இசையென்னும் சொற்-பொருளாய், இலக்க ணமாய்,
இலக்கியமாய், இசையமுதைப் படைக்க வல்லோர்…
இசைவடிவாய் வாழுபவர்…இறங்கி:எங்கள்
இரணம் ஆறிக் கொண்டிருக்கும் மடியில் பெய்த
இசைமாரி நம்காற்றைச் சுகந்த மாக்கி,
இதயங்கள் தமைக்கழுவிப் புனித மாக்கி,
பசித்திருந்தவயிறுகளில் பாலாய்ப் பீறி,
பாலைகளைப் பசுமையாக்க நனைத்த தூறி!
சொற்களிலே கோட்டைகட்டக் கண்டோம்! ஏழு
சுரங்களினால் தினமுமொரு சாம்ராஜ் யத்தைக்
கற்பனைக்குள் கட்டி, கொடியேற்றி, ஆண்டு
கனவினில்நாம் மெய்மறந்து வசிக்க வைத்தார்!
விற்பனத்தின் எல்லை: ஆகாயம் என்று
விரிந்தஓசை நுட்பத்தின் உயரந் தொட்டூர்க்
கற்செவிகள் கனியவைத்தார்! இசைகடைந்து
கடைந்தமுது எடுத்துஎமைக் கரைத்துக் கொண்டார்!
இலயத்தினிலும் சுருதியிலும் இலயித்து, ஓசை
எனப்பரந்த பரம்பொருளை அணுகிப் பார்த்து,
வலைஅலையாய் விரித்து, எமைக் கவர்ந்து, ஞான
வளஞ்சேர்த்தெம் சுவாசத்தில் நாதம் தோய்த்து,
விலைமதிக்க முடியாஎம் தொன்ம ஆற்றல்
விலாசங்கள் உரைத்து, ‘இசைவேள்வி’ செய்தார்!
கலையினுச்சம் கேட்டு இறைஉணர்வு ணர்ந்து
களிக்க…கம்பன் கழகத்தார் கருணை கூர்ந்தார்!