வட்ட நிலவு ஒரு
கிறீஸ்தவ மணப்பெண்ணோ?
சுற்றித் தலையில்வெள்ளிக் கிரீடம் தனைஅணிந்து,
கொட்டிக் குவித்துச் சோடித்த
எழிலோடு,
பட்டு வெள்ளொளிப் பாவாடைத் துகில்…வானில்
அட்டதிசை எங்கும்
விரிந்து பரவிநிற்க
அன்ன நடைநடந்து,
கறுப்புக்கோட் போட்ட இரா
மன்னவனின் கைகோர்த்து,
வெண்துகில் ஒளிஅரைய
நகர்கின்றாள்!
விண்மீன் என்னும் சிறுபெண்கள்
மினுங்கும் ஒளிமலர்ச் செண்டுகளுடன் தொடர,
வானிருந்து தேவதைகள் போல்
காற்றுக் கையசைக்க,
வாழ்த்துரைத்துப் பூத்தூவல் போல்
வான் பனித்தூவ,
வெட்கத்தில் கன்னம் மினுங்க
அசைகின்ற
வட்டநிலா ஒரு கிறீஸ்தவப் பெண்தானோ?