தேவாதி தேவரும் பூமாரி தூவிடச்
சிங்கத்தில் ஏறி வருவாள்!
தீமைகள் யாவையும் தீயவர் வாழ்வையும்
தேடியே நின்று சுடுவாள்!
பாதாதி கேசமும் பொன்மின்ன பார்வையில்
பரிவையும் காட்டி எழுவாள்!
பாட்டோடு இசைபாடி பஜனையால் உருவாடி
பாராட்டப் பார்த்து மகிழ்வாள்!
பூவான மேனியள் தீயான பார்வையள்
புன்னகை சிந்தி அருள்வாள்!
பூலோகம் காப்பவள் புல்லையும் பார்ப்பவள்
பொய்யற்று தொழு… நீ அணைவாள்!
சீவாளியால் சிந்தும் தேனுக்கும், தவிலினது
சீருக்கும் தன்னை தருவாள்!
தெல்லிப் பளைத்துர்க்கை திருவிழா நாளிலெம்
திசைபூக்க அன்பு சொரிவாள்!
போர்வென்ற காலத்தில் பொய்ஆண்ட நேரத்தில்
புண்பட்டு நின்ற கோவில்!
பூத்துப் பொலிந்தது புதிய விருட்சமாய்ப்
புதுமை மிளிர்ந்த வேரில்!
யார் நம்புவார் ஓர் அதிசயம் போலவே
யாவும் மலர்ந்த போதில்,
யௌவனம் கொண்டது கிளை பல கண்டது
வளர்ந்தது நல்ல நாளில்!
ஊர் கூட ஓர் அன்னை உதவினாள் மீண்டும்
உயிர்த்தது துர்க்கை நாமம்!
உயர்ந்தது கோபுரம் விரிந்தன வீதிகள்
ஒளிர்ந்தது சைவ வாழ்வும்!
சீர்கொண்ட தெல்லியூர் துர்க்கையின் திருவிழா
சிறக்க இவ் உலகு வாழ்த்தும்!
தேவியின் பேரருள் சேய்களாம் எங்களைச்
சிதையாமல் காக்க வேண்டும்!
(தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய உற்சவக் கவிதை)