கல்நெஞ்சீரன்

வேகம் விவேகமில்லை சொல்வேன் அடிக்கடி நான்;
போவாய் என்முன் தயங்கிப்
பின் புயலாகி!
அப்படி நீயுமோர் அதிவேகத் தீப்புரவி!
இன்று கடந்தேன்…
இருளுறைந்த சந்தியொன்றை;
சிந்திச் சிதறிக் கிடந்தன மரக்கறிகள்!
வெங்காயம் உருளைக் கிழங்கு
சிதறுண்ட
முருங்கைக்காய் கட்டு…
முன்னே இரும்புமலை!
தரிப்பு விளக்கணைத்து நின்ற
கல்நெரிக்கின்ற
எந்திரம்மேல் கட்டுப் படுத்த முடியாத
வேகத்தில் மோதி
நெற்றி பிளந்து…..இரத்தச்
சேற்றில் கிடந்தாய்…….சீவனெப்போதோ போச்சு!
எள்ளென்றால் எண்ணை
பிளியநிற்கும் துணிவும்
கல்நெஞ்சும் காய்ந்த கரமும்
உறுமுகிற
போர்க்குரலும் கொண்டும்
நின்…பேத்தி ஸ்பரிசத்தில்
ஈரம்நின் கண்ணில் மின்னியதை
அதுஉனது
பாசத்தின் ஆழ அகலத்தை……நின் உளத்தின்
ஏக்கத்தை காட்டியதைப்
பல தடவை கண்டவன் நான்!
வேகம் விவேகமில்லை சொல்வேன் அடிக்கடி நான்
போயேதான் விட்டாய்
விதி எதற்காய் வலை விரித்தான்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply