பெரியோய்

நீங்கள் பெருஞ்செல்வம் ஏதுமே சேர்க்கவில்லை.
நீங்கள் எதும்சொத்துத்
தேடித் தொகுத்ததில்லை.
நீங்கள் பெரும்வசதி வாய்ப்புகளைப் பெற்றதில்லை.
நீங்கள் பெருஞ்சுகங்கள் கண்டு
மகிழ்ந்ததில்லை.
நீங்கள் பெருங்கல்வி கற்றுச் சிறந்ததில்லை.
நீங்கள் பெரும்பதவி பெற்றும் உயர்ந்ததில்லை.
“நான்சொந்தக் காலில் நிற்பேன்”
எனுந்துணிவில்,
“நான்நினைத்த வாழ்வை நான்வாழ்வேன்”
எனும்நிமிர்வில்,
“என்னிருப்பை யாரும் – இருஎழும்பு – எனமேய்க்க
என்சுதந்திரம் தன்னை இழக்கேன்”
எனும் இயல்பில்,
யாருக்கும்அஞ் சாமல்,
யாரிடமுங்கை ஏந்தாமல்,
நேர்மையை நெஞ்சுக்கு நீதியை மறக்காமல்,
பேராசை கொள்ளாமல்,
காசாசை இல்லாமல்,
ஈசனை மறவாமல்,
மனச்சாட்சிக்கு விரோதமாய்
போகாமல், எவர்மீதும் பொறாமைகொள் ளாமல்…கை
சேராக் கனவுகளால் சிறிதுடைந்தும்
சொர்க்கத்திற்கு-
ஆகஏங்கி னாலும்
அதற்காய்த் தன்மானத்தை
சோரமே போக விடாமல்,
எளிமையான
நேசத்தின் வடிவாய்…பிறஉயிரில் அன்புருவாய்…
வாழ்கின்றீர்!
அயரா உழைப்பால்
இன்றைக்கும்
நோய்நொடியைத் தூரவைத்தீர்.
வள்ளுவனின் வகைநீவிர்.
“அறிய வேண்டியதை அறியும் நன்மக்களினை
பெறுவதைத் தவிரப்
பிறபேறுகளை மதிக்கேன்”
என்று நன் மக்களைப் பெற்ற பெருமைசொல்லி
மற்றெதையும் பற்றி அலட்டாமல்
வாழ்வை வாழ்ந்து
சான்றோனின் வாய்மொழிபோல் வென்றுயர்ந்தீர்
பெரியோன் நீர்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply