‘என்னுடைய சொல்லைக் கேட்க இங்கு
ஆட்கள் இல்லை.
என்னுடைய பேச்சை கேட்க எவரும்இல்லை.
என்னுடைய கருத்தை
யாரும் புரிவதில்லை.
என்னுடைய குரலை ஒருவரும் இரசிக்கவில்லை’
இந்தக் குறைதான்
ஓவ்வொரு மனிதரிலும்
அதிக பட்சவேதனை கவலையைத் தருகிறது!
அதிகம் அவர்களை
தனிமைக்குள் தள்ளிடுது!
இதுவே அவர்களுக்குத் தம்முடைய வாழ்க்கையிலும்
பிடிப்பற்றுப் போகவைத்து
விரக்திவேர் ஊன்ற வைத்து
மனதிலே ஆறாத காயமாய் – கணங்கணமும்
குருதி கசிய வைத்துக்
குணப்படுத்த, தகர்க்க, ஏலாத்
தனிமைச் சிறையைத்
தமைச்சுற்றி அடைத்திடுது!
ஒரு காலம் அரசாண்ட தன்சொற்கள்
மிகமிகவும்
குறுகிய பொழுதுள்… அற்பனும்; கணக்கெடுக்கா
நிலை பெற்றமை பலரை
நிர்மூலம் ஆக்கிடுது!
இதன் இறுதிப் புள்ளி ஒருவேளை
தற்கொலையால்,
இதனிறுதிப் புள்ளி அனேகமாக
உயிரிருந்தும்
வாழப் பிடிக்காத நடைப்பிணமாய்த்
தமக்குத் தாம்
தீர்ப்புரைக்க வைக்கிறது!
அரசனுக்கும் ஆண்டிக்கும்
எவனுக்கும் இந்நிலையோர் நாளில்வரும்
சனி வியாழன்
உச்சத் திருக்க ‘ஓகோ’ என்றிருந்து… அவை
பிச்சுப் பிடுங்க
விழிபிதுங்கி எல்லாமும்
இழந்து தவிர்த்து இறந்த கால
கனவுகளில்
மகிழ்ந்திருக்கும் யாவருக்கும்
இந்த நிலை தோன்றும்:
இதை மாற்றி இவற்றுக்குப்
பரிகாரம் கண்டால்;…
எவர்வாழ்வும் சொர்க்கமாகும்!