பதிலறிந்த கடல்

கேள்வி…துளித்துளியாய் வீழ்ந்து
பெருக்கெடுத்து
வாரடித்தெம் ஒழுங்கைகளால்
ஓடுகிற வெள்ளமாகி
காட்டாறாய்ப் பொங்கி களனி வெளிகள் ஊடு
பாய்ந்து எமைச்சுற்றிப் படிந்துளன!
நான்குபுற
ஆழிகளுள் கணங்கணமும் சங்கமித்துக் கொண்டுளன!
அந்தக் கடலறியும் கேள்விகளின் முழுப்பதிலும்.
அந்தக் கடலறியும் கேள்விகளின் ஆழநீளம்.
நாமோ வினாக்களுக்கு
முழுதாய் விடைதெரியா
மாணவராய்…இந்த விடைசரியாய் இருக்குமென்று
ஒன்றைத் தெரிவுசெய்து
அதேஉண்மை என்கின்றோம்!
எங்களிடை உள்ள கேள்விஒன்றே ஆனபோதும்
ஒவ்வொருவரும் ஒவ்வோர் பதிலை
முடிவுசெய்து
அப்பதிலே உண்மையென்று அடிபிடிப் படுகின்றோம்!
உண்மைப் பதில்..அந்த
உண்மைக்குத் தான்…வெளிச்சம்.
உண்மைப் பதிலை உணர்ந்தோர்
தெரிந்தோர்..இம்
மண்ணில் இருந்திடலாம் மறுப்பில்லை எங்களுக்கும்!
கேள்வி துளித்துளியாய் வீழந்து
பெருக்கெடுத்து
ஓடுகிற காட்டாற்றின் கரையோரம் கால்நனைத்து
அதன்அழகைப் பார்த்து,
அதுகலக்கும் கடல்பார்த்து
இன்றும் அலைகின்றோம் எங்களுக்கு எதுமிச்சம்?
உண்மைப் பதில்அந்த உண்மைக்குத்தான்
வெளிச்சம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply