கவிதை எழுதக் கனிந்த தொருபொழுது!
செவி…யுத்தக் கூச்சல் மறந்து
பலஆண்டு!
உனக்கு விலைபேசி, ஏகாந்தத் தனிமைக்காய்
உனக்கோர் உல்லாச விடுதி தனைவழங்கி,
உனக்குச் சரீர உதவிகள்
அதிரசங்கள்
தனையருளி, உன் ‘mood’ ‘set’ ஆகாச் சங்கடத்தில்
வெளிநாட்டு ‘location’ உனக்காக்கி,
நீருசித்து
நூறு வரிசொல்ல
பத்தை அதில்உருவி
“ஆஹா” என வியந்தார்!
எமைப்பற்றி… உன்பாணி
சீர்கெடாமல் நீயும்
செய்துவைத்தாய் வைரக்கவி!
இரணமாற வழிகளற்று இரத்தம் கசிந்தகாலம்!
பசியும் உயிர்ப்பயமும்
எமைப்பந்தாய் உதைத்தநேரம்!
தொடர்கணை வெடித்த கந்தகப் புகையிடையும்,
குருதிக் குளம்காயா திடிந்த
தெருக்களிலும்,
அவயவங்கள் சிதைந்த அவலப் பொழுதினிலும்,
மரணங்களைப் புதைத்த…
மரத்த கணங்களிலும்,
உறவுகளைக் காக்க
உதவ ஏலாச் சோர்வினிலும்,
இருக்க இடமற்ற அகதி முகாம்களிலும்,
மருந்துக்கும் பருப்புக்கும்
வலிந்துதவம் செய்கையிலும்,
நிவாரண வரிசையிலும்,
நெருப்பின் நடுவினிலும்,
ஓயாத யுத்த உறுமலிடை அலைகையிலும்,
பதுங்கு குழிகளிலும்,
அரண்களற்ற வெட்டையிலும்,
பேயுலவும் கடலினிலும், பிணம்மலிந்த கரைகளிலும்,
தோட்டாக்கள் கலைத்த
கடைசிக் களங்களிலும்,
மீட்பர்கள் யாருமற்ற மனித – மந்தை வெளிகளிலும்,
குற்றுயிரி னோடு
குலந்துடித்த வேளையிலும்,
எண்ணத்தில் உறுத்தியதை…
இதயத்தை உலுக்கியதை…
எழுத மறந்ததை மறைத்ததை
விடப்… பலதை
எழுதி அதை…எந்தச் சமரசங்களும் இன்றி
அழகிருக்கோ இல்லையோ…
அப்படியே அடைகாத்தேன்!
இன்றைக்குன் கவிதைமுன் பொருளற்ற தென்கவிதை!
இன்றைக்குன் கவிதைமுன் ‘செல்லாதாம்’
என்கவிதை!