அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம்.
கிளைத்திட்ட ஆறுகள்
சேர்ந்து கடலாயிற்று.
இதயங்கள் குமுறின எரிமலைக ளாக.
குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல.
கேள்விகள் வெட்டின
மின்னற் தெறிப்புகளாய்.
ஏது முடிவு?, பதில் எதுவரும்? என்றறியாது
எங்களது நெஞ்சின்
அவசங் களையெல்லாம்
கொட்டினோம்…
வேறு கொட்டும் இடங்களின்றி!
அவர்கள் குப்பைக் கூடைகள் தானோ?
அவர்கள் பணத்தை கறக்கும்உண்டியல் தாமோ?
அவர்கள் குறைகளைக் கேட்கின்ற பெட்டிகளோ?
அவர்கள் பாவ மன்னிப்புக் கூண்டுகளோ?
அவர்கள் வெறுஞ்சட்டம் பேசுகிற நூல்வகையோ?
அவர்கள்அறத் தீர்ப்புரைக்கும்
நீதியின் காவலரோ?
ஏதும் அறியோம்:
இந்த முறையும்
ஏதும் ஒருகீறல் ஒளிச்சொட்டு முன்தெரியக்
கூடுமென வந்தோம்:
இன்றுவரை காணாமற்
போனோர் விசாரணையில்…
பொய்யற்ற உள மெய்யைக்
கூறிக் களைத்தழுது கண்ணீர் துடைத்தெழுந்து
மீள்கின்றோம் இம்முறையும்:
விதியே நாம் என்செய்வோம்?