உங்கள் பெருநகர்கள் உவகைக் கடலிலூறி
பொங்கியெமும் போதையிலும்,
போகக் கிறுக்கினிலும்,
ஆடிக் களித்திடையில்…அயலிலுள்ள நம்திசைகள்
தீப்பிடித்து…இரத்தமும் கண்ணீரும்
தெளித்தேனும்
அணைக்க முடியாமற் சாம்பராச்செம் நகர்களன்று!
உங்கள் பெருநகர்கள்
தொடர்ந்து உருசிஉறுஞ்சிப்
பொங்குகிற போதையிலும்,
போகச் சுகிப்பினிலும்
தீராத உல்லாசத் தேனிலும் திளைத்திடையில்,
யுத்தத்தை வென்ற
உலகின் மிகப்பெரிய
நலன்புரி நிலையத்தில் நாற்ற ஈ மொய்த்திருக்க
ஒருகுவளை கஞ்சிக்கு
ஒருநாளாய் நின்ற…தன்
குழந்தைகளை எண்ணித் தனிமைச் சிறையிலாழ்ந்து
காடுமண்ட அழுதன..நம்
நகரங்கள் காண்நேற்று!
உங்கள் பெருநகர்கள்
உடலம் பிணைந்தபடி
பொங்கிவரும் போதையிலும்,
போக மயக்கினிலும்
திகட்டாத உல்லாசத் திளைப்பினிலும் மிதந்திடையில்
மீளக் குடியேறி
கண்ணிவெடி பொறுக்கி
ஆனைப் பசிக்குச் சோளம் பொரியாக
வாய்த்தவற்றைக் கொண்டு வனைந்த குடிசைகளை
மாரி கரைக்க
மறுபடியும் வறுமையுடன்
போர்புரிந்து நொந்து
புழுங்குதுநம் நகர்களின்று!
(4110)