இந்தப்பிஞ்சு எப்பாவந்தான் செய்தது?
இந்தப்பிஞ்சு எப் பழியைப் புரிந்தது?
இந்த மொட்டு ஏன் பூக்கா துதிர்ந்தது?
இந்தச் செல்வமேன் இப்படி ஆனது?
எந்திரம் என மாறிய மானுடம்…
இலாபம் தேடிடும் வேகம்…பிறரினை
சந்தியில் சாய்த்தும் உழைக்கும் சுயநலச்
சாரதீயத்தால் இக்காய் அழுகிற்று!
பாலர் வகுப்பாலே சென்று… ‘தரம்ஒன்று’
படிக்க… சீருடை; புத்தகப் பையடன்
நீர்க்குடுவையுந் தாங்கித்; திருநீறு
நெற்றி நிறைய அணிந்து…சிரித்தவன்
காட்சிக்குள் நூறு கோடி கனவுகள்
கவிந்திருந்ததைக் கண்டோம்! புதுப்பள்ளிக்
கூடம் சென்று திரும்பும் வழி…எமன்
குதறினான்: விதிக் கொடியோனைத் திட்டினோம்.
“இருதயம் சாக வில்லையாம்…மூளைதான்
இறந்ததாம்…” என்று நேர்த்திகள் கோடிசெய்து
இருந்த ஓருயிர் போச்சு! துணைவியை
இருந் தெழும்பவும் காயம் முடக்கிற்று!
வருந்திச் சோர்வதா? மறைவுக் கழுவதா?
வலியைத் தாங்கி மனதினைத் தேற்றியே…
சிரிப்பதா? எனத் துடிக்கிற தந்தையின்
திகைப்புக்கெப் பரிகாரம் நாம் செய்வது?