பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது.
எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது.
கும்மிருட்டின் கொடுமை குறையுது.
கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது.
விம்மி அழுத துயரக் கனவுகள்
வெடித்துக் கலையுது. கூசும் விழிகளை
செம்மைக் கீற்றொளிக் கைகளால் சூரியன்
திறக்கிறான்…புதுத் ‘தை’ மீண்டும் பூத்தது.

திரண்ட கட்டியாய் அடர்ந்த இடர்வலி
தீர்ந்து… யாவரும் சிறந்திட வில்லைதான்.
வரங்கள் எல்லாம் வசப்பட வில்லைகாண்.
மனங்கள் முழுதும் மகிழவும் இல்லையாம்.
திரண்டு சிறிது சிறிதாய் அமைதி…தோள்
சேர..,துயர்தந்த கைகள்சோர்ந் தோய்ந்திட,
அருணனின் சுடர் வாடும் இலைகளில்
பச்சையம் மீட்டு.., ஒளிதொகுக் கின்றதாம்!

இந்தச் சிறிய புலர்வை வரவேற்போம்.
“இது பகலாகி நிலைத்திடும்” நம்புவோம்.
இந்த ஒளிக்கீற்றை இரண்டுபட்டு நின்று
எதிர்த்துக் கலைத்து இருளை என்றென்றுமே
குந்த வைப்பமோ? பொறுமையாம் பானையில்,
குறைக்கல் களைந்த உரிமைப் ‘புதிரினை’,
சிந்திடாது… நல் ஒற்றுமைச் சர்க்கரை
சேர்த்து… நம்பிக்கைப் பால்விட்டுப் ‘பொங்குவோம்’.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply