மரணம் அணுகும் தருணம்

குண்டு விழுகிறது:
குலைஅறுந்து சிதறியதாய்
குண்டு விழுந்தூரே குலுங்க வெடிக்கிறது.
ஒன்றாய் படுத்து உறங்கிய
ஒருகுடும்பம்
சின்னா பின்னமாகிச் சிதைய
அதேஅறையில்
தொங்கிய தொட்டிலில் துயின்ற சிசுமட்டும்
ஒன்றுமே ஆகாமல்
உறவுதேடிக் கதறிற்றாம்!

அந்தக் கணம்மட்டும் ஆருமெதிர் பாராது
கோவிலிற் கும்பிட்டு
ஆசிபெற்றுக் குளிர்ந்து
புறப்பட்ட பஸ் ஏறிப் போகவந்த
ஒருபொடியன்
தடக்கி விழுந்தானாம்…
தலைமீது சில்லேற
நசுங்கியுயிர் விட்டானாம்…
நாற்திசையுங் கலங்கிற்று!

மரணம் அருகருகே வந்தாலும்…உயிர்போகும்
தருணம் வராதவரை
மரணம் தழுவாது.
தருணம் நெருங்கிவிட்டால்…தடைதடுத்தும்
உயிர்பறிக்கும்
பொறிமுறை இயங்கியுயிர் எடுக்கும்… தவறாது!
இந்த இடத்தில்
விதிஎன்ற ஒருபொருளும்
தலைஎழுத்து என்பதுவும்
காலம் கணிக்கின்ற கணிப்பென்னும் ஐந்தொகையும்
நிஜம்என்று நினைக்குதுளம்…
ஏற்காத  உமதுமனம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply