்றோ, வந்து வழி காட்டாதா?”
கேட்கின்றோம்:
மின்மினிகள் செய்யும் குழப்பத்தில்
காட்டில் தொலைந்துபோன கனவுகளாய்
அலைந்துள்ளோம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply