போரின் பகடைக் காய்களென வீழ்ந்தவரை,
போரின் இரும்புக் கரம்
நசுக்கச் சாய்ந்தவரை,
போரனலிற் சிக்கி அதிற்பொசுங்கிப் போனவரை,
போர்க்கடலில் மீன்களுக்கு
பொரியாக மாண்டவரை,
ஓர்கணம் நினைக்கும் உரிமைக்காய்ப்
போர்புரியும்
காலம்…நினைவுச் சுடரோர் குறியீடாய்
ஏற்றுகிறோம்:
இதயங்கள் பிளிந்து நெய் யூற்றுகிறோம்!
வானையும் எரித்துக் கருக்கிய சாம்பரிலே
ஏதுமே மிஞ்சாத
எங்கள் திரவியங்கள்
தம்மைச் சுடரில் தரிசித்தோம்!
அவர்நினைவின்
ஈரமின்னும் காயாமல் இருக்கின்றோம் என்பதனைக்
கூறுகிறோம்;:
‘ஒருநூறு கூறுகளாய்’ ஆனபின்னும்
கூறுகிறோம்;: இதற்கு எனினும் ஒரு…குரலாவோம்!