கண்ணில் பகலிரவைக் காணல் மிகஎளிது!
வெள்ளை விழி…பகலாம்!
வெளிச்சம் அயலிருந் தூட்டும்
நடுநெற்றிக் கண்ணோ,
நுதலிலிட்ட சந்தனத்தின்
பொட்டோ, தான்… வெண்விழிக்கு
ஒளிவழங்கும் சூரியனாம்!
கறுப்பு விழி…நட்சத் திரங்களற்ற நிசி!
நடுவில்
கண்மணிப் பாவைகாண்…பௌர்ணமிநாள் வட்டநிலா!
கண்ணில் பகலிரவைக் கண்டிடலாம்!
ஆம்…எங்கள்
கண்தான் இருள்,ஒளியால் ஆனது நம் வாழ்வென்ற
உண்மைக்குச் சான்றாம்!
இருள் வட்டத்தின் மையப்
புள்ளியிற்தான் தோன்றிடும் பௌர்ணமி
என்றுண்மை ஆர்த்தும்,
ஒன்றிலிருந் தின்னொன்று உருவாகி வருகுதென்றும்,
ஒன்றுள்ளே இன்னொன்று உள்ளதென்றும்,
உரைக்கின்ற
இயற்கையின் சூட்சுமத்தை
இயம்புதெங்கள் கண்…காணும்!