மேய்ப்பனல்ல

மேய்ப்பர்கள் மேற்பார்வை யாளராக இல்லாமல்
மேய்ப்பர்கள் எல்லோரும்
வேட்டையர்களாக இன்று
மாறிக்கொண் டிருக்கின்ற வரலாறு நீள்வதனால்
மேய்ப்பனாக நானெனையே
எண்ண விரும்பவில்லை!
யானோர் திசைகாட்டி,
யானோர் உபாத்தியாயன்,
யானோர் சேவகன்,
யானோர் உயிர்த்தோழன்,
யானோர் மனிதன், யானோர் மனிதநேயன்,
ஆக இருக்கமட்டும் விரும்புகிறேனே அன்றி…
மேய்ப்பன் யான் என்றோ,
ஆபத்பாந்தவன் என்றோ,
யானோர் அனாத இரட்சகன் எனத்தானோ
என்றும் உரைத்ததில்லை… இதயத்தாற் செப்புகிறேன்!
தாமுமோர் மனிதர் எனமறந்து
மேய்ப்பவர்கள்
ஆகத் துடிப்பவரே அயலினிலே எங்குமுள்ளார்!
மேய்த்துத்தம் ஆதிக்கம் நிலைநாட்டிச்
சொற்கேளா
ஆடுமாட்டை மந்தைகளை
அடக்கிவேட்டை யாடித்தம்
ஆற்றல் நிரூபிக்க ஆயிரம்பேர் முயல்கின்றார்!
மேய்ப்பர்கள் வேட்டையராய்
மாறி இருந்தாற்தான்
வாகைசூட முடியுமென்ற
மனப்பாங்கு ஓங்கியதால்
மேய்ப்பர்கள்: ஏனையோரை வேட்டையாடத்
தொழில்நுட்பம்
நாளும் பயின்று நமைஏய்க்கப் பார்க்கின்றார்!
வேட்டையராய் மாறி
வேட்டைப்பல் முளைத்தபின்பும்
ஆபத்பாந்தவர் தாங்கள்…,
அனாத இரட்சகர் தாங்கள்…,
என்று நடிப்போரும் வென்றுவாகை சூடுகிறார்!
யாரெவரும் எப்படியும் இருக்கட்டும்
அடபோடா
யாரெவரும் எப்படியும் பிழைக்கட்டும்
யானென்றும்
மேய்ப்பனாக வாழ விரும்பவில்லை!
மானுடரை
மந்தைகளாய் மேய்ப்பதிலே உடன்பாடு
எனக்கில்லை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply