பிறவி

கடலில் விழுகிறது மழையின் துளியிலொன்று!
கடலோடு ஒப்பிடையில்
மழைத்துளி மிகச்சிறிது!
கடலில் அதுவிழுந்தால் கடலினிலே மாற்றமேது?
கடலின் அளவில், சுவையில்,
அதன் நிறத்தில்,
கடலின் குணத்தில் தாக்கமது செய்யாது!
கடலில் கலந்தால்…
தனித்துவத்தைத் தானிழந்து,
கடலின் நிறம் பருமன் சுவை குணமும் தானடைந்து
கடலாகும் துளி:
துளியாய் வாழ அதால் ஏலாது!
‘இரண்டறக் கலத்தலில்லை’ இது:
வீழ்ந்த கடலோடு
‘தானறக் கலத்தல்’…அதால்
தனது இயல்புகளை
காக்க அதால் ஏலாது…தானும் கடலாகிப்
போகும்…
எவராலும் இதைத்தடுக்க முடியாது!
ஓர்நாளில் வெப்பம் உருக்கி
கடலிலிருந்து
வேறாக்கும் ஆவி வடிவிலிதை
அதுதான் முன்
வீழ்ந்த துளியா?
விளக்க யாரும் கிடையாது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply