பாவக்கரம்

இரத்தக் கறைபடிந்த கையைநான் பார்க்கின்றேன்…
இரத்தம் கருஞ்சிவப்பு இரத்தந்தான்
பீறிட்டுக்
கையிற் தெறித்துச் சுடுகிறது அந்திவானாய்!
இரத்தத்தில் உயிரினது சூடும்
அதன்வாசமதும்
குறையா திருப்பதனை என்கை உணர்கையிலே
குருதித் துளியைத் துடைத்து
மாயமாயென்
குருதியை உறுஞ்சிக் கொழுத்திப்போ சம்பலாகிக்
கிடக்கும் நுளம்பினை
மன்னிக்கும் மனசற்று:
இரக்கம் சிறிதுமற்று:
என்னதான் நுளம்பினிடம்
நியாயங்கள் இருந்தாலும் அவற்றை மறுதலித்து
என்னைக் கடித்து
எனது அனுமதி பெறாது
என்இரத்தம் உறுஞ்சி தன்பசி தணித்தது ‘மா-
குற்றம் குற்றமே’
என்று உறுதி கொண்டு
இரத்தக் கறைபடிந்த கையைக் கழுவுகிறேன்!
‘பாவக் கரமிதுவோ’
என்றுமனங் கேட்டாலும்
என்னுடலுக் கேற்பட்ட தீங்கைப்
பழிவாங்கிக்
கொண்டேன் என்றெண்ணுகையில்
புனிதக்கை என்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply