போய்க் கொண்டிருக்கின்றோம்:
போகும் திசையறியாது
போய்க் கொண்டிருக்கின்றோம்:
மனவழியில் கால்போகப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
வாழ்வில் எப் பிடிப்புமற்றுப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
எதும்பற்றி கவலையற்றுப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
எதையும் பொறுப்பெடாது
போய்க் கொண்டிருக்கின்றோம்:
போகுமிடம் புரியாது
போய்க் கொண்டிருக்கின்றோம்:
புகழ் பெருமை கைவிட்டுப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
அனைவரொடும் பகை வளர்த்துப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
பழிதுடைக்கும் வழிமறந்து
போய்க் கொண்டிருக்கின்றோம்:
எதிர்காலம் தெரியாது
போய்க் கொண்டிருக்கின்றோம்:
நாளை எங்கள் மொழி கலையை
மீட்டு அடையாளம் காத்து எமக்கெதையும்
சேர்க்க நினையாமல்…
சிந்தை தெளியாமல்…
ஆண்ட மரபுரிமை அழியத் தடுக்காமல்…
மானத்தைக் காக்க மனசிலாமல்…
‘பொருளற்றுப்’
போய்க் கொண்டிருக்கின்றோம்:
இலட்சியம், கனா, தூர–
நோக்கென்று ஏதுமற்று
அன்றைய பொழுது போனால்
போதுமென்று:
வாழ்வின், பிறப்பின், பொருளினர்த்தம்
தேறாது…
எம்மால் இப்புவிக்கு ஆகவுள்ளது
ஏதென்று விளங்காது…
எதையும் சட்டை செய்யாது…
நாளைவரும் தலைமுறைக்காய் நன்மையெதும் நாட்டாது…
ஊர்வளத்தைக் காப்பதற்கோ,
உரிமைகளை மீட்பதற்கோ,
காணி நிலங்கள் கருகாமல் பார்ப்பதற்கோ,
யாதேதும் செய்யாது…
கடமையை நினையாது…
யாரும் துணைக்குவரா யதார்த்தம் அறியாது…
காலத்தின் பெறுமதியைக் கருதாது…
என்னாகப்
போகின்றோம் புரியாது…
சேராமல் துண்டுபட்டுப்
போய்க்கொண் டிருக்கிறோம்….உயிர்
போய்க் கொண்டிருக்கின்றோம்!