எண்ணம்போல் வாழ்வு

காற்றைப்போல் நானிருப்பேன்…கட்டுக்குள் அடங்காத
காற்றைப்போல் தானிருப்பேன்.
யாருக்கும் கைகட்டி
தோற்றவரின் முன்துவண்டு குனிந்து தொழுவதற்கோ
ஏற்றுக்கொள் வீரென்று
எவரின் அடிபணிந்தோ
வாழும் வகையறியேன்!

வரம்புகட்டித் தேக்கிவைத்து
நாறடிக்க அனுமதியேன்!
‘நானோர் துரை, பெரியாள்
நீயென் சொல் கேள்’என்றால்…நில்லேன்  சுருண்டடங்கேன்.
காசாய், புகழாய்,
கட்டற்ற பதவியதாய்
வீசப் படும்வலையில் வீழேன்.
என்பாட்டில்
நானோடிக் கொண்டிருப்டிபேன்!
என்விருப்பம் போலெதையும்
நான்செய்து கொண;டிருப்பேன்!
நான் அறியா விதிவழியே
நான்நகர்ந்து கொண்டிருப்பேன்!
என்வசதிக் கேற்றபடி
நான்கனவு கண்டிருப்பேன்! என்நிலையை என்னுணர்வை
நான்விரும்பு மாறு நானுரைப்பேன்.
புத்திமதி
யாரும் எனக்குரைக்க இயலாது.
யாரெவரும்
‘இப்படிச் செய்’யென்று எனக்கோத முடியாது.
‘இப்படி எழுது’என்று
எனக்குணர்த்த இயலாது.
‘இப்படி நட’என்று எனைஇயக்க முடியாது.
என்னை எவரிடமும் அடகுவைத்து
அவரவர்க்கு
ஏற்றபடி தாளம் போடஎன்னால் இயலாது.
என்விருப்பம் போலே,
மனச்சாட்சி எனக்குணர்த்தும்
உண்மை வழிமீதே…உறுதுணையும் இல்லாமே…
நான்நினைத்த மாத்திரத்தில் நான்நடப்பேன்.
என்பாதை
என்னை இடறாது
‘ஏழையாய்நான் இருந்தாலும்’
‘எண்ணம்போல் வாழ்ந்தேன்’ என்ற இறுமாப்பு
என்னை உயிர்ப்பிக்கும்!
எனக்குத் தடைபோட்டு
ஓன்றும் நடவாது என்பதையென் றுலகுணரும்?

(4211)

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply