‘தமிழ்மாறன்’ அவனின் தவப்பெயர்.
பெயர்க்கேற்ப
‘தமிழ்-மாறன்’ தானவனாம்…
தமிழ்நிலத்தைக் காதலித்தோன்.
அமிழ்தை விடஇனியன்.
அகமோ இளகியவன்.
அணுக்கமான அன்பன்.
பண்பால் அகம்கவர்ந்தோன்.
அனைத்துக் கலைவகையும் அறிய…
ஏங்கிய ஆர்வன்.
உணர்வைப் புகைப்படமாய்ச்
சித்திரமாய் மாற்றியவன்.
மருத்துவம்…மண்ணுக்கும் மக்களுக்கும்
புரியஏங்கி
‘உயிரியலை’ என்னிடத்தில்
ஒருதவமாய்க் கற்றமகன்.
முதற்தடவை பெறுபேறு முறைக்க
மனம்உடைந்தும்
மருத்துவம்…மண்ணுக்கும் மக்களுக்கும்
புரியஏங்கும்
உறுதியுடன்
‘எம்மண்ணின் வைத்தியனாய்’
இனிவருவேன்
எனப்போனான்…
யுத்தப் பொறி புகைந்திருந்த ஓர்நாள்!
ஈரைந்து ஆண்டின்பின் இன்று
அவன் தம்பியினை
நேரினிலே கண்டேன்:
குசலம் விசாரித்துப்
போகையிலே கேட்டேன்… “புதிதாய்த் தகவலுண்டா?”
மோனித்து இருண்ட முகத்தில்
சலனமற்று
“இல்லை” என்றான் தம்பி!
என் இனிய தமிழ்மாறா…
“இல்லைதானா நீ”
இதயம் வலிக்குதடா உனைத்தேடி!