நினைவுகள் பிறாண்ட மனது இரணமாச்சு!
நனவு என் சமநிலையை
நக்கி உறுஞ்சிற்று!
மனதின் இரணம்…இரத்தம் வடித்து
நிறம்மாறி
சொரிகிறது கண்ணீராய்!
கைகள் துணிந்து
ஒளிச்சுடர் ஏற்றி ஓரிரண்டு பூத்தூவி
அழுது…ஊரே கண்ணீராய்க் கரைந்து
காட்டாறாகிக்
கலக்கிறது அன்று சிவப்பான இரணக்கடலில்!
அலைகளின்றும் கடலின் மாரில் அடித்தடித்து
அழுமோசை
அருகிருந்து அரற்றித் துடிப்போரின்
ஒப்பாரி யோடு பரிந்தொலித்து
உலகத்தின்
செகிட்டுச் செவியைச் சத்திர சிகிச்சைசெய்து
செகிடுநீக்கி நம்துயரை
தெளிவாய் அவர்விளங்க
வழிசெய்யும் என்று வலுவிழந்தும் காத்துள்ளோம்!
அழும்கண்ணீர்த் துளிகள்
எம் புது ஆயுதத்தின்
சீறுகிற தோட்டாக்கள் ஆகி
தொலைவிருளில்
புதைந்த விடிவை புதுவழியால் மீட்குமென்று
‘விதி’யையெம் ஊன்றுகோலாய் நம்பி… ஊன்றி
நகர்கின்றோம்!