அன்புகனிந்துன் பதியை வந்து அணைந்தேன். –இன்று
‘அன்னதானக் கந்தனே’ உன்வீதி உருண்டேன்!
சந்நதியெம் சந்ததிக்கு காவல் உணர்ந்தேன். –உந்தன்
தாள்நிழலே ஞானமடி என்று தெளிந்தேன்!
ஆசையிலே நானலைந்தேன் மீள வழிகாட்டு –ஏதும்
அதிசயங்கள் செய்து…நானும் தேற எனைமாற்று!
வேசங்களில் நான்தொலைந்தேன்…கைகொடுத்து மீட்டு –மூல
வேரடியில் நான்புனிதன் ஆக அருள் ஊட்டு!
அன்பைப்பூவாய்த் தூவி வாயைக் கட்டிச் செய்யும் பூசை –உந்தன்
ஆலயத்தில் தமிழ்மரபே வாழும்…காண ஆசை!
அன்னதான அமுதெம் உயிர், உடலில் போக்கும் மாசை –வந்து
ஆறி அமர…வேல் பெருக்கிக் கூட்டும் எங்கள் தேசை!
ஆற்றங்கரையில் அமர்ந்து அண்டுவோரைக் காத்து –தேவர்
ஞானியரும் தேறவொண்ணா அற்புதமாய்ப் பூத்து
தோற்றத்தில் பகட்டிலாது யாவரையும் ஈர்த்து –ஆளும்
தூயன் தேரில் ஏற, தீர்த்தம் ஆடக் காண்போம் ஆர்த்து!