கண்களை எழுது கோலாய்
இதயத்தைத் தாளாய்க் கொண்டும்
மின்னலுன் மேனி முற்றும்
எழுதியே பார்த்துத் தோற்றேன்!
உன்னெழில்… நீளம் ஆழம்
உரைத்திட முடியா ஆழி!
என்னுயிர் வரையக் கூடும்
உனை! அதே உணரும் தேறி!
அழகொரு உருவங் கொண்டு,
அறிவொரு வடிவங் கொண்டு,
எழுந்ததாய் வந்தாய் நீயும்.
இயற்கையா நினது தாயும்?
மொழிகளில் உனைவர் ணிக்க
முழுமையாய்ச் சொற்கள் இல்லை!
விழிகளின் விருந்து நீயே…
விதிதாண்டும் அழகின் எல்லை!
இப்படிப் பாடிப் பாடி
இழைக்கிறேன் தேவி…நீயும்
செப்படி வித்தை செய்து
சிதைக்கிறாய் என்னைக் கோதி!
எப்படி இருந்தேன்? உன்னால்
சிறைப்பட்டேன் அடிமை யாகி!
கைப்பிடிச் சாம்ப லாயும்
அதுவரும்…உன்னை நாடி!