நூலிழுக்க ஆடுகிற பொம்மைகள்நாம்!
விதியென்னும்
நூலிழுக்க ஆடுகிற பொம்மைகள்தாம்!
நூலிழுத்து
ஆட்டுபவன் யாரறியோம்.
நூலசைய, ஆட,
ஆடுகிறோம்!
அவனியக்க ஆடுவதைப் புரியாமல்…
“நாமாயே ஆடுவதாய்”
நமக்கு முடிதரிப்போம்!
ஆடுகையில் எதிலும் அலட்சியமாய்
“எல்லாமும்
ஏலு” மென இறுமாந்து யாரெமக்கு நிகரென்றோம்!
நூலிழுத்து ஆட்டுவோனை
‘வெல்கையிலே’ நினைவுகூரோம்!
நூலிழுத்து ஆட்டுவோனை
‘தோல்விகளில்’ நினைந்தழுவோம்!
காலம் கணக்கிட்டுக் காலிடற
விதியென்னும்
நூலை மரணந்தான்
நொடியில் அறுத்தெறிய
ஆம்…மறு கணமே அணுவளவும் அசையாமல்,
ஏதுமே செய்ய இயலாமல்,
“வெறும்பொம்மை–
தாம்…நாம்” எனஉணரக் கூட முடியாமல்,
வீழ்வோம்:
அறுந்தநூல் அறுந்ததுதான் மீளஎழோம்.
நான்பொம்மை என்பதைப்
பிறன்அறிந்த வேளை
அவன்
தான்பொம்மை என்பதை அறியான்…
எவர் வென்றோம்?