பகலொரு புத்தகம்போல் விரிந்தது என்முன்பு!
பகலினது பக்கத்துக்கு
ஒளியூட்டும் வெயில் நின்று!
பகலினது அடுத்த அடுத்த பக்கத்தைப்
புரட்டிற்றுக் காற்று,
வரலாற்று வரிகளினைப்
படியெடுத்துப் போயிற்று…
நின்று பார்த்த முகிலிலொன்று!
பக்கமொன்றில் இருந்த பழத்தோட்டம்
படம் பார்த்து
எக்கச்சக்கக் கிளிகள்
குயில்கள் வந்தும் கூடிற்று!
இன்றைய பக்கத்தில் எழுதப்பட் டிருந்தவற்றை
தேவதைகள் வாசித்து
திசைகளுக்குச் சொல்லினவாம்!
இன்னுமின்னும் எழுதாத பக்கம் பல
உள்ளதையும்
அவற்றை எழுதி நிரப்பவல்ல ஆற்றலுள்ள
கவிஞர் தமையும்
கண்டெங்கள் தலைமுறையின்
அடுத்த தொடர்ச்சியதும்;
எதிர்கால வெற்றிக்காய்
உத்திகளும்; தேடி
அவையவற்றை ஆவணத்தில்
தேடி எழுதி வைக்க
கட்டளைகள் இடுகின்றேன்!
பகலொரு புத்தகம்போல் விரிகிறது என்முன்பு!
அதன் நாளை..நமக்காக்க
வேணும்: செய் நின்பங்கு!