மறந்துபோன ஒப்பாரி

இரவு முழுவதும் ஓயவில்லை… மழையினது
புறுபுறுப்பும்
அதனின் புலம்பல் அழுகையதும்.
நீண்ட பலநாளாய்
நினைத்துவைத்த அனைத்தையும்
வேண்டும் வரைகொட்டித் தீர்ப்பதென
விடியுமட்டும்
ஒப்பாரி சொல்லிற்று ஓயாமல்:
அதன்அழுகை
ஒரேசுதியில் தொடர்ந்தென் செவியைத் துளைக்க…வந்த
இரைச்சல்…,
அது சொல்லச் சொல்லி அழுதிருந்த
ஒப்பாரி…,
இவைகளால் உறக்கம் கலைந்தெழுந்தேன்!
மழையினது ஓலம் எமதூரின் குடுகுடுத்த
கிழவிகளது ஓயாப்
புலம்பலினைப் போலிருக்கே
எனநினைத்தேன்:
இன்றைக் கிழவிகளும் மறந்துபோன
ஒப்பாரி முறையை
எமக்கு நினைப்பூட்டத்
தானோ மழைமுயன்று பார்க்குதென
எண்ணுகையில்
இப்போ விடிந்தபின்னும்
எஞ்சிநிற்கும் வெள்ளம்…அக்
கிழவிகளின் கண்ணீராய்
இறந்தகால விம்பத்தை
தன்னில் சுமந்து கிடப்பதனைக் காண்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply