அசைந்தபடி இருக்கிறது இலைகள் மரத்தினிலே!
அவையுதிர்ந்த பின்பு
அவை காற்றால் மட்டும் தான்
அலைக்கழியும் சருகாச்சு!
வளைந்து நெளிந்தோடித்
துள்ளிற்று மீன்.. பிடித்துத் தரையிலிட
விறைத்திறுகித்
துடிப்பற்ற சடலமாச்சு!
அதிர்ந்து துடிதுடித்து
ஓடிற்று கடிகாரம்..
மின் கலத்தை அகற்றிவிட்டேன்
ஏதும் துடிப்புமற்று காலமும் மறைந்துபோச்சு!
உயிர்ப்பின் இயல்பு துடிதுடிப்பு!
தன்பாட்டில்
இயங்கல்! இறப்பின் இயல்பு
அசை வற்றிருத்தல்!
புரிகிறது…என் இதயத் துடிப்பும்
எழுதுகிற
கரமும் உயிர்துளன.
இவைபுணர வரும் கவிதை
உயிர்ப்போ டசைந்து உனைத்தொற்றித் தூண்டிற்று!
உன் கவிதை இறுகி
அசையா ஒரு சடமாய்
என்னைச் சலனப் படுத்தாமல் தூங்கிடுதே…..
என்ன அதன் நிலையென்று
அறிவுனக்கென் சொல்கிறது?