கருவியைக் கடிதல்

நான்புளங்கும் முற்றத்தில் நானறியா தொருகூடு.
யார்தான் அனுமதித்தார்?
தம்பாட்டிற் குளவிகள்
துளிகளாற் கடல்செய்த மாதிரி அமைத்தததை!
பிழைத்துமே போகட்டும் எனவிட்டால்
அவைஎன்மேல்
சஞ்சரித்து ‘என்வெளியைத்’ தங்கள்கட்டுப் பாட்டுள்
கொண்டுவரத் தொடங்கின!
நான் இளைப் பாறுகிற
அவ்வெளியை விட்டென்னை அகற்றி வாகை சூடின…
நான்
அதன் எல்லைப் பரப்பை வரையறுத்து
அதற்குள்ளே
தன்ஆளுகை செலுத்தக் காவல்நிற்கும்’ நாயைப்போல்
மாறி..
என்னிடத்தை நானாள…வேறு ஆளை
ஏவலாளி ஆக்கிக் கூட்டை எரித்தழித்தேன்!
கூடெரிந்த போதக் குளவிகளோ அங்கில்லை.
வீடுமுற்றும் கருகிற்று:
மீண்டுவந்த குளவிகள்
என்னைவிட்டென் ஏவலாளி
தனைக்கலைத்துக் கொட்டினவாம்.
என்னுடைய இடம், எனது எல்லை, என் ஆளுகையைப்
பற்றி அறியாது…
பற்றவைக்கச் சொன்னவன்நான்
முற்றுமிதை உணராது…
முகம்காட்டும் ஏவலாளி
பற்றவைத்த பாவியெனப் பழிவாங்கக் குளவிகள்
துரத்திக்கொண் டுள்ளனவாம்!
தம்கூட்டைத் தாம்மீண்டும்
விரைந்தமைக்கத் தடுக்குமெனை விட்டுவிட்டு
வட்டமிட்டு
வருகிறானா ஏவலாளி?
தேடிஅலைந் துள்ளனகாண்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply