நிமிர்ந்திட வேண்டும். ஞானம்
நேர்மையை வளர்க்க வேண்டும்.
எமதிடர் நிலைமைக் குள்ளே
இருந்து நாம் புதைந்து தீயாய்ச்
சமைந்துமே சுடர்ந்து … நாளைச்
சரித்திரம் நடக்க.. இன்று
உமிழணும் ஒளியை ! நாமும்
உலகோடு ஜெயிக்க வேண்டும்!
எம் காயம் வடுக்கள் பற்றி
இன்றைக்கும் கதைத்தி டாமல்
எங்களின் காயம் ஆற்ற
எதுமுறை, மருந்து, பாதை
எம்பலம் பெருக்க.. என்ன
ஊட்டங்கள் தேவை என்று
பங்கங்கள் அகற்றி.. பார்முன்
பயணிக்க வேண்டும் தம்பி!
உலகியல் ஒழுங்கு, ஊரின்
உண்மையாம் குறைகள், இன்றை
நிலை..அரசியல்கள், நீதி
நிதி, இன்றைச் சமூக மாற்றம்
பலம்பலவீனம் – நாளை
பரவிட வழி வகைகள்
கலை விழுமியங்கள் தேர்ந்து
கற்று.. நாம் தெளிய வேண்டும்!
எம் நில வாசம் பூசி;
எங்களின் வாழ் முறையின்
சங்கையைப் பேணி, இன்றைத்
தளநிலைக்கு ஏற்ப மாறி
எங்களின் தனித்துவத்தில்
ஏற்றங்கள் காண நீயும்
பொங்கிட வேண்டும் தோழா!
புதிதாய் நாம் பிறக்க வை…வா!