உன்னுடைய வீதியில்நீ உலவும் போது
உன்னெழிலின் சூடுருக்க…பனியா கநான்
உன்னடியில் உருகிடுவேன்! உன்னைக் கண்டென்
உயிர்உளமும் குளிர்ந்து…பரவசத்தில் ஆழ்ந்து
இன்பத்தின் எல்லைதொட்டு…துன்பம் விட்டு…
எல்லாமுன் கருணையென்றுன் நிழலைச் சேர்வேன்!
என்னையும்நீ உச்சிமோந்து அணைப்பாய்: நீயே
‘என்சுருதி – நான் கருவி’ என்றும் காண்பேன்!
என்னுடைய பிரார்த்தனை என்றென்றும் ஒன்றே!
‘எல்லாம்நீ பார்த்துக்கொள்;: வெற்றி தோல்வி,
என்இன்பம் துன்பம், என் நன்மை தீமை
எல்லாமும் உன்பொறுப்பே! இன்றும் கூட
என்மனது கேட்டதெல்லாம் ‘தாராய்’ நீயே!
எனக்கான ஒன்றை நான் கேட்காப் போதும்
என்றும் நீ தந்தாயே! துணையாய் மட்டும்
இரு நீயே’ என்பேன் நீ…உலவக் கண்டே!
நாதமழை, பஜனைமழை, அடியாரின்கண்
-ணாலும்மழை, ‘அரோஹரா’ என்றார்ப்போர் நெஞ்சின்
வார்த்தைமழை, தூபங்கள் தமையே தீய்க்க
வாசமழை, கற்பூரம் கருகும் தீபத்
தீயின்மழை, நீ நடக்கும் வழியிற் தூவும்
பூவின்மழை, உன்வைர வேலாற் பொங்கும்
ஞானமழை, நல்லூரின் திருவிழாவில்
நனைந்துவந்தால் பசுமையாகும் வாழ்க்கைப் பாலை!